செவ்வாய், ஏப்ரல் 26, 2016

நொண்டிச் சிந்து


அந்தியில்  கண்டவள் தான் - என்
அன்பினைச் சொன்னதும்  அஞ்சினா ளேன்
பந்தினத் தாரிடம்  போய்  - என்
பாசத்தைச் சொன்னாளோ பக்குவ மாய்  !

வெண்பா

கண்டு களிப்பதற்கு  கண்ணேவுன்  காந்தவிழி
ஒன்றிங்கு போதுமடி ஊருக்குள் - நின்றென்னை
நேசங் கொளச்செய்த நேரிழையே உன்விழிக்குள்
நேசத்தோ ( டு )  என்னை  இருத்து !

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


        விளம் - மா - விளம் - மா - விளம் - காய்


கலையெழிற் பெண்ணின் கண்களைக்  காணக்
கற்பனை சிறகடிக்கும்
வளைக்கரந் தொட்டு  வார்த்தைகள் பேச
வாஞ்சையில் வாய்துடிக்கும்
அலையெனப் பொங்கும் ஆவலி லிதயம்
அடிக்கடி துடிதுடிக்கும்
நிலையினை அறிந்து நிம்மதி யற்று
நினைவுகள் சோர்ந்திடுமே !

அறுசீர் விருத்தம் !

கருவறை தொட்டுக் கல்லறை வரையுங்
களிப்பினில் வாழ்வதற்கே
விரும்பிய படியே வாழ்ந்திடு  வென்று
விழிகளைப் படைத்தவனாம்
தரும்வளம் யாவும் தரையினி லிங்கே
தரமெனத் தந்தவனாம்
அருள்மிகு இறைவன் ஆற்றலை இங்கு
அறிந்திட  ஆளிலையே !

சனி, ஏப்ரல் 16, 2016

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

காய் - காய் - காய் - காய் - மா - தேமா 



விரும்பியவா றெல்லாமிப் பூவுலகில் பொல்லாதார்
   விளைக்குந் துன்பம்
தருக்குடையா ருள்ளத்தில் தூய்மையிலா எண்ணத்தால்
   தளிர்க்குந் துன்பம்
திரும்புகின்ற இடமெல்லாந் தீவினையைக் காணுகையில்
   தீயாய் என்றன்
இதயத்தைச் சுடுகிறதே இருவிழியும் நனைகிறதே
   இறைவா  இங்கே !

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    காய் - காய் - காய் - காய் 
     மா - தேமா 



கருவறுக்கு மெண்ணமுளோர் காழ்ப்புணர்வு  கொண்டவரே
   கணிசம் மிங்கே
பெருகிவரும் பேதமையால் பேரிடியாய்த் தொடர்கிறதே
   பொல்லாங்  கிங்கே
ஒருவயிற்றுப் பிள்ளைகளும் அண்டையயல் வாழ்பவரும்
   ஒன்று பட்டால்
உருக்குலைந்த ஒற்றுமையை காத்திடலாம் ஒருவாறாய்
   உலகி லின்றே !

எழுசீர்க் கழிநெடிலடி விருத்தம்

         விளம் - மா -  விளம் - மா 
          விளம் - விளம் - மா 


தன்னிக ரற்றத் தமிழ்மொழி  தன்னில்
   தாகமென் றுரைப்பவ  ரிங்கே
அன்னிய மொழியை அவரவர்க் குள்ளே
   அழகுடன் மொழிவதைக் காண
இன்புற லின்றி இகழ்வதிம் மொழியை
   இகழ்வது அன்னையைப் போன்றே
என்பதை யுணரா திருப்பவ ரவரை
   என்றுமே எண்ணிடச் சிணமே !

திங்கள், ஏப்ரல் 11, 2016

எழுசீர் விருத்தம்


நெருப்பா யெரியும் நெஞ்சில் கிடந்து
நேசங் காட்டுங் கிளியே
விருப்பம் முன்னில் விரைந்தே சொல்ல
வீட்டா ரென்னை எதிர்க்க
தருக்கஞ் செய்தா லடியும் உதையும்
தாங்கா துடலென் னன்பே
பொருத்தம் மின்றி முடித்தே வைத்தார்
பொல்லா தவரென் அப்பா !


மா - மா - மா - மா
மா - மா - மா 

எண்சீர்க் கழிநெடிலடி விருத்தம் !

சொற்புலமை  யில்லாமல் சொற்ப காலம்
சொந்தமொழி நடையினிலே கதைகள் போலப்
பற்பலவாய்க் கவிதைகளைப் பாடித் தேய்ந்து
பைந்தமிழின் சோலையிலே புகுந்தேன் பின்னே
கற்றவராம் பாவலரின் கவிதைத் தொண்டு
கைகொடுத்து உதவுதென்னில் கைமுறை யாலே
நற்றமிழின் நடையழகை நேர்த்தி யோடே
நடந்தபடிக் கற்கின்றேன் நானு மங்கே !


