புதன், மார்ச் 30, 2016

சிந்துப்பா ( ஆனந்தக் களிப்பு )

நாளாந்தம் நன்றாகத் தேடி - அதை
நாசத்தி லன்றாடங் கள்ளுண்டே ஆடிப்
பாலாறு பாய்கின்ற தென்று - பாவி
பாயின்றிக் காய்கின்றான் பாதையி லின்று  !

குறுங் கவிதை


மழையில்
நனைந்து விளையாடிய
தம்பியை
உள்ளே இழுத்து
தாழிட்டாள் அம்மா
பிடித்துவிடும் சளி என்று

நனையாமலேயே
பிடித்து விட்டது சளி
அவன்
அழுத அழுகையில் !

இயல்தரவினைக் கொச்சகக் கலிப்பா !

பற்றைப் படர்ந்திருக்கப் பால்நிலவும் பாய்விரிக்க
ஒற்றையடிப் பாதையிலே ஓரிரவு நாமிருவர்
ஒற்றையிலே நின்றதையே ஒட்டநின்று பார்த்தவரார்
சற்றே கசிந்துவிடச் சாதிசனங் கண்திறக்க
உற்றா ரெனைக்கேட்க ஊருசன மும்சிரிக்க
சொற்கலக மாகியதே  சொல்லாத சொல்லுமெழ
முற்று மிழந்தேனே மூச்செல்லா முன்னினைவே
பற்றோ டிருப்பவளைப் பாராயோ என்னுயிரே !

ஞாயிறு, மார்ச் 27, 2016

ஒரு விகற்ப நேரிசை வெண்பா !


உள்ளத்தை ஈந்துனக்( கு ) ஓயா துளைச்சலடி
முள்ளாகத் தைக்கின்றாய் ! மோதுகிறாய் - உள்ளத்தில்
கள்ளத்தி லாருண்டோ காதோடு  காதாய்ச்சொல்

கள்ளக்கோ லம்வேண்டாம் கேடு  !

வெண்பா !



கண்ணாடி முன்னின்று கண்ணுக் குமைதீட்டி
வண்ணக் கிளிபோல வந்தால்நீ  - என்னுடனே
அத்தானின் தொப்பையினால் ஆகாப் பொருத்தமடி

முத்தேநீ ! போநடந்து முன் !

நட்புகள் !



வஞ்சிப்போர் கொண்டாடும் நட்பும்  உண்டு
நஞ்சாகிப் போனபல நட்பும்  உண்டு
கொஞ்சலிலே குளிர்காயும் நட்பும் உண்டு
மஞ்சம் குளித்தணைந்த நட்பும் உண்டு
வெஞ்சினத்தால் வெந்தவிழ்ந்த நட்பும் உண்டு
நெருஞ்சியெனக் குத்துகின்ற நட்பும் உண்டு
அஞ்சலித்துப் போற்றுகின்ற நட்பும் உண்டு
அஞ்சரினா லழிந்தொழிந்த நட்பும் உண்டு
சஞ்சலத்தி லுயிர்துறந்த  நட்பும் உண்டு
நெஞ்சகத்தைத் தாலாட்டும் நட்பும் உண்டு  !

வெண்பா


பூக்காரி யின்மகளைப் பூங்காவில் கண்டவேளைப்
பூக்காது போனாளேன் புன்னகையை - தாக்கந்தான்
ஆத்தா ளருகென்றோ அன்றி  அவளென்னை
மூத்தோ னெனவறிந்தோ கேள்  !

கட்டளைக் களிப்பா !

                                       
           அரையடி : தேமா - கூவிளம் - கூவிளம் - கூவிளம் 



ஏற்றம் பெற்றவ ரென்கிறோம் நாளெலாம்
ஏனோ எம்மிடை இத்தனை இன்னலோ
போற்று முள்ளமும் பாங்குட னின்றியே
போற்றார் போலவே வாழ்கிறோ மெங்கிலும்
ஏற்றத் தாழ்வினை எத்தனை காலமாய்
என்றும் நம்மிடை கொண்டுமே வாழ்வது
மாற்ற மில்லையேல் மண்ணிலே நாமெலாம்
மாக்கள் போலவே வாழ்கிறோ முண்மையே !

சனி, மார்ச் 26, 2016

புதிர் வெண்பா


காலிருக்கும் கையில்லை கண்ணில்லை வீட்டினிலே 
காலமெலாம் நின்றிருக்கும் காவலன்யார் - காலிருந்தும் 
காலிமனை யானாலுங் காலடிமண் ஒட்டாதுக் 
காலாற லில்லாக் கதவு !

செவ்வாய், மார்ச் 22, 2016

வெண்பா

அன்னைக் குதவுதற்கோ ஆளாகிப்  போனபின்னே
தன்னைத் தரப்படுத்த ஒத்திகையோ - சின்னவள்தான்
சிற்றிடையில் செம்பணைத்துச் சின்னக் கரமசைத்துப்
பற்றோடு போகுமெழில் பார்  !

குறுங் கவிதை

என்னதான் சொன்னாலும்
திரும்பிப் போவதாக இல்லை
பின்னாலேயே வருகிறது
உன் கடைசி வார்த்தை 

அறுசீர் விருத்தம் !

விருந்தென மதுவை வார்த்து
... விளித்திடும் நட்பே வேண்டாம்
மருந்தெனச் சொன்னால் கூட
... மதுவினைத் தொடவே வேண்டாம்

அருந்திட ஆற்ற  லேற்றும்
... அகன்றிடுந் துன்ப மென்பார்
அருந்தியே ஆர்ப்ப ரித்தே
... ஆறுதல் சொல்லிக் கொள்வார்

வருந்தியே கண்ணீர்  சிந்தும்
... அருந்தியோர் சொல்வ தெல்லாம்
வருத்திடும் பிணிகள் சேர்த்து
... வாழ்வதில் சாதல் மேலாம் 

சனி, மார்ச் 19, 2016

ஹைக்கூ


எத்தனைமுறை  விரட்டினாலும்
உட்கார்ந்து செல்லத் தீராத ஆசை
ஆறாத புண்ணில் ஈ !

குறும்பா !

கல்லூரி  வாசலிலே  கூட்டம்
எல்லோரின் முகத்திலுமே வாட்டம்

  வந்திருந்த பெருபேற்றில்
  நொந்தவரே பலபேராம்

கல்லாமல் அலைந்ததனால் தேட்டம் !

வெண்கலிப்பா !

பெருநடையில் கவியெழுதிப்
பெருங்குரலா  லொலிக்காது
பொருள்செறிந்த கவிபாட
பெருகுமே புகழுலகில் 
கருகொண்டக் கவிதைகளாய்
கமழவே  நறுந்தமிழில்
தரும்பாடல் திகட்டாது தான் !

வெள்ளி, மார்ச் 18, 2016

குறுங்கவிதை !


நீ
இல்லாத தருணங்களில்
என்னோடு
பேசிக்கொண்டிருக்கிறது
உன் கவிதைகள்
அதே மெளனத்தில்  ....

குறும்பா !

தினந்தோறும் குடிப்பவன்தான்  முத்து
சினமேறத் தினம்பிடிக்கும் பித்து


   ராத்திரியில் வருபவனை
   ராசாத்தி அவள்மனைவி


சினத்தோடு கேட்கவிழும் குத்து  !

குறும்பா !

நேத்தோடு நாலுமுறைப் பேச
ஆத்தாவே அவள்மேல்தான் ஆச

  கள்ளியவள் வருவாள் பார்
  கிள்ளிவைத்த மல்லிகைப்பூ

கூத்தாடிக் கூந்தல்மணம் வீச !

வியாழன், மார்ச் 17, 2016

வெண்பா !

தங்கு தடையின்றித் தருவளம் யாவுமே
எங்கு மிடையூறாய் ஏனிது - பங்கமாய்
வாழும் மனிதரின் வாழ்க்கையும் மாறவே
மூழுதே அதுவென மொழி 

வஞ்சிப்பா !

தெருவோரமாய் இரப்போரையே
விருப்போடு நம் 
முகங்காணவே
பெரும்பாடுதான் படுகின்றவர்
ஒருநாள்சுமை ஒருவழிப்பட

காணும்

இரப்போரவரின் இன்னலைத் துடைத்து
நிரப்பம் மடைந்திட நிதமும்
இரக்கங் கொண்டே ஈவோ மவர்க்கே !

புதன், மார்ச் 16, 2016

வெண்பா


ஓவியத்துத் தேனடையில் ஓடுகின்ற தேனதனை
நாவினிக்கத் தேடுவதேன் நோவினையே - ஓவியத்தின்
பூக்கள் மனக்குமெனப் பூரிக்குங் காதலதன்
தாக்கத்தை நெஞ்சில் தவிர்

வெண்பா

பச்சையிளம் பாலகியுன் பால்முகத்தி லட்சணமாய்
அச்சமிலாப் புன்னகைதா னார்ப்பரிக்க - நிச்சயமாய்
ஏழ்மை பொருட்டல்ல என்றோதும் பாங்கதனில்
வாழ்வாய்நீ வாழ்வாங்கு வாழ்

கலிவிருத்தம்

நீரசையும் குளத்தினிலே நின்ற வாறு
..நினைவிழந்து நிற்பதுமேன் அல்லிப் பாவாய்
நாரசையாப் பொழுதினிலும் சிரிக்கும் முன்னை
.. நோகடித்தா ராரென்று சொல்வா யல்லி


ஊரறியக் கதிரவனும் உதிக்கும் பொழுதில்
.. உலகமெலாம் ஒளிருகின்ற வேளை தன்னில்
பேரறியாப் பிள்ளைபோல் பதுங்கிப் பின்னே
.. படபடத்து நிற்பதுமேன் பகிர்வா யல்லி



மாலைவரும் மதியாளின் மயக்கும் ஒளியில்
.. மலர்வதெனச் சொல்கின்றார் உண்மை என்ன
ஓலையுனக் கனுப்பினாளோ ஒற்றை வரியில்
.. ஒர்மனமாய் காதலுண்டோ சொல்வாய் அல்லி

செவ்வாய், மார்ச் 15, 2016

இரு விகற்ப நேரிசை வெண்பா


கன்னங்க றுத்தவள்தான் கட்டழகுக் காரியவள்
தன்னந் தனியே நின்றவளை - என்னருகே
அள்ளி யணைத்திடவா வென்றேன்பார் வந்தவளோ
எள்ளிநகை யாடினா  ளேன்

இரு விகற்ப நேரிசை வெண்பா

வாழ்வு சிறக்குமென்று வாழ்ந்தாலும் வயிறார
ஏழ்மை சிரிக்கிறதே ஏளனமாய் -
தாழ்வினிலே
நாளுங் கிடந்தாலும் நம்பிக் கைதருமிக்
கூழுக்
குழைப்பதொன்றே குறி 

இரு விகற்ப நேரிசை வெண்பா

பார்வை யொளிர்கையிலே பாராது  மாமறையை
சோர்வில் கிடப்போர்தாம்
சேர்ந்துணர - ஆர்வமுடன்
தானும் நிதந்தொழுது  தன்பார்வை குன்றியவர்
காணும் முறைதனைக் காண்

 

திங்கள், மார்ச் 14, 2016

மனித மனம் ?

ஆகாயம் பூமியெங்கும் காற்று  அலையுது
... அன்றிலெலாம்  பனைமடலில் கூடு கட்டுது
கார்கால மேகமெலாம் கலைந்து ஆடுது
... கசிந்துவரும் மழைக்குஅது கான மிசைக்குது
ஊர்கோல மாககிளி உயரப் பறக்குது
... ஒன்றுக்கொன் றுறவாடிப் பாடி மகிழுது
ஊதாரி மனிதமனம் உறங்கிக் கிடக்குது
... ஒற்றையிலே நின்றுவாழ தருணம் பார்க்குது !


பூக்களெலாம் புன்முறுவல் பூத்து நிற்குது
...  பொல்லாத மனிதமுகம் பொரிந்து கருகுது
ஏக்கங்கள் குடிசைகளில் எழுந்து நடக்குது
... ஏளனங்கள் கைபிடித்து நடந்து செல்லுது
தூக்கத்தில் ஆறறிவோ துவண்டு கிடக்குது
... துரத்திவரும் துன்பங்களோ தலையி லேறுது
மூர்க்கத்தில் வருந்துன்பம் பார்க்கத் தவறுது
... முடிவில்லா சிக்கலிலே பகைமை ஓங்குது
  !

ஒற்றிலா வெண்பா

நாளு முனையேநா நாடாத நாளிலையே
கேளு கிளியேநீ  கேடெதுவோ - மூளுதடி
வாழநீ  வாராயோ மாளுத லோயுறுதி
பால ரதியே பணி

ஒரு விகற்ப நேரிசை வெண்பா

நல்லா ரெவரோ நமக்கிடையே நானிலத்தில்
பொல்லா தவர்க்கேதான் பொற்காலம் - உள்ளாரும்
வல்லா ரவருமே வாழுகிறார் வாழ்வினிக்க
இல்லா தவர்க்கிழிவே இங்கு 

ஞாயிறு, மார்ச் 13, 2016

வெண்பா

கன்னி யிளமனதில்  காலூன்றி விட்டதனால்
பின்னி யெடுக்கின்றார் பெற்றவரும் - என்னுயிரே
துள்ளித் திரிகின்றே னுன்னினைவால் என்னைநீ
அள்ளியே சென்றிடுவாய் ஆங்கு 

வஞ்சித் தாழிசை


சுயநலம் முள்ளவர்
மயங்கிடப் பேசியே
இயங்குவார் தேர்தலில்
வியப்பிதே எங்கிலும்

உயர்நிலை கண்டவர்
துயர்தர அஞ்சிடார்
பயனிலா ஆட்சியே
பயக்குதே எங்கிலும்

நடைமுறை வாழ்விலே
கடைநிலை நம்மையே
குடைகிறா ரின்னமும்
இடைஞ்சலே எங்கிலும் 

வெண்பா .. ஆசானுக்கு !

கற்றநற் கல்வியினைக்  கற்றதுவே புண்ணியமாய்
மற்றோருக்கு மூட்டி மகிழ்கின்றார்  - கற்பிக்கும்
பேராசா னன்னவரைப் போற்றா திருப்பார்க்கு
வாராது வாழ்வில் வளம்  

வஞ்சி விருத்தம்

வேண்டு மெனக்கோர் வரமென்றே
வேண்டித் தொழுதே னிறையோனைச்
சீண்டும் வினவ லதுவென்றோ
ஈண்டெ னக்குத் தரவில்லை 

வெண்பா

ஆற்றாத் துயரத்தி லாழ்ந்தோரைக் காணுங்கால்
தேற்றா திருக்காதே தொல்லுலகில் - சீற்றமாய்
மாற்ற முனக்கீந்தால் மாயவனோ ! நெஞ்சாரத்
தேற்றவரு வாரில்லைத் தேர் 


சனி, மார்ச் 12, 2016

பொன்மொழி வெண்பா !

சுட்டுவிர லால்சுட்டச் சுட்டுமுனை  மற்றவிரல்
தொட்டுநீ வாழ்வதையே தொட்டுணர்த்து - இட்டமுடன்
மற்றவரில் வேண்டுமுன்னில் அற்றதைநீ நாடாதே
கற்றதுவோ கைம்மண் ணளவு !

வெண்பா

கண்களில்  பூத்தது  காதலோ  காமமோ
என்விழி  நோக்கினா ளேனென - எண்ணிநான்
நெஞ்ச மினிக்க  நெருங்கினே னன்னவள்
அஞ்சியே  நின்ற  அழகு !

மருட்பா ( செவியறிவுறுஉ )

துன்பத்தி லாழ்ந்தோரைத் தூற்றாது  தொய்விலா
இன்பத்தில் வாழ்வோரே ஈவீர்  இரப்பார்க்குப்
பாழும் வறுமையிலே பாடுபடு வோர்கண்டுத்
தாழுமவர்  வாழ்வொளிரத் தாழ்திறந்  தாலிங்கு
நிலையிலா  வாழ்விலே நிலையெனத்
தலைகாக் குமேயித் தருமமுஞ் செய்கவே !

புதிர் வெண்பா

வண்ணங் கறுத்திருப்பான் வாய்வளைந் துண்ணுழைவான்
கன்னக்கோல்  கண்டால் கலங்குவோன்யார்  -  நன்றெனவே
கன்ன  மிடாதபடிக்  காப்பவனா  மில்லத்தைக்
கன்னகங்  கண்டதிரும்  பூட்டு !

வெள்ளி, மார்ச் 11, 2016

வெண்பா !

பொன்னும் நகையும் பொருட்டல்ல கண்ணேவுன்
புன்னகையே போதுமடி பூமியிலே -  என்றவர்தான்
தன்நினை வின்றித் தவிக்கின்றா ரென்னெதிரே
என்நிலை காண்பவ  ரார்  !

சமநிலை மருட்பா ( கைக்கிளை )


                           சமநிலை மருட்பா
                            ( கைக்கிளை )

கன்னக் குழிதொடுத்தாள் கண்டு கதிகலங்கி
என்னைப் பறிகொடுத்தே ஏங்குகிறே னன்னவளே
வாழ்விலென் தாரமாய்  வந்திடேல்
மாழ்குவே னோவென  மனத்திலே கிலியே !

