ஞாயிறு, மே 22, 2016

துயரத்திலே ..


ஆற்றாத துயரமெல்லாம் - தினம்
அழுது என்னில் புரள்கிறதே
காற்றாக நானிருந்தால் - உன்
காதில் வந்து  சொல்லிடுவேன்

ஊற்றாக  நானிருக்க - ஒளி
விளக்காக நீ யிருக்க
ஏற்றாத தீபமெல்லாம் - இங்கு
இருந்தால்தான்  நமக்கு என்ன


தேற்றாத இதயங்களே  - தினம்
தூற்றி எனைச் சிரிக்கையிலே
போற்றுகிறேன் கிளியேவுன் - வைர
வாய்மொழியே பலம் எனக்கு !

ஒயிற் கும்மி !


கட்டுக்க டங்காத காதலி னாலிளங்
கன்னியர் போக்கினைப் பாருங்க  டி
  கனவேயிது  கறையேதரு ( ம் )
   நிலையாதது  தினமேயினி
கட்டுடன் வாழ்ந்திங்கு மாளுங்க  டி  !

பலவிகற்ப இன்னிசை வெண்பா !

ஊருக்குள் வந்தாலே உன்வாசம் வீசுதடி
நேருக்கு நேராக நோக்கிடவே  -  நூறுமுறை
நானும் வருகின்றேன் நாளு முனைத்தேடி
தேனுண்ணும் வண்டினைப் போல் !

ஹைக்கூ

ஊற்றெடுத்தது
உனக்கும் எனக்கும்
கசிந்தது  ஊருக்குள் !

எண்சீர் விருத்தம்

விண்ணுலகம் மண்ணுலகம் விழிக்கச்  செய்ய
  விளக்கேற்றி வருபவனே பகலோன் செல்வன்
கண்ணுறங்கிக் கடல்குளித்துக் காட்டுங்  காலைக்
  கதிரொளியின் அற்புதங்கள் கொஞ்சம் அல்ல
மண்ணிலிங்கு வாழுகின்ற உயிர்கள் தொட்டு
  மாண்புறயிக் கதிரோனின் ஒளியே அன்றி
எண்ணிலிலா  இயற்கைஎழில் இருந்தும்  மென்ன
  எத்திசைக்கும் திங்களொளி  தானே  வேண்டும் !


ஒளியளித்த  களைப்பினிலே கதிரோன் மெல்ல
  ஒலிகடலில் கால்நனைத்து  நடப்பான் பின்னே
களிநடனம் ஆடிஆடி மதியாள்  வானில்
  காரிருளைக்  கிழித்துவரத் தன்கை வீசிக்
கிலிதொடுத்த பறவையினம் காக்கை கூட்டம்
  கீச்சிட்டே தானடையும் தத்தம்  கூட்டில்
குளிர்நிலவின் இளமையிலே இரவும் துள்ளும்
  குமரியவள் முகம்பார்த்தே மேகம்  ஓடும் !


   காய் - காய் - மா - தேமா 

திங்கள், மே 16, 2016

நொண்டிச் சிந்து !

பட்டணம்  போகாத டி - அங்கு
பட்டுத் தெறிக்குது வெய்யில டி
கட்டணங் கேட்பாரங் கே - நாம்
காலாறக் குந்துங்க லிப்பறைக் கே !

ஆயிர மாயிரந் தான் -  அங்கே
ஆனந்த மாங்காங்கு உண்மையுந் தான்
நோயினில் வாழ்வதைப் போல் - தினம்
நொந்துதான் வாழ்கிறார் நோவினை யால் !

பட்டதைச் சொல்லிவிட் டேன் - பட்ட
பாட்டினைப் பாடலில் பாடிவிட் டேன்
இட்டமு னக்குவுண்  டேல் - ஒரு
எட்டுநீ போயங்கு பாருபுள் ளே !

கும்மிச் சிந்து !

செக்கச்சி வந்தவள் செங்கனி வாயிதழ்
செந்தளிர்ப் போடுதான் வந்துநின் றாள்
வெக்கத்தி லென்முன்னே வேல்விழி யாலவள்
வெட்டியே ஏதேதோ சொல்லிநின் றாள்

பக்கத்தில் நின்றவள் பார்வையின் வீச்சினில்
பாதிவு யிர்கையில் வந்தது போல்
சொக்கினே னென்னிலே ! சுந்தர முள்ளதா
சொல்லுங்கள் தோழரே உள்ளது போல் !

துளிப் பா !

நாடெங்கும்  மின்சார வெட்டு
நள்ளிரவில் நடமாடும்
நுளம்புகளோ நமைத் தொட்டு !

வீடெங்கும் எண்ணையிட்ட தட்டு - அதில்
விளையாட நுளம்புகளோ
விருப்பமுறும் மதி கெட்டு !

இயலுமெனில் கொல்லு !

கண்களினால் கலகம்செய்து
கட்டிவைத்தாய் என்னை - என்
கருவிழியில் கிடப்பதனால்
தொட்டிலிட்டேன் உன்னை !

