வெள்ளி, பிப்ரவரி 07, 2014

விளக்கேற்ற வந்து விடு !!

ஆழ்கடலில்  ஆழ்ந்தெடுத்த  முத்துக்  கண்ணில்
         அஞ்சனங்கள்  சூழ்ந்துநின்ற  அழகைக்  கண்டேன்
மூழ்கிடத்தான்  பாவிமனம்  அங்கங்  கண்டு
          முழுநிலவாய்  வதனமதும்  ஒளிரக்  கண்டேன்  !


கார்குழல்போல்  கருங்கூந்தல்  களைந்து   ஆட
         கன்னியவள்  கால்களதோ  நடையும்   பயில
வார்த்தெடுத்த  சிலையதுபோல்  வனப்பில்  மின்னும்
         வஞ்சியவள்  கன்னத்தின்  குழியும்  பேசும்  !


மங்கையவள்  கொங்கையதும்  மலரக்  கண்ணில்
           மதிமயங்கி  மடல்திறக்கும்  மாயக்  கனவும்
தங்கமென  வார்த்தெடுத்த  தளிரும்  மேனி
            தடையகற்றி  தழுவிடவே  எண்ணம் தோன்றும் !


பூவிதழில்  பூத்துநின்ற  புன்னகையோ  அன்றி
            புதுநாதம்  பிறக்கின்ற  பூங்  குழலோ
ஆவியெந்தன்  பிரிந்தாலும்  அழகுக்  கிளியின்
             அமுதவிதழ்  அவிழ்த்துவிடத்  தானே  ஏக்கம்  !


வேல்விழியாள்  விளக்கேற்ற  வந்தால்  என்றன்
               வாழ்வினிலும்  வாசலிலும்  சுடராய்  ஒளிரும்
பால்பொழியும் 
வதனமவள்  பார்த்துப்   பார்த்தே
                பசியாறிப்  போவதுண்மை  விடியல்  தோறும்  !!                       அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: