புதன், மார்ச் 08, 2017

புதுக் கவிதை ..கரைக்கு வந்த
குட்டி அலைகளை
மிதித்து விளையாடியது
குழந்தை
தாயின் கையைப் பிடித்தபடி

திரும்பிச் சென்ற
குட்டி அலைகள்
அழைத்து வந்தன
' அம்மா ' அலையை

எல்லோருமாக
கடலுக்குள்
மூழ்கி விளையாட ..

ஹைக்கூ ..

நனைந்த சேலையில்
நிர்வாண கோலத்துடன்
சாயம் கரைந்த பூக்கள் !

குறும்பா ..கண்ணுக்குள்ளே கிடப்பவளே ராசாத்தி
கன்னத்திலே குத்துதென்றேன் மூக்குத்தி

கனலுகின்ற வேளையிலுங்
கழற்றிவைத்தாள் மின்னலெனத்

தன்னந்தனி யாகியதப் போர்க்கத்தி !

குறள் வெண்பா ...( 1 )

பட்டும் படாதுதபோல் பாரா திருப்பார்க்கே
எட்டாத்தூ ரத்தே இரு !


( 2 )

இருந்தாலும் ஈயார் இரக்க மிலாதார்
மருந்துக் கெனஅழிப்பார் மாய்ந்து !


( 3 )

வீணே அலையாது வீம்பி லுறங்காமல்
ஊனுக்கே னும்நீ உழை !

வேதனையில் ....நதியின் ஓரம் நடக்கையிலே
நாணும் நாணல் காணுகையில்
விதியா லென்னை இழந்தவளின்
வெட்கம் என்னில் சிலிர்க்கிறது !

புதிதாய் செல்வச் செழிப்பினிலே
புகுந்தோர்க் களிப்பைக் காணுகையில்
எதிரும் புதிரும் எனக்குள்ளே
ஏளனச் சிரிப்பே வருகிறது !

உதிக்குங் காலைக் கதிரவனின்
ஒளியில் உலகே சிரிக்கையிலே
எதிர்க்கும் ஏழை முகங்கண்டால்
ஏனோ மனதென் பதைக்கிறது !

முதியோ ரில்லத் திண்ணைகளில்
முனகல் ஒலிகள் கேட்கையிலே
வதியும் பிள்ளைத் தொல்லைதரும்
வேதனை காதினைச் சுடுகிறது !