காய் -காய் - மா - தேமா 

சிந்துப்பா - ஆனந்தக் களிப்பு

தெம்மாங்குப் பாட்டொன்று பாட - கண்ணே
தெம்பாக என்னோடு சேர்ந்தேநீ யாட
வம்பாகிப் போனாலும் போகும் - உனை

வம்பலர்க் காணாமல் நின்றாடு போதும் 

சிந்துப்பா - ஆனந்தக் களிப்பு

தூளியி லென்னைநீ போட்டு - உன்
துன்பத்தைச் சொல்லியே பாடுவாய் பாட்டு
நூலிடைச் சேலைக்குள் நொந்து - உன்
நோவினைக் கண்டுத விக்கிறேன் வெந்து

ஆகாத வார்த்தையு மில்லை - அம்மா
ஆராரோ பாடிட ஆனந்த மில்லை
நோகாத வாறென்னைப் போட்டு - நொடி

ஒன்றேனும் பாடுநீ நல்லொரு பாட்டு 

ஞாயிறு, ஏப்ரல் 10, 2016

கட்டளைக் கலித்துறை

சிந்தா திருந்தேன் சிரசில் கிடந்தவன் சிந்தையிலே
தந்தே னெனையே தருவானே வாழ்வைத் தயக்கமின்றி
பந்தா யுருட்டிப் பனிபோ லுருகிடப் பாய்விரிக்க
நொந்தே னவனால் நொறுங்கிய நெஞ்சினில் நோவினையே !

காப்பியக் கலித்துறை

தேடு மெதையும் தருவாளெனச் சொல்ல மாட்டேன்
நாடு மெதுவும் நலமேயெனக் கூற மாட்டேன்
வீடு வளவும் விலைக்கோவெனக் கேட்க வேண்டாம்
பாடு படவே பிறந்தானெனச் சொல்லு வீரே !

காப்பியக் கலித்துறை

தன்னந் தனியே தவித்தேமனத்  துள்நி னைக்க
அன்னை மொழியால்
அணைத்தேயிறு கப்பி டித்து
கன்னித் தமிழே
கனிந்தேயெனக் குள்கு விந்தே
என்னைத் தொடவே
இதமாய்வரும் பாட லெல்லாம் !

 - தேமா - புளிமா - புளிமாங்கனி - தேம - தேமா -

சனி, ஏப்ரல் 09, 2016

சிணத்தோடு நான் !


விழுதுகள் போலுள உறவுக லெல்லாம்
  வீணெனச் சிதறிக் கிடக்கை யிலே
அழுதவன் பாதி தொழுதவன் மீதி
  அமைதி யிலாமலே வாழுகி றான்  !

கழுகுகள் போலக் காமுக ரிங்கே
  கால்களுக் கடியில் கிடக்கை யிலே
மெழுகுகள் போல மழலைக ளுயிர்கள்
  அழுகைக ளூடே கரையு திங்கே !

இழுபறி யாகும் இழிநிலை ஏனோ
  இகத்தினில் கிடந்தது சிரிக்கை யிலே
வலுவினி லுள்ளோர் வாய்களை மூடி
  வாழ்வதைக் காண  வருஞ் சிணமே !

கலித்தாழிசை

நூலாடுஞ் சேலையிலே நோகாதி ருக்கவெனக்
 காலாட்டி நாங்கிடந்துக் கண்ணாற உறங்கிவிடத்
தாலாட்டுப் பாடுகிறத் தாயேவுன் தாழ்குரலே
 மேலாக வந்தெனது மென்காதில் இனிக்கிறதே
மெய்நோகக் கிடக்கின்றாய் மென்மேலு மினிக்கிறதே !

தொட்டா லாருமெனைத் தோல்நோகு மெனவறிந்து
 கட்டாந் தரையினிலே கால்நோகக் கிடந்தபடிப்
பட்டா லெவர்கண்ணும் பட்டுவிடா மற்பாட
 இட்டமுடன் தொட்டிலிலே இனித்திடுமே உன்குரலை
இனியெங்கு கேற்பேனோ நினைத்தாலே இனிக்கிறதே !

வெள்ளி, ஏப்ரல் 08, 2016

கலித்தாழிசை


காத்திருந்துக் காத்திருந்துக் கண்ணுறங்க வில்லையடி
பூத்திருக்குங் காதலினால் பூவிழியுன்  னெண்ணமடி
காத்திருக்க வேண்டுமெனில் காலமெலாங் காத்திருக்கப்
பூத்திருக்குக் காதலெனப் பூவிதழால் புன்னகைப்பாய் !

