புதன், ஜனவரி 18, 2017

எங்கும் கண்டேன் ...



குழுமத்தில் பகிரப்பட்ட சிறந்த மானிடவியல் கவிதைகளில் ஒன்றாகவும் சீர்மை கவிதைகளில் சிறந்ததாகவும் அஷ்ஃபா அஷ்ரஃப் அலி அவர்களின் கவிதை தெரிவு செய்யப் பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.
கவிஞருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்



Ashfa Ashraf Ali‎ to படைப்பாளிகள் உலகம் TAMIL CREATORS

December 16, 2015 ·

இற்றரையில் வாழுகின்ற
அற்பர்களைக் கண்டேன்
இழிநிலையில் வாழுமவர்
இழிவதனைக் கண்டேன்

அற்றார்தான் தெருவெங்கும்
படுத்துறங்கக் கண்டேன்
அவலத்தின் விளிம்பினிலே
அவர்கள்நிலை கண்டேன்

கொற்றவர்கள் கொந்தளிப்பில்
குடும்பங்களைக் கண்டேன்
கொள்கையிலே மாறாட்டம்
கொண்டவரைக் கண்டேன்

புற்றீசல் போலஎழும்
பொல்லாங்கைக் கண்டேன்
புள்ளிமானின் வடிவினிலே
அவளையும்நான் கண்டேன் ..

பகலெல்லாம் படுத்துறங்கும்
பக்தர்களைக் கண்டேன்
புல்லனென நள்ளிரவில்
பதுங்குமவர் கண்டேன்

இகத்தினிலே ஏழைகளின்
இன்னல்களைக் கண்டேன்
ஈயாதோர் நெஞ்சினிலே
ஈரமில்லை கண்டேன்

சிகரத்தின் அளவின்மேல்
விலையேற்றம் கண்டேன்
சிரிக்கின்ற உதடுகளின்
சிந்தைஅழக் கண்டேன்



நிகழாத நிகழ்வெல்லாம்
நித்திலத்தில் கண்டேன்
நிலவுமகள் புன்சிரிப்பை
நித்தமும்நான் கண்டேன் ...

கருத்துகள் இல்லை: