வெள்ளி, ஜனவரி 31, 2014

யார் தடுத்தது ?

வானிலோடும் வெண்ணிலவை யாரழைத்தது - அது
வேதனையால் ஏனதனின் முகம் மறைத்தது
'தேனிலவு ' என்றழைத்து மாந்தர்களிப்பதால் - அது
தன்பெயரை தரக்குறைவு என்று நினைத்ததோ !

தென்றலதை தொட்டுப்பார்க்க யார்முனைந்தது - அது
தரித்திடாமல் அங்குமிங்கும் அலைந்து ஓடுது
தழுவுகின்ற மேனியெங்கும் பயந்து உரசுது - இந்த
தரணியிலே மனிதரென்றால் அஞ்சி யொடுங்குது !

கடல்நீரில் கைநனைத்து கலகம் செய்ததார் - அது
கரைபுரளும் அலைகளிடம் சொல்லி யழுதது
அடங்கிடாத அலைகள்கூட சீற்றங்கொள்ளுது - தன்
ஆத்திரத்தை அள்ளிவீச தருணம் பார்க்குது !

வாடுகின்ற உள்ளங்களை நீ மறப்பதால் - உனை
வாழவைக்கும் இதயங்கூட கோபங் கொள்ளுது
ஆடுகின்ற ஆட்டமெல்லாம் காணுமிதயமும் - அது
ஓடுகின்ற செயல்நிறுத்தி உன்னைக் கொல்லுது !!

அஷ்பா அஷ்ரப் அலி

புதன், ஜனவரி 29, 2014

வெள்ளையுள்ளம் இல்லை எங்கும்.....

உள்ளங்கள்   அனைத்திலுமே
உதிரமது   சிவப்பு
உதவிடவே   கைகளென
உணர்வதில்லை   மனது ..

வெள்ளையுள்ளம்   உள்ளவராய்
வாழ்வதென   நினைப்பு
கள்ளமுற்ற  
நெஞ்சிலெங்கும்
கருமைநிறப்  பொலிவு  ..

கொள்கையெனும்  பெயரினிலே
குறுகுறுத்த  போக்கு
கொஞ்சமேனும்  குறைவதில்லை
கொடுஞ்சொல்லின்   வீச்சு  ...


    அஷ்பா அஷ்ரப் அலி 

வெள்ளி, ஜனவரி 24, 2014

கண்களைக் கண்டெழுது ..

கருவிழி  கொண்ட  கண்களினை -  தினம்
     கவிதையில்  நனைத்தே  மகிழ்கின்றீர்
இருவிழி  இழந்தோர்  இருவரியில் -  ஏன்
     எழுதிடக்  கைகளை  தடுக்கின்றீர் !

கண்களின் 
மேலழ  கறிந்திடும்நீர்  -  அது
     கசிந்திடும்  கண்ணீர்  கண்டிடுவீர்
வெண்காசக்  கண்கள்  பலவுண்டு  -  அது
    வினைகளில்  வீழ்வதை  உரைத்திடுவீர் !

பெண்களைப்  போற்றிட  பொழுதெல்லாம் - அவள்
      கண்களை  மான்விழி  என்கின்றீர்
தன்விழி  இழந்தவர்  கண்பேசும்  -  அத்
    துயர்கதை  கேட்டிட  மறுக்கின்றீர் !

அணங்கினர்  கண்களில்  அழகுண்டு  -  நம்
       ஆடவர்  கண்களில்  பொருளுண்டு
இணங்கிட  வைத்திடும் வாலிபரின்  -  நல்
        இணர்கண்  போற்றியும்  எழுதிடுவீர் !!


         அஷ்பா அஷ்ரப் அலி ..

செவ்வாய், ஜனவரி 21, 2014

யாரும் இல்லை !!

கண்ணோடு  கண்காணும்  காத  லெல்லாம்
கையோடு  கைகோர்த்து  இணைவ  தில்லை
பண்ணோடு  பெயர்பெற்ற 
மாந்த  ரெல்லாம்
புண்னிதயம்  இல்லாமல்  மரித்த  தில்லை

விண்ணோடு  மண்ணெங்கும்  வீசுங்  காற்று
வீணாக  ஓய்வென்று  படுத்த  தில்லை
மண்ணோடு 
மண்சேர்ந்த  உறவினர்  தன்
மண்வாழும்  உறவுகளோ  நினைப்ப தில்லை

வண்டோடு  அணைகின்ற பூக்கள்  ஒன்றும்
ஒருபோதும்  பூவின்மணம்  இழப்ப  தில்லை
கண்கூடாய்  கண்ணெதிரே  கண்ட
உண்மை
கசப்பென்று  வாய்ஏனோ  திறப்ப  தில்லை

அதிகாரம்  கொண்டிங்கு  அரசாள்  வோரும்
தள்ளாடும்  மக்கள்நிலை  பார்ப்ப  தில்லை
விதியென்று  வாழ்வினையே   நொந்  திட்டோரும்
விடியலதன்  புன்சிரிப்பைக்  கண்ட  தில்லை

சதிகாரக்  கூட்டங்கள்  போடும்  ஆட்டம்
அதிகாரம்  உள்ளோரும்  காண்ப  தில்லை
நதியெனவே  பெருக்கெடுத்த  நலிந்தோர்  கண்டு
நானிலத்தில்  நலமளிக்க  பிறந்தோ   ரில்லை ..



      அஷ்பா அஷ்ரப் அலி 

சனி, ஜனவரி 18, 2014

மனையினைக் காப்பாள் !

  மனையினை  காத்திடும்  மனைவியவள் -  நல்
  மாண்பினை  தினமும்  போற்றுங்கடா !
  மனையினில்   தீபச்  சுடரொளியாய் -  புது
  மங்கலம்  நிறைவதைப்  பாருங்கடா !

  துணையெனக்  கண்டவள்  துன்பமெலாம் -  உன்
  தோளினில்  கிடப்பவள்  காட்சியடா !
  அணைத்திட  மட்டுமா  அவளுனக்கு -  இல்லை
  அனைத்திலும்  உனக்கே 
சொந்தமடா !

  தன்னையே  தந்தவள்  தரணியிலே -  தரம்
  தாழ்ந்திட  வாய்ப்பே  இல்லையடா !
  பண்புடன்  வாழ்பவள்  நெஞ்சத்திலே -  புது
  பொலிவுடன்  கிடந்தே  வாழுங்கடா !

  தன்னிக  ரற்ற  அன்பிலவள்  -  தினம்
  தளும்பிடும்  இதயத்தை  பாருங்கடா !
  இன்முகத்  தாலவள்  கைகோர்த்து  -  என்றும்
  இன்பக்  கடலில் 
மூழ்குங்கடா  !


      அஷ்பா அஷ்ரப் அலி 

கண்ணிலே என்ன உண்டு ..


வாழ்வதில் சாதல் மேன்மை !!


புதன், ஜனவரி 15, 2014

குறும் பா !

ஆத்தாடி  அவள்மேல  ஆச
ஆளாளுக் 
கொன்றொன்று  பேச !
         கள்ளியவள்  நடந்துவந்தாள்
          கிள்ளிய  அம்மல்லிகைப்பூ
கூத்தாடி  கொண்டையிலே  மணம் வீச !


     அஷ்பா அஷ்ரப் அலி 

பாவெழுத துணிந்து விட்டேன் !!

பண்ணெடுத்து  பாவெழுதும்  பாவலரைக்  கேட்டு
பாவெழுதி  பழகிடவே  பலநாட்கள்  கேட்டும்
பண்பாடே  இல்லாது  பகிடியுடன்   பதிலளிப்பார்
பாலைவனப்  பூவுனக்கு  பாவொரு  கேடாவென்று

பள்ளியிலே  நல்லதமிழ்  படித்ததில்லை இலக்கணமாய்
கள்ளியெனக்  குத்தியது  கவி
ரவர்  அகம்பாவம்
அள்ளியெனை  அரவணைத்த  அழகுதமிழ்  நூல்களினால்
துல்லியமா  யில்லைதான்  துரும்பேனும்  கற்றறிந்தேன்


சிற்றெறும்பாய்  சிறுகவிதை  சிந்தனையில்  கிறுக்குவதை
சிறப்பென்று  முகநூலில்  சிலிர்க்கின்ற  நட்புகளால்
நாற்றெனவே  நடுகையிலே  நாளொன்றாய்  வளர்ந்திடவோர்
நல்வாய்ப்பு  வருவதுபோல்  நாளெனக்கு  விடிகிறது


கற்றறிந்த  கவிஞரவர்  கற்றெனக்குத்  தந்திருந்தால்
கவிதையெனும்  வயலினிலே  காலாற  நடந்திருப்பேன்
ஏற்றமிகு  நாமமவர்  என்நாமத்தில்  இணைத்திருப்பேன்
ஆற்றாத  கவலைதான்  அவரின்றோ  நம்மிலில்லை



       அஷ்பா அஷ்ரப் அலி 

சனி, ஜனவரி 11, 2014

நெட்டி விடும் விரலால் சொல்லு !

வெட்ட  வெளி  வானிலெங்கும்
வட்டமிடும்  வெண்ணிலவாய்
திட்டமிட்டு  விழிகளினால்
சுட்டு  எனை நோக்குவதேன்

கட்டழகு  கவிதை சொல்லி
காட்டுதடி  புன்னகையாய்
மொட்டு  விடும்  புன்னகையை
எட்டி  நின்று  வீசுவதேன் 

தொட்டுவிட துடிக்கு ( ம் ) மனம்
தட்டுப்  பட்டு  விழுகுதடி
கிட்ட  வந்து  நின்றுயென்னை
தட்டிக் கொஞ்சம் பார்த்து விடு

அட்டையை  போல்  ஒட்டிக்கொள்ள
இட்டம்  எனும்  இதயத்திற்கு
நெட்டி  விடும் விரலை கொஞ்சம்
நீட்டி ஒரு பதிலைச் சொல்லு ..


     அஷ்பா அஷ்ரப் அலி 

அறஞ் செய்வோர் வேண்டும் !

ஆளில்லா  உலகமென அருவருப்பில் மூழ்குபவர்
  அடையாளம்  கண்டவரை  கருவறுக்க  வேண்டும்
நாளினிதாய்  நகர்ந்திடநல் 
அறங்கலெனச்  செய்து
  நலம்மிகு  நாளிகைகள்  நமையிழக்க  வேண்டும்
வேலிகளுள் 
விழுந்தழுகும்  விழுதுகளாய்  ஏழ்மைப்
  பெண்களுக்கு  வாழ்வளிக்கும்  இளைஞரிங்கு  வேண்டும்
போலிகளாய்  வேசமிடும்  பெயர்தாங்கித்  தலைவர்
  பரம்பரையைத்  துரத்திடவோர்  இளைஞரணி  வேண்டும் !


நாளெல்லாம்  நலிவுருவோர்  நலம்வேண்டி  இங்கு
 நல்லெண்ணம்  கொண்டோர்கள்  பிறப்பெடுக்க  வேண்டும்
நாளவையில்  நாவினிக்க  நல்வாக்கு  கூறி
  நாணயத்தை 
இழந்தவரை  நாருரிக்க  வேண்டும்
களப்படி  அளக்காத  களவாணி  முதலாளி
  கண்கலங்கும் தொழிலாளி  கண்துடைக்க  வேண்டும்
உளப்பாடு  கொண்டோரை  உள்வாங்கி  மனதில்
  உவகையுடன்  வாழவழி  காட்டிடுவோர்  வேண்டும் !


         அஷ்பா அஷ்ரப் அலி 

ஞாயிறு, ஜனவரி 05, 2014

கிராமத்துக் கிளி ..

தாமரை  போலொரு முகத்துடையாள்  -  சிறி
    தாகவே  புன்னகை  பூத்துநின்றாள்
தாமத மின்றியே  ஆவலினால்  -  உனை
    தாவென்  னிதயத்தில்  எனக்கேட்டேன் !


சாமத்தில்  தொற்றிடும்  பித்துனக்கு  -  எனை
    சம்பந்தம்  செய்தவன்  உண்டெனக்கு
காமத்துக்  கிணங்கிட  வாசொன்னாய்  -  நான்
    கிராமத்துக்  கிளியடா   என்றாளவள் !



             அஷ்பா அஷ்ரப் அலி  
  

சனி, ஜனவரி 04, 2014

நிரந்தரம் ..

நிரந்தரமற்ற உலகில்
நீதானே
எனக்கு நிரந்தரம்

நின்று பேச நேரமில்லை

கொஞ்சம் அருகில் வா
என்னை
நிரந்தரமில்லாதவன் என
உலகம் சொல்வதற்குள்

  .. அஷ்பா அஷ்ரப் அலி 
..