வெள்ளி, செப்டம்பர் 22, 2017

விருத்தம்

கண்ணோடு கண்காணும் காத லெல்லாம்
கையோடு கைகோர்த்து இணைவ தில்லை
பண்செய்து பெயர்பெற்ற மாந்தர் நம்மில்
புண்ணிதய மில்லாமல் மரித்த தில்லை
விண்ணோடு மண்ணெங்கும் வீசுங் காற்று
வீணாக ஓய்வென்று படுத்த தில்லை
மண்ணோடு மண்சேர்ந்த உறவி னரை
மண்வாழும் உறவுகளோ நினைப்ப தில்லை

வண்டோடு அணைகின்ற பூக்க ளொன்றும்
ஒருபோதும் பூவின்மணம் இழப்ப தில்லை
கண்கூடாய்க் கண்ணெதிரே கண்ட உண்மை
கசப்பென்று வாய்ஏனோ திறப்ப தில்லை
அதிகாரங் கொண்டிங்கு அரசாள் வோரும்
அல்லல்படும் மக்கள்நிலை பார்ப்ப தில்லை
விதியென்று வாழ்வினையே நொந்தார் தம்மில்
விடியல்களில் புன்சிரிப்பைக் கண்ட தில்லை


சதிகாரக் கூட்டங்கள் போடும் ஆட்டம்
அதிகார முள்ளோருங் காண்ப தில்லை
நதியெனவே பிறப்பெடுக்கும் நலிந்தார் கண்டு
நமக்குள்ளே நலமளிக்கப் பிறந்தா ரில்லை !

கருத்துகள் இல்லை: