செவ்வாய், ஏப்ரல் 01, 2014

தீயெனச் சுடுவதெல்லாம் ...

ஆழ்கடலில் முத்தெடுக்க குளிப்போர் எல்லாம்
          ஆனந்தம் கண்டதில்லை அவர்தம் வாழ்வில்
ஏழ்மையெனும் இடுக்கினிலே விழுந்தோர் எல்லாம்
          எழுந்திருப்ப தெப்போதோ அலறல் தினமும் !

சூழ்நிலையே சீர்திருத்தம் காணச் செய்யும்
          சேர்ந்திருப்போர் காட்டுகின்ற கபடப் போக்கில்
ஊழ்வினையால் நிறைந்திட்ட உலகம் என்று
          உருப்படத்தான் போகிறதோ தெரியா தய்யா !

சூழ்ந்து
எழும் துயரத்தைக் காண்போர் நிதமும்
          சோர்வடைந்து  வாழுகிறார் சரிதான் ஆனால்
பாழ்படுத்தும் விலைவாசி ஏற்றங் கண்டு
          பதறாதோர் பாரினிலே எவர்தான் உண்டு !

கால்தடுக்கி வாழ்வினிலே கவிழ்ந்தோர் இங்கு
          கணிசம்தான் என்றாலும் காதல் தொல்லை
நூல்தொடுத்து வளருவதால் நம்மில் வாழ்வோர்
          நாரெனவே
கிழிந்தவர்தான் நூற்றில் பாதி !

ஆல்தொடுத்த விழுதுகளாய் ஆயிரம்தான் ஆனாலும்
          அன்பிழந்த உறவுகளே ஆங்காங்கு வாழ
தேள்நிறைந்த விசமதுபோல் தேகம்நிறை நஞ்சில்
          தோல்கொடுத்து வாழுவதாய் காட்டுவதே புதுமை !


   அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: