புதன், மார்ச் 08, 2017

புதுக் கவிதை ..



கரைக்கு வந்த
குட்டி அலைகளை
மிதித்து விளையாடியது
குழந்தை
தாயின் கையைப் பிடித்தபடி

திரும்பிச் சென்ற
குட்டி அலைகள்
அழைத்து வந்தன
' அம்மா ' அலையை

எல்லோருமாக
கடலுக்குள்
மூழ்கி விளையாட ..

ஹைக்கூ ..

நனைந்த சேலையில்
நிர்வாண கோலத்துடன்
சாயம் கரைந்த பூக்கள் !

குறும்பா ..



கண்ணுக்குள்ளே கிடப்பவளே ராசாத்தி
கன்னத்திலே குத்துதென்றேன் மூக்குத்தி

கனலுகின்ற வேளையிலுங்
கழற்றிவைத்தாள் மின்னலெனத்

தன்னந்தனி யாகியதப் போர்க்கத்தி !

குறள் வெண்பா ...



( 1 )

பட்டும் படாதுதபோல் பாரா திருப்பார்க்கே
எட்டாத்தூ ரத்தே இரு !


( 2 )

இருந்தாலும் ஈயார் இரக்க மிலாதார்
மருந்துக் கெனஅழிப்பார் மாய்ந்து !


( 3 )

வீணே அலையாது வீம்பி லுறங்காமல்
ஊனுக்கே னும்நீ உழை !

வேதனையில் ....



நதியின் ஓரம் நடக்கையிலே
நாணும் நாணல் காணுகையில்
விதியா லென்னை இழந்தவளின்
வெட்கம் என்னில் சிலிர்க்கிறது !

புதிதாய் செல்வச் செழிப்பினிலே
புகுந்தோர்க் களிப்பைக் காணுகையில்
எதிரும் புதிரும் எனக்குள்ளே
ஏளனச் சிரிப்பே வருகிறது !

உதிக்குங் காலைக் கதிரவனின்
ஒளியில் உலகே சிரிக்கையிலே
எதிர்க்கும் ஏழை முகங்கண்டால்
ஏனோ மனதென் பதைக்கிறது !

முதியோ ரில்லத் திண்ணைகளில்
முனகல் ஒலிகள் கேட்கையிலே
வதியும் பிள்ளைத் தொல்லைதரும்
வேதனை காதினைச் சுடுகிறது !

வெள்ளி, மார்ச் 03, 2017

விருத்தம் ...



ஆகாயம் பூமியெங்கும் காற்று அலையுது
அன்றிலெலாம் பனைமடலில் கூடு கட்டுது
வாகாக வரும்மேகம் களைந்து ஆடுது
வருமழைக்குத் தோதாக கான மிசைக்குது
ஊர்கோல மாகக்கிளி உயரப் பறக்குது
ஒன்றுக்கொன்று உறவாடிப் பாடி மகிழுது
வேரறுந்த மனிதமனம் உறங்கிக் கிடக்குது
வேற்றுமையில் நின்றுமாளத் தருணம் பார்க்குது

பூக்களெலாம் புன்முறுவல் பூத்து நிற்குது
பொல்லாத மனிதமுகம் பொரிந்து கருகுது
ஏக்கங்கள் குடிசைகளில் எழுந்து நடக்குது
ஏளனங்கள் கைபிடித்து நடந்து செல்லுது
தூக்கத்தில் ஆரறிவோ துவண்டு கிடக்குது
துரத்திவருந் தொல்லைகளோ தலையி லேறுது
மூர்க்கத்தில் வருந்துன்பம் முந்திக் கொள்ளுது
முடிவில்லாச் சிக்கலிலே மூக்கை நுழைக்குது !

தேட்டத்தில் ஏழைகளின் கைகள் நீளுது
தெரியாதார் போல்சிலரின் மனமும் போகுது
கூட்டத்தில் கூப்பாட்டின் சிரிப்புக் கேட்குது
கொள்கையிலா தலைவர்களின் கைக ளோங்குது
காப்பாற்ற ஆருமின்றி ஏழ்மை சிணுங்குது
கண்டுநிதம் இயற்கைவளக் கண்கள் சிவக்குது
தாள்ப்பாளைப் போட்டுவிட்டா லென்ன என்பதை
தள்ளிநின்று தரும்வளங்கள் அங்க லாய்க்குது !

வேதனைகள் ...



வானிலோடும் வெண்ணிலவை யாரழைத்தது - அது
வேதனையால் ஏனதனின் முகம் மறைத்தது
'தேனிலவு ' என்றழைத்து மாந்தர்களிப்பதால் - அது
தன்பெயரை தரக்குறைவு என்று நினைத்ததோ !

தென்றலதை தொட்டுப்பார்க்க யார்முனைந்தது - அது
தரித்திடாமல் அங்குமிங்கும் அலைந்து ஓடுது
கண்கலங்கி மேனியெங்கும் பயந்து உரசுது - ஏதோ
கவலையிலே மனிதரென்றால் அஞ்சி யொடுங்குது !

கடல்நீரில் கைநனைத்து கலகம் செய்ததார் - அது
கரைபுரளும் அலைகளிடம் சொல்லி யழுதது
அடங்கிவரும் அலைகள்கூட சீற்றங்கொள்ளுது - தன்
ஆத்திரத்தை அள்ளிவீச தருணம் பார்க்குது !

வாடுகின்ற உள்ளங்களை நீ மறப்பதால் - உனை
வாழவைக்கும் இதயங்கூட கோபங் கொள்ளுது
ஆடுகின்ற ஆட்டமெல்லாம் காணுமிதயமும் - அது
ஓடுகின்ற செயல்நிறுத்தி உன்னைக் கொல்லுது !!

பொன்னே பிரதானம் ...



மண்ணில் உறங்கும் வளங்களிலே
மாண்புறப் பிறப்பது பொன்னாகும் - நம்
மங்கையர் தம்மவர் மனங்களிலே
மாறா திருப்பதும் பொன்னாகும்

கண்ணியம் நிறைந்தே காலமெல்லாம்
கண்ணெதிர் கிடப்பதும் பொன்னாகும் - நட்
புண்ணியம் நிறைந்தே பிறப்பதனால்
பெட்டகம் வாழ்வதும் பொன்னாகும்

துணிமணி கோடியே இருந்தாலும்
அணிந்திட மிளிர்வது பொன்னாகும் - நல்
அணிகல மாசைகள் அரும்புவிட
அரிவையர் கனவிலும் பொன்னாகும்

கனிதரும் மரங்களில் அணில்அலையும்
வனிதையர் மனங்களில் பொன்அலையும் - இந்
நனினியில் வாழும் நலிவுற்றோர்
நாவினில் நடப்பதும் பொன்னாகும்

மங்கள மென்றால் மனைகளிலே
மமதையில் கிடப்பதும் பொன்னாகும் - அது
அங்கம் கிடந்தே உறங்குவதால்
தங்கமென் ராறோ பெயரிட்டார்

புதுக் கவிதை ...



மின்சார வெளிச்சத்தில்
கண்ணை மூடிக்கொண்டது
விளக்கின் ஒளி

கவனம் இல்லையேல்
கரணம்தான்
கிளைகள் சொல்கிறது
இலைகளுக்கு

சிக்கனம்
சட்டை போட்டுக்கொண்டது
மாதக் கடைசியில்

செத்துக் கிடந்தது
தெரு நாய்
நடுத்தெருவில்
சொந்தங்களை தொலைத்துவிட்டு

முந்தானை மட்டும்
பார்த்துப் பார்த்தே
மூர்ச்சை இழந்தது ஆசைகள்

தூங்கித் தூங்கியே
கவலைக் கிடமாகியது
வேலை இழந்த அம்மிக்கல்லு

கடித்து விடாதே
அலறியது
சோற்றில் கிடந்த 'கல்'

எச்சில் இலைகளுக்கு
சொந்தம் கொண்டாடியது
காகங்கள்

மனிதனுக்கும்
பிடித்து விட்டதாம்
"மதம் "
தெரியாதவர்களாய்
சொல்லிக் கொள்கிறார்கள்
'மனிதர்கள் '

நாய் ...



தொல்லைகள் தாங்கியும் வாழ்ந்திடலாம்
துன்பமு மேற்றுக் கிடந்திடலாம்
கல்லடி மட்டும் மில்லையெனில்
கவலை யிலாமலே வாழ்ந்திடலாம் !

