ஞாயிறு, டிசம்பர் 04, 2011

என் இனியாள்


வான் வெளியில் தவழ்ந்து வரும் விண் மீனின்
வனப்பதனைக் கொண்ட தொரு மயிலாள்
தேனதனின் சுவையூட்டும் அதரங் கொண்ட
தேன் மதுரக் கலச மெந்தன் இனியாள்

கோல மயில் போலவளின் அழகும் மின்னும்
வேலனவன் படைப்பினிலே புதுமைப் பெண்ணாய்
காலமது போதாது இன்பங் கொள்ள
கண் மூடி துயில் கையிலும் அவளே முன்னே

கார் முகில் போல் கருங் கூந்தல் கலைந்திருக்கும்
நாருரித்த மரமதுபோல் பசுமை பொங்கும்
பார்தனிலே இவள் போல ஒருத்தி முன்னே
பார்வையிலே பட்டதில்லை உண்மை சொன்னால்

மான் விழியாள் பார்வயதோ மயங்க வைக்கும்
மருளுகின்ற விழிகளிலே நளினம் தோன்றும்
தேன் மொழியாள் பேச்சினிலே காமஞ் சொட்டும்
தெள்ளு தமிழ் நாவினிலே நடனம் ஆடும்

கள்ளியவள் கடைப் பார்வை கவர்ந்திழுக்கும்
அள்ளியவள் பொன் மேனி தழுவச் சொல்லும்
பள்ளியறைப் பாடமெல்லாம் எண்ணம் மூட்டி
கிள்ளி எந்தன் பால் மனதோ ஆவல் தூண்டும்

கருத்துகள் இல்லை: