புதன், அக்டோபர் 23, 2013

பூப் பூவாய் ஆசைகள் ...

வானத்து பூவெடுத்து
வழியெங்கும் அதைத்தூவி
நாணத்தில் நிற்கும் நீ
களிப்போடு நடக்க வேண்டும்

சீனத்து ராணியுன்னை
ஆழிக்கடல் முத்தெடுத்து
வானகத்தில் வடிவமைத்த
மாளிகையில் வைக்க வேண்டும்

தேனொத்த
உன்னிதழில்
விழிமூடி என்னிதழால்
நாணத்தை மூடி வைத்து
நாழிகையாய் படர வேண்டும்

எண்ணத்து இன்பமெல்லாம்
பள்ளியறைக் கதவடைத்து
வண்ணத்து வனப்பூட்டி
கள்ளியுன்னால் தீர வேண்டும்

ஈனத்து உறவெல்லாம்
கிளியுந்தன் நிலை பார்த்து
கானகத்து சறுகதுவாய்
நலிவுற்று மடிய வேண்டும்

காணத்து பொனவெந்தன்
கிலிகொண்ட வாழ்வு மீண்டு
சீனத்து ராணியுன்னால்
சிலிர்த்தெழுந்து துளிர்க்க வேண்டும் ....


    அஷ்பா அஷ்ரப் அலி

வியாழன், அக்டோபர் 17, 2013

நீயே தானெனக்கு ......

பாடும் பறவைகளே !

பாடித் திரியும்
 பறவைகளே
பாடல் நிறுத்தி
 கேளுங்களேன்

நஞ்சாம் மனிதர்
 வாழுமிடம்
தஞ்சம் என்று
 வாழாதீர்

குவிந்து குவிந்து
 கொஞ்சலுடன்
கூடிக் கூடிக்
 கொஞ்சாதீர்

கிளையில் அமர்ந்து
இலை மூடி
நிலையாம் காதல்
  பண்ணாதீர்

நிலைமை அறியா
 மானிடனோ
களைத்தே  இன்பம்
 அடைந்திடுவான்

உண்டில் கொடுத்தும்
 அழைத்திடுவான்
"சுண்டில் " கொண்டும்
 அடித்திடுவான்

 காடும் மலையும்
 நமக்குண்டு
பாடும் பறவை
 கூட்டங்களே

இறக்கை கட்டி
 பறந்திடவே
சிறகுகள் நமக்கு
 துணையுண்டு

தீண்டா இடத்தை
 தேடிடுவோம்
வேண்டாம் மனிதர்
 வாழுமிடம் ....


    *அஷ்பா அஷ்ரப் அலி *

வெள்ளி, அக்டோபர் 11, 2013

தமிழோடு வாழ வேண்டும் ...

கண்ணில் விளக்கு  வைத்து
கடல் நீரில் நனைய வைக்கும் - இந்த
கண் கெட்ட காதல் அது
கனவிலேனும் எனக்கு வேண்டாம்  !

எண்ணில் இலக்கு வைத்து
என் மார்பில் சாய்ந்தாடி - தினம்
பொன் மீது கனவு காணும்
பொன்னாசை பெண்ணும் வேண்டாம் !

பூகோலப் பந்தல் கட்டி
பகலிரவு ஆசை காட்டி - என்னை
புழுப் போல துடிக்க வைக்கும்
புவி வாழ்வும் எனக்கு வேண்டாம் !

மூத்தவனாய் ஆக்கி என்னை
மூவிரண்டு பெற்ற அன்னை - அவள்
மீதி பெற்ற அத்தனையும்
மிதிப்பதனால் எனக்கு வேண்டாம் !

மஞ்சக் கயிறு கட்டி
மஞ்சத்தில் கலவி கொண்டு - தினம்
கொஞ்சிக் கூத்து ஆடி
மிஞ்சிப் புணருதலும் எனக்கு வேண்டாம் !

தன்னில் நிறைவு கண்டு
தரணியெங்கும் புகழ் பாடும் - நல்ல
தமிழ் வாழும் காலமெல்லாம்
வாழ்ந்து நானும் மாள வேண்டும் !!


 அஷ்பா அஷ்ரப் அலி