தெருவினி லெங்குந் திரிந்திடலாம்
தேம்பியே அழுதும் புரண்டிடலாம்
நெருடலில் காண்போர் நினைக்கையிலே
நிம்மதி யறுந்தே வீழ்கிறதே !

எல்லை யிலாமலே அலைந்திடலாம்
ஏளனப் பட்டுங் கிடந்திடலாம்
'சொல்லடி' பட்டே வாழ்வதிலும்
சொல்லிக்கொ ளாமலே மாள்வதுமேல் !

சிறப்புத் திங்கள் ..



எல்லாப் புகழும் நிறைந்தோனே
ஏற்றம் பெற்றோ னுனையேநாம்
அல்லும் பகலும் தொழுகின்றோம்
ஆற்றல் பெற்றோ னுனைநாடி !

உள்ளும் புறமும் அறிந்தவனே
ஓங்கும் மறையை யளித்தவனே
சொல்லால் செயலால் தினந்தோறும்
சொர்க்கம் வேண்டித் துதிக்கின்றோம் !

இன்னா ரிவர்தா னென்றின்றி
எல்லார்க் கும்முன் அருளாலே
ஒண்ணா திருப்பார் அவர்க்கும்தான்
ஓங்கி வழங்கும் வல்லோனே !

எங்கும் நிறைந்தோன் உனதாற்றல்
எண்ணிப் புகழ வருகிறதே
திங்கள் ரமழான் இகமெங்கும்
தித்திப் புடனே உனைப்போற்ற !

நன்றே அறங்கள் நாம்செய்ய
நாயன் தந்தா னித்திங்கள்
ஒன்றிப் புரிவோம் நல்லறங்கள்
ஓதிக் களிப்போம் அருள்மறையை !

எண்ணிப் புகழ்வோ மிறையோனை
ஏற்றம் பெறவே எம்வாழ்வில்
கண்ணீர் சிந்திக் கையேந்தி
கனிவாய்க் கேட்போ மவனிடமே !

இரப்பார்க் கீயும் கடமையினை
இனிதே புரிவோ மின்முகமாய்
விரதம் மிருந்தே நற்கிரியை
விருப்பம் போல நாம்செய்தே !

பிறப்பால் சிறந்தோர் நமக்காக
பிறந்த மாதம் ரமழானின்
சிறப்பை யறிந்தே சிந்தித்தே
செயலால் காட்டி மகிழ்வோமே !

யார் தலைவன் ?



கூழ்வேண்டிக் கெஞ்சுகின்ற நிலையே வந்தும்
குனியாது வலையாது நிமிர்ந்தே நிற்பான்
சீழ்ஒழுகி சிதைந்திட்ட போழ்தும் தேகம்
சிதையாத உளத்தோடு என்றும் வாழ்வான்

வீழ்கின்ற நிலைவந்தும் விடிவைத் தேடி
வீர்கொண்டு நமக்குள்ளே நடந்தே செல்வான்
கீழ்மக்கள் மேன்மக்கள் என்றே யன்றி
கிடைக்கின்ற வாய்ப்பெல்லாம் அளிப்பான் அள்ளி

பதைக்கின்ற நெஞ்சத்தைப் பகுத்தே வைத்துப்
பகிடிக்கும் தன்மானம் இழக்கச் செய்யான்
வதைக்கின்ற துன்பங்கள் வந்தா லென்ன
வளையாமல் அஞ்சாமல் நிமிர்ந்தே நிற்பான்

அதிகாரம் அவன்மேலே படரக் கண்டும்
அவனேநான் மறவனெனத் துணிந்தே சொல்வான்
எதிர்ப்புக்கும் அப்பாலே எழுந்தே நின்று
எத்திக்கும் தன்னார்வத் தொண்டே செய்வான்

தன்மேலே முத்துக்கள் சொரிந்தா லென்ன
தகிக்கின்ற எதிர்ப்புக்கள் சூழ்ந்தா லென்ன

தன்ஆத்மா தன்னின்பம் தொண்டே யென்று
தளராமல் நிற்போனே நம்மில் தலைவன்!!