ஆவலினால்   காதல்செய்து
அலையுதடி மனசு - தினம்
ஆளுகின்ற உன்னினைவால்
ஆவதுண்மைப் பித்து  !

பூவிழியால் இழுத்துவைத்துப்
பிழிந்ததெல்லாம் போதும் -  உன்
பூவிதழால்  புன்னகைத்துப்
பிடித்திருந்தால் சொல்லு !

இளநெஞ்சில் கிடந்தபடி
இடிப்பவளே நில்லு - உனை
இழப்பதெனில் சம்மதமே
இயலுமெனில் கொல்லு !

செவ்வாய், மே 10, 2016

துளிப்பா !


ஏறி
இறங்கி விட்டேன்
எல்லா வரிகளிலும்
என்னை
எந்த வரியில் வைத்தாய்
உன் கவிதையில் !

கும்மிச் சிந்து \

நெஞ்சுக்கு ளாயிரம் ஆசைக ளோடுது
நேரிழை யேயுன்றன் எண்ணத்தி லே
கெஞ்சுகி றேனுனைக் கேளடி கொஞ்சம்நீ
கொஞ்சிம கிழ்ந்திட லாமிங்கு வா !

நெஞ்சுக னக்கையில் நித்தமு முன்முகம்
நேசத்தி லென்முன்னே நிற்குத டி
அஞ்சுவ தெல்லாமே ஆவிபி ரிந்திடும்
ஆசைக ளாதிக்கஞ் செய்கையி லே !

இரு விகற்ப நேரிசை வெண்பா

பாட்டெழுத  வந்தாலே பைங்கிளியே உன்னினைவின்
தேட்டத்தில் நிற்குதடி என்பேனா - கூட்டத்தில்
பாடநான் சென்றாலும் பாடாது  தேடுகிறேன்
வாடவிடா தென்னருகே வா !

கும்மிச் சிந்து

பத்துக்குப் பத்தெனப் பாதிநி லத்தினைப்
பாவிக்கு ழந்தைகள்  பங்குவைக் க
சொத்துக்கள் சேர்த்திடப்  பட்டயென் பாட்டினைச்
சுத்தமாய்க் கண்டவ ராருமில் லை !


நித்தமு மிங்குநான் நித்திரை யின்றியே
நேர்த்தியில் சேர்த்தவை தானித லாம்
மெத்தவும் மேனியில் முத்திய நோயினால்
எத்தனைக் காலம்நா னிங்கிருப் பேன் !

வெள்ளி, மே 06, 2016

ஆசிரிய விருத்தம்

நண்டுகள்  நடந்தே சென்ற
  நடையினை மணலே  சொல்ல
தென்படு மிடங்க ளெல்லாந்
  தென்றலுந் தவழ  மெல்ல
கண்ணெதிர் கனவில் மூழ்கிக்
  காதலர்  தழுவல் கிள்ள
வெண்மணல் தனிமை என்னுள்
  வெறுமையில் நினைவில்  நீயே  !
   விளம் - மா - தேமா 
   விளம் - மா - தேமா 

ஆசிரிய விருத்தம்

வருமிடர் வாசல் வந்து
  வகையெனக் கிடந்திட் டாலும்
வரும்படி எதுவும் மின்றி
  வாழ்வினில் நொந்திட் டாலும்
பருவமென் உடலைத் தீண்டி
  பாலுணர் வெழுந்திட் டாலும்
அருவெறுப்  பெதிலும் மென்றும்
  அளைந்திட மாட்டேன்  தாயே !


  
      விளம் - மா - தேமா 
      விளம் - மா - தேமா

ஆசிரியத் தாழிசை


வன்புணர் வாளரே வழியினி லெங்கும்
என்மக ளுனைநான் எண்ணியே கவலை
கண்மணி கவனங் காமுக ரெதிரிலே !

குழவிக ளாயினுங் குமரிக ளாயினும்
சுழலுங் காமச் சுடரில் குளித்திடக்
குழந்தாய் ! குதறுங் கூட்டம் எதிரிலே

அயலவர் நெஞ்சிலு மண்டி விடாதே
துயர்தரத் தயங்கார் தூண்டிடக் காமம்
அயர்ந்து விடாதே அல்லல்  எதிரிலே !

ஆசிரியத் தாழிசை !

இருப்போ ரெல்லாம் இல்லா தவர்மேல்
தருக்கம் செய்யின் வருத்த மெனக்குள்
இருக்கு மெவரும் ஈதல் நன்றே !

கவளம் கேட்டே கையை  நீட்டப்
பவளம் வேண்டா பருக்கை யளித்தே
அவலப் படுதல் ஆற்றுதல் நன்றே !

கல்லாக் குழந்தை கடைநிலை மக்கள்
இல்லாக் கல்வி இனிதே கற்க
உள்ளோ ரெல்லாம் உதவுதல் நன்றே !