வெள்ளி, செப்டம்பர் 22, 2017

குறும்பா;


தினந்தோறும் குடிப்பவன்தான் முத்து
சினமேறத் தினம்பிடிக்கும் பித்து
ராத்திரியில் வரஉலாவி
ராசாத்தி அவன்மனைவி

சினத்தோடு கேட்கவிழுங் குத்து !

விருத்தம்

கண்ணோடு கண்காணும் காத லெல்லாம்
கையோடு கைகோர்த்து இணைவ தில்லை
பண்செய்து பெயர்பெற்ற மாந்தர் நம்மில்
புண்ணிதய மில்லாமல் மரித்த தில்லை
விண்ணோடு மண்ணெங்கும் வீசுங் காற்று
வீணாக ஓய்வென்று படுத்த தில்லை
மண்ணோடு மண்சேர்ந்த உறவி னரை
மண்வாழும் உறவுகளோ நினைப்ப தில்லை

வண்டோடு அணைகின்ற பூக்க ளொன்றும்
ஒருபோதும் பூவின்மணம் இழப்ப தில்லை
கண்கூடாய்க் கண்ணெதிரே கண்ட உண்மை
கசப்பென்று வாய்ஏனோ திறப்ப தில்லை
அதிகாரங் கொண்டிங்கு அரசாள் வோரும்
அல்லல்படும் மக்கள்நிலை பார்ப்ப தில்லை
விதியென்று வாழ்வினையே நொந்தார் தம்மில்
விடியல்களில் புன்சிரிப்பைக் கண்ட தில்லை


சதிகாரக் கூட்டங்கள் போடும் ஆட்டம்
அதிகார முள்ளோருங் காண்ப தில்லை
நதியெனவே பிறப்பெடுக்கும் நலிந்தார் கண்டு
நமக்குள்ளே நலமளிக்கப் பிறந்தா ரில்லை !

ஹைக்கூ கவிதைகள்


திருட்டுத் தேன்
சுத்தமில்லை வாங்காதீர் 
கூச்சலிட்டன தேனீக்கள் !

     **

அமோக விளைச்சல்
அறுவடையாகியும் வாங்கித்தரவில்லை
பழைய சட்டையுடன் நெகிழி !

  **
பதவியிழந்த மந்திரி
இன்னும் சிரித்தபடியே நிற்கிறார்
விளம்பரத் தட்டியில் !

  **
பறக்க முடியவில்லை
கோடுகளுக்குள் தடுமாறியது
குழந்தை வரைந்த காகம் !

  **
அடிக்கடி இடமாற்றம்
இம்சை தாங்க முடியவில்லை
கண்திறவாத பூனைக்குட்டி

  **!
காற்று விற்காத கடையில்
பலூன் வாங்க வேண்டாம்
அடம்பிடித்த சிறுமி !

  **

பழைய அடையாள அட்டைதான்
உப்பி இருந்தது
தாத்தாவின் முகம் !

குறும்பா




மடித்துவைத்த துணிமணிகள் கூட்டி
படித்துறைக்குக் குளிக்கவந்தாள் பாட்டி
எடுத்துவைத்த புடைவையின்மேல்
படுத்திருந்த புடையனதால்
துடிதுடித்துப் போனாள்மூ தாட்டி!




-    அஷ்ஃபா அஷ்ரஃப் அலி -