புதன், நவம்பர் 28, 2012

மரணப் படுக்கையில் .......

பாதி விழித்த படி
பார்க்காதவன் போல் கிடக்கும்
என்னைப் பார்க்க
வந்து வந்து போகிறார்கள் !

மணித் துளிகள் நகர நகர
வருபவர்கள் எல்லாம்
எப்போது என்னை
தூக்கிச் செல்வார்கள் என
கேட்டுச் செல்கிறார்கள்
கிடத்திப் பார்க்க மனமில்லாமல் !

வார்த்தைக்கு வார்த்தை
முறையோடும் பெயரோடும்
அழைத்தவர்கள் எல்லாம்
ஒரே நாளில் மாற்றி விட்டார்கள்
என் பெயரை "மையம் " என்று
இரு உலகுக்கும் நடுவில் கிடப்பதை
அறிந்து கொண்டவர்களாக !

மகிழ்ச்சியை
அள்ளி அள்ளி கொடுத்த என்னை
மகிழ்ந்தவர்கள் எல்லாம்
மறந்து விடுவார்களோ என
பயமாக இருக்கிறது
பார்த்துப் பார்த்து திரும்பிச் செல்கையில் !

சண்டை பிடிப்பது போல்
சப்தமும் கேட்கிறது
பக்கத்தில் நிற்பவர்கள்
சொல்லிக் கொள்கிறார்கள்
என் மிச்சம் மீதிகளை
அள்ளிச் செல்லவாம் !

என்னையே கண்ணாக நினைத்து
அழுதுத் தீர்க்கிறாள் மனைவி மட்டும்
துடிக்கிறது மனசு
எழுந்து ஆறுதல் சொல்ல
மரணித்துக் கிடப்பதையும் மறந்தபடி !!!