எண்சீர் விருத்தம் !

                       காய் -காய் -மா -தேமா


மாளையிளங்  கதிரொளியில்  கண்டே னந்த
  மங்கைமுகம் மலரத்தான் கண்ணில் லென்றன்
சோலைநிறைப்  பூக்களென மலர்ந்தே நெஞ்சில்
  சொப்பனத்தில் கூடஅவள்  சிரிப்பா ளென்னில்
மாளைவரும் வேளைதனில் மயக்கங்  கண்ணில்
  மங்கைமுகம் தான்காணத் துடிக்கும் நெஞ்சம்
பாலையவள் பார்த்திடவே பதறும் மெண்ணம்
  பாழ்மனதில் படுத்திருப்பாள் பாரா தென்னை


இனம்காணா துன்பத்தீ இதயந் தொட்டே
  இக்கணமும் எரிகிறதே எரிந்தே வெந்த
மனங்கட்குள் மொட்டவிழ்ந்த காதல் மாயை
  மனங்கொத்திச் செல்வதுவோ  ஒற்றைக் காதல்
அனல்சேர்ந்து விளையாடும் அன்பில் சிலரோ
  அலைமோதிச் சாகின்றா ரதுவே உண்மை
தினவெடுத்த நெஞ்சத்தின் கண்கள் கண்டே
  தினமென்னைக் கொல்லுகிறாள் தீயாய் வந்து 

நடுக்கம் எனக்குள் ...

கடுப்போ டிருக்கும் அப்பா  -  தேளின்
கொடுக்கா  யிருக்கும்  அம்மா
மிடுக்கில்  சிரிக்கும் அக்கா - வேலித்
தடுப்பா யிருக்கும் அண்ணா


தொடுத்த  காதல்  எனக்குள் -  ஓங்கி
ஒடுக்கம் காணும் நிலையில்
ஒடுங்கும் மென்றே  எண்ணி -  ஒரு
நடுக்கம் மெனக்குள்  தினமும் 

இரு விகற்ப நேரிசை வெண்பா !

 பள்ளி  கொளத்தூண்டும் பால்முகத்துக் காரிகையை
அள்ளிப்  பருகிடவே ஆவலுறும் - கள்ளியவள்
காந்த விழியினிலே கள்ளுண்டோ நானறியேன்
சாந்தமுகம் பேசுவதே சான்று 

எல்லோர்க்கும் ஆசை !

கண்கெட்டுக் கிடக்குதடா உலகம்  - காணும்
   களமெல்லாம் நடக்குதடா  கலகம்
கால்பட்ட இடமெல்லாம் குருதி - இனக்
   கோளாறு இருக்கும்வரை உறுதி
உள்ளோர்க்கு ஒன்றிங்கு சட்டம் - உயர்
   வில்லார்க்கு கிடைக்குதிங்கு பட்டம்
எல்லோர்க்கும் இரத்தநிறம் சிவப்பு - அதை
   எண்ணாதோர் மனதிலேனோ கசப்பு


கண்கெட்ட விலைவாசி உயர்வால் - மக்கள்
   கண்ணீரை அணைத்திங்கே அயர்வார்
புண்ணாகிப் போனோரும் உண்டு - தினம்
   புழுதிவாரிப் போட்டோரும் உண்டு
ஆகாது என்றாலும் தேகம் - தினம்
   போதாது என்றலறும் போகம்
வேகாது வாழ்வோர்க்கு மாசை - வெந்து
   வேக்காடு ஆனோர்க்கு மாசை
    

புதன், மார்ச் 09, 2016

இன்னிசை வெண்பா

நன்றேசெய் நானிலத்தில் நல்வாழ்வு வாழ்வதெனில்
அன்றே லமர்ந்துநீ ஆங்குறங்கு ! தன்னார்வத்
தொண்டாற்றுந் தொண்டர்க்குத் தொல்லையினைத் தாராமல்
ஒன்னா திருந்தே உழல் !
- அஷ்ஃபா அஷ்ரஃப் அலி -

புதிர் வெண்பா


கையிருக்கும் காலில்லை கைப்பிடி யில்லாமல்
பையோ டிருப்பவனார் பைங்கிளியே - மெய்யுடையார்
மேலங்கி போலணியும் மேலாடை யாம்சட்டை 
மேலாத்த லோடுஉம் மேல் !
- அஷ்ஃபா அஷ்ரஃப் அலி -