கலித்தாழிசை


நேற்றுவரை நீயிருந்த நேர்ச்சியினை நானிழந்து
காற்றடித்துப் போனதுபோல் கலங்குகிறே னென்னுயிரே
ஊற்றெடுத்து வருந்துயரோ ஊருசனம் வம்பளக்கத்
தேற்றவரு வாரின்றித் தெம்பிழந்து நிற்பவளை
ஏற்றமுடன் ஏந்திவிடு ஏக்கமுற நிற்பவளை !

கலிவிருத்தம்

இயன்ற வாரெலாம் ஈகையே மேலெனத்
துயரி லாழ்ந்தவர் துன்பமே போக்குதல்
பயக்கும் நன்மைகள் பற்பல தோழரே
துயர்து டைப்பதைத் தொண்டெனக் கொள்கவே !

   -  புளிமா - கூவிளம் - கூவிளம் - கூவிளம் -

ஞாயிறு, ஏப்ரல் 03, 2016

சிந்துப் பா ( நொண்டிச் சிந்து )

பட்டணம் போகாதே நீ  - அங்கு
  பட்டுத்தெ றிக்குது வெய்யில டி
கட்டணங்  கேட்பாரங் கே  - நாம்
  காலாறக்  குந்துங்க  ளிப்பறைக் கே !

ஆயிர மாயிரந் தான்  -  அங்கு
  ஆனந்தம் ஆங்காங்கு உண்மையும் தான்
நோயினில் வாழ்வதைப் போல் - தினம்
  நொந்துதான் வாழ்கிறார் நோவினை யால்

பட்டதைச் சொல்லிவிட்  டேன்  - பட்ட
  பாட்டினைப் பாடலில் பாடிவிட் டேன்
இட்டமு னக்குவுண் டேல் - ஒரு
  எட்டுநீ  போயங்கு  பாருபுள் ளே !

வெள்ளி, ஏப்ரல் 01, 2016

ஒருவிகற்ப இன்னிசை வெண்பா !

நல்லா ரெவரோ நமக்கிடையே நானிலத்தில்
பொல்லா தவர்முகமே பொங்குதிங்கே -  உள்ளாரும்
வல்லா ரவருமே வாழுகிறார் வாழ்வினிக்க
அல்லாதார் அல்லாதார்த் தான் !

குறும்பா !

கன்னத்திலே குத்துதென்றாள்  மீசை
கனகனத்து வந்ததுபார்  ஓசை

   சீண்டிவிட்டு அவளை
   தீண்டிவிட்ட  கவலை

பின்னிரவே மழித்தேனென்  மீசை  !

குறும்பா !

மடித்துவைத்த துணிமணிகள் கூட்டி
படித்துறைக்குக் குளிக்கவந்தாள் பாட்டி
  
   எடுத்துவைத்த புடைவையொன்றில்
   படுத்திருக்கப் புடையனொன்று

படித்துறைக்குள் பாய்ந்தாள்மூ தாட்டி !

புதுக் கவிதை !


அடுப்புப் புகையில்
அப்பச் சட்டியுடன்
தினமும் குளிக்கும் அம்மா

பக்க வாதத்தால்
படுத்த படுக்கையில்
பரிதாபத்தோடு கிடக்கும் அப்பா

பருவம் வந்தும்
பருவத்துக் கனவுகளோடு
துணிக்கடையில்
வேலை செய்யும்
கல்யாணம் ஆகாத  அக்கா

கிழிந்த சட்டையுடன்
ஓட்டை ' டியூப்களுக்கு '
பஞ்சர் போடுகிறான்
சைக்கிள் கடையில்  தம்பி

எல்லாம் தெரிந்தும்
ஒன்றுமே தெரியாதவளாய்
நேற்று கண்ட அவனுடன்
வீட்டைவிட்டு ஓடிப்போன  நான்  !

தரவு கொச்சகக் கலிப்பா !

வருவாய்நீ யெனநாளும் வழிமீது விழிவைத்துப்
பெருமூச்சு விடுகின்றேன் பெருவாழ்வு தருகவென
ஒருபோது முனைமறவேன் உயிரேவுன் தடந்தொட்டு
வரும்பாதை தனைப்பார்த்து வயதேறப் பதறுகிறேன்

ஆதலினால்

உயர்வாம் காதலை உயர்வெனப் போற்றித்
துயர்க ளிலாமல்  தூய்மையுங் கொண்டே
உயர்வாய் வாழ்வோ முலகில்
இயம்பிடு ஒருசொல் இன்மொழி கொண்டே !