வெள்ளி, பிப்ரவரி 28, 2014

பொன்னழகு பூத்திருப்பாள் !!

நித்திலத்தின்  நிறைவாழ்வோ  நேசத்தின்  நிறைகுடமோ
     சித்திரமாய்  சிலைவடிவாய்  செங்கமலக்  காரிகையாள்
உத்திகொண்டு  போராடிப் 
பொற்கொடியின்  கைகோர்க்க
    
மெத்தவுந்தான்  பாடெனக்கு  முத்திவிடும்  பித்தெனெக்கு ..


சிற்றிடையோ  சிறுகொடியோ  சிணுசிணுத்த  செந்தேகம்
     செங்கனியின்  செழிப்பினிலே செவ்வானம் 
செயலிழக்கும்
பொ
ற்கிளியின்  பூவிதழில்  பூவாடை  புன்னகைக்கும்
      பொலிவென்றால்  பொலிவதுவே  பொன்னழகு  பூத்திருக்கும் ..


இத்தளத்தில்  இவள்போல  இன்னொருத்தி கிடைப்பாளோ
     இல்லாளாய்  என்னுள்ளம்  இனியொருபெண்  இணைவாளோ
சுத்தமுள்ள  எண்ணமுண்டு  சத்தியத்தில்  வாழ்வுமுண்டு
     சேர்த்துவிடப்  பெரியோரே  சார்ந்திடுவீர்  என்கூட  ..



            அஷ்பா  அஷ்ரப் அலி 

வியாழன், பிப்ரவரி 27, 2014

கண்கெட்டுக் கிடக்குதடா !!

கண்கெட்டு  கிடக்குதடா  உலகம்  -  காணும்
களமெல்லாம்  நடக்குதடா  கலகம்
கால்பட்ட  இடமெல்லாம்  குருதி  -  இனக்
கோளாறு  இருக்கும்வரை   உறுதி  ..

உள்ளோர்க்கு  ஒன்றிங்கு  சட்டம்  -  உயர்
வில்லார்க்கு  கிடைக்குதிங்கு  பட்டம்
எல்லோர்க்கும்  இரத்தநிறம்  சிவப்பு  -  அதை
எண்ணாதோர்  மனதிலேனோ  கசப்பு  ..

கண்கெட்ட  விலைவாசி  உயர்வால் -  மக்கள்
கண்ணீரை 
அணைத்திங்கே  அயர்வார்
புண்ணாகிப்  போனோரும்  உண்டு  -  தினம்
புழுதிவாரிப்  போட்டோரும்  உண்டு ..

ஆகாது  என்றாலும்  தேகம்  -  தினம்
காணாது  என்றலறும்  போகம்
வேகாது  வாழ்வோர்க்கும்  ஆசை  -  வெந்து
வேக்காடு 
ஆனோர்க்கும்  ஆசை ...

     அஷ்பா அஷ்ரப் அலி 

செவ்வாய், பிப்ரவரி 25, 2014

அன்றலர்ந்த தாமரையோ நீ !!

அன்றலர்ந்த  தாமரையோ  -  அன்றி
     அணிலளைந்த  செங்கனியோ
கன்றிழந்த  காளையைபோல்  -  எதைநீ
     கண்சுழற்றி  தேடுகிறாய்  !

வண்டினங்கள்  வாசல்வழி   -  தினமும்
     வந்துவந்து  போகுதடி
பண்பிழந்து  போகுமென்றால்  -  மனசு
    
புண்தொடுத்து  வேகுமடி  !

காலமுன்னைக் 
கொல்லுதென்றால்  -  நீ
     கண்ணசைத்து  சொல்லுபுள்ள
ஆதவனைப்  போலயிங்கு  -  நானும்
     காத்திருக்கேன்  ஊருக்குள்ளே   !!


          அஷ்பா அஷ்ரப் அலி 

வியாழன், பிப்ரவரி 20, 2014

அழ வைத்த கண் கொண்டாள் ..

ஆழத்தில்  கிடந்தாலும்  அன்பே   நீயும்
     ஆற்றாத 
துயரந்தான்  எந்தன்  நெஞ்சில்
மீளத்தான்  முடியாதோ  மீண்டும்  மீண்டும்
     முள்ளாகிக்  குத்துகிறாய்  நெஞ்சில்  எங்கும்

காலத்தா  லழியாத  காதல்  என்றன்
     வேல்போலுன்  உள்ளத்தில்  பாய்ந்த  தாலோ
மாளத்தான்  வீழ்ந்தேனோ  உந்தன்  கண்ணில்
     விளக்கித்தான்  சொல்வாயோ  விபரம்  கூட்டி

கோணத்தில்  உன்னெண்ணம்  குறுக்கா  லோட
     கொதிக்கின்ற  என்னெண்ணம்  தவிக்கு  திங்கே
வானத்தின்  உயரத்தில்  வாழ்ந்தால்  நீயும்
     வாகாக  வாழ்வாய்நீ  என்னில்  என்றும்

தேனாக  சொட்டுகின்ற  பெண்கள்  கண்ணில்
     தேள்போலக்  கொட்டுகின்ற  கண்கள்  உண்டோ
ஆணாகப்  பிறந்தோர்க்கு  அல்லல்   தந்து
      அழவைத்த  கண்களில்நீ  நூற்றில்  ஒன்றோ  ?



                         அஷ்பா அஷ்ரப் அலி 

செவ்வாய், பிப்ரவரி 18, 2014

விழுந்தாலும் மகிழ்வேன் !!

விதிவந்து  விளையாடி
  விழும்போதும்   மகிழ்வேன்
சதிமாந்தர்  செய்தெனக்கு
  சரிந்தாலும்   மகிழ்வேன்

ஊரெல்லாம்  சேர்ந்தென்னை
  பகைத்தாலும்  மகிழ்வேன்
பாரெல்லாம்  சேர்ந்தென்னை
  வதைத்தாலும்  மகிழ்வேன்

கொடியோர்கள் கூடியென்னை
  கடிந்தாலும்  மகிழ்வேன்
அடியோடு  உறவெல்லாம்
  வெறுத்தாலும்  மகிழ்வேன்

குளிர்காற்று  வந்தென்னை
   தொட்டாலும்  மகிழ்வேன்
கடும் வெயில்வந்து  தீயாக
   சுட்டாலும்  மகிழ்வேன்

ஆவியெந்தன்  மேனியிலே
  இருந்தாலும்  மகிழ்வேன்
சாவுயென்னைத் தேடிவந்து
  அழைத்தாலும்  மகிழ்வேன் ..


  அஷ்பா அஷ்ரப் அலி 

சனி, பிப்ரவரி 15, 2014

எப்பக்கம் திரும்புவது ?

எங்கென்று   நோக்குவது
எதையெதைநான்   நோக்குவது ?
எப்பக்கம்   திரும்பினாலும்
ஏராளச்  சிக்கல்கள்  ..

வாதாட   வாய்கொண்டோர்
வாய்கிழிய   கத்துவதும்
ஆதாரம்   தேடித்தேடி
ஆடிடுவோர்   ஒருபக்கம் ..

சூதாட்டம்   மதுமங்கை
சொல்லாலே   வெறுத்தொதுக்கி
வேதாளம்   போல்வாழ்வோர்
வீதியெங்கும்   ஒருபக்கம்  ..

எண்ணத்தில்  
ஒன்றுவைத்து
எழிலோடு   புன்னகைத்து
வன்மனமாய்   வாழ்ந்திடுவோர்
வாசலெங்கும்   ஒருபக்கம் ..

எண்ணற்ற   வாக்குறுதி
எத்தனையோ   அள்ளிவீசி
கண்கெட்ட  அரசியலில்
கால்வைத்தோர்   ஒருபக்கம்  ..

நிந்திப்போர்   உள்ளவரை
எந்தவிதப்   பயனுமில்லை
வந்துவந்து   போகுமிந்த
சிந்தனையோ   ஒருபக்கம் ..


  அஷ்பா அஷ்ரப் அலி 

வியாழன், பிப்ரவரி 13, 2014

வற்றா நதியென நீயுண்டு !!

வானும்  கடலும்  நமக்கென்றால்  -  என்
     வற்றா  நதியென  நீயிருக்க
காணும்  காட்சி  பலவிருந்தும்  -  நான்
     கண்டே  மகிழ்ந்திட  நீயாகி
தேனும்  பாலுஞ்  சுவைகொண்டு  - தினம்
     சேர்ந்தே  மகிழ்ந்திட  நீயுண்டு !


ஆற்றாத்  துயரம்  எனில்காண  - எனை
     தேற்றித்  தழுவிட  எனக்கென்றும்
காற்றாய்  மழையாய்  வகைகொண்டு  - என்
     காலம்  கனிந்திட  தினமென்றும்
ஊற்றாய்  பெருகிடும்  உணர் (வு ) கண்டு  - தினம்
     உவகை  பொங்கிட  நீயுண்டு !


காதல்  கீதம்  பல உண்டு  - அதை
     காதில்  இசைத்திட  நீயுண்டு
தோதாய்  உன்னில்  எனைகொண்டு  -  நான்
     தாழா  திருக்க  நீயுண்டு
 
சாதல்  எவர்க்கும்  பொதுவுண்டு  -  என்
     சாகா  வரமாய்   நீயுண்டு !


                அஷ்பா அஷ்ரப் அலி

       

புதன், பிப்ரவரி 12, 2014

ஆட்டம் போடும் மனிதன் !!

தேனருந்தும்  வண்டினமோ  மலர்களோடு  கொஞ்சும்
    தேனிழக்கும்  நிலையறிந்து  மலர்களதும்  கெஞ்சும் !

கானகத்து  நடுவில்நின்று  கோலமயில்  ஆடும்
     கண்டதனில்  களிப்புற்று  கானக்குயில்   பாடும் !


ஊனமுற்றோர்  உலகெங்கும்  குமுறிமனம்  துடிப்பார்
     உதவிடநல்  கரங்கொண்டோர்   வேதம்தினம்  படிப்பார் !

மானமதை  இழந்தவராய்  மாக்களவர்  கூட்டம்
     மமதையுடன்  போடுகின்றார்  மண்ணிலிங்கு  ஆட்டம் !

வேரறுந்த  உறவுகளே  ஊர்நிறைந்து  வாழும்
     பார்தொடுத்த  போரினைப்போல்  உறவுமுறை  சூழும் !

தாரமதை  தள்ளிவைத்து  தனதின்பம்  சேர்ப்பார்
     தள்ளாடும்  நிலைவரவே  தாரம்கரம்   கோர்ப்பார் !


  அஷ்பா அஷ்ரப் அலி 

திங்கள், பிப்ரவரி 10, 2014

வையம் எங்கும் அமைதி இல்லை !!

வானில்  தேய்ந்த  இளநிலவும்  -  அதன்
   வடிவம்  வளர  அமைதிபெறும்
தேனில்  அளையும்  வண்டினமும்  - தன்
   தேவைக்  கேற்ப  தேனுறிஞ்சும்
வீணில்  அலையும்  மனிதமனம்  - ஏனோ
   விருப்பம்  நிறைந்தும்  ஓய்வதில்லை !


விளங்கா  வாழ்வில்  வாழுமவன்  -  தினம்
   வீணாய்  வாழ்வைக்  கழிக்கின்றான்
விளக்கின்  ஒளியில்  வந்துவிழும்  -  அவ்
   விட்டில்  போலச்  சுருளுகின்றான்
கலங்கித்  தவிக்கும்  கண்கண்டும்  -  அவன்
   காணா  திருந்தே   மாளுகின்றான் !


பகுக்கும்  அறிவு  கொண்டோனாய்  - பாரில்
   பரமன்  படைத்த  மனிதஇனம்
ஆகும்  கலகக்  கும்பல்களால்  -  தினம்
   அழிந்தே  மடியுது  அனுதினமும்
வகுப்பென  வாழும்  இழிநிலையில்  -  இந்த
   வையம்  எங்கும்   அமைதிஇல்லை  !!


     அஷ்பா அஷ்ரப் அலி 

வெள்ளி, பிப்ரவரி 07, 2014

விளக்கேற்ற வந்து விடு !!

ஆழ்கடலில்  ஆழ்ந்தெடுத்த  முத்துக்  கண்ணில்
         அஞ்சனங்கள்  சூழ்ந்துநின்ற  அழகைக்  கண்டேன்
மூழ்கிடத்தான்  பாவிமனம்  அங்கங்  கண்டு
          முழுநிலவாய்  வதனமதும்  ஒளிரக்  கண்டேன்  !


கார்குழல்போல்  கருங்கூந்தல்  களைந்து   ஆட
         கன்னியவள்  கால்களதோ  நடையும்   பயில
வார்த்தெடுத்த  சிலையதுபோல்  வனப்பில்  மின்னும்
         வஞ்சியவள்  கன்னத்தின்  குழியும்  பேசும்  !


மங்கையவள்  கொங்கையதும்  மலரக்  கண்ணில்
           மதிமயங்கி  மடல்திறக்கும்  மாயக்  கனவும்
தங்கமென  வார்த்தெடுத்த  தளிரும்  மேனி
            தடையகற்றி  தழுவிடவே  எண்ணம் தோன்றும் !


பூவிதழில்  பூத்துநின்ற  புன்னகையோ  அன்றி
            புதுநாதம்  பிறக்கின்ற  பூங்  குழலோ
ஆவியெந்தன்  பிரிந்தாலும்  அழகுக்  கிளியின்
             அமுதவிதழ்  அவிழ்த்துவிடத்  தானே  ஏக்கம்  !


வேல்விழியாள்  விளக்கேற்ற  வந்தால்  என்றன்
               வாழ்வினிலும்  வாசலிலும்  சுடராய்  ஒளிரும்
பால்பொழியும் 
வதனமவள்  பார்த்துப்   பார்த்தே
                பசியாறிப்  போவதுண்மை  விடியல்  தோறும்  !!



                       அஷ்பா அஷ்ரப் அலி 

செவ்வாய், பிப்ரவரி 04, 2014

அண்டியே வாழ்வோம் என்றும் !!

மண்டலம்  வாழ்வோ  ரெல்லாம்
  முண்டமாய்  ஆன  தால்தான்
கண்படும்  தூர  மெல்லாம்
  வன்முறை  துளிர்த்த  தெங்கும் !

அண்டமே  சூழ்ந்து  நின்ற
  அமைதியின்  வாடை  நீங்கி
பண்டைய  இனிமை  இன்றி
  புண்படும்  வாழ்வு  கண்டோம் !

கண்டனக்  குரல்  கொடுப்போர்
  தண்டமே  என  வளைந்து
மண்ணினில்  குவிந்த  தால்தான்
  மகிழ்வினை  இழந்து  விட்டோம் !

மாண்டிடச்  செய்வோம்  அந்த
  மானுடம்  வெறுக்கும்  தொல்லை
அண்டியே  வாழ்வோம்  எங்கும்
  அன்பெனும்  கரங்கள்  கோர்த்து !


         அஷ்பா அஷ்ரப் அலி 

ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

இறைவனைப் புகழ்வாய் !!

வற்றா  நதியென   வளமளித்து
வாழும்  உயிருக்  குணவளிக்கும்
ஏற்றங்  கொண்ட  இறையோனை
என்றும்  துதிப்போர்  இங்கில்லை  !

போற்றா   திருப்போர்  ஒருபாதி
பொல்லா  துள்ளம்   மறுபாதி
ஏற்றத்  தாழ்வு   என்றி ன்றி
ஏந்திடும்  அவனை  நினைப்பதில்லை  !

ஆற்றாத்  துயரம்  சூழ்கையிலே
ஆயிர  மாயிரம்  அவ (ன் )
னினைவு
ஆற்றலில்  அவனின்  வல்லமையை
ஆழ்ந்தே  நோக்கிடக்  கண்களில்லை  !

வேற்றுமை  அகற்றி  உயிர்கட்கு
வேண்டுவ  தெல்லாம்  அளிப்பவனே
ஆற்றல்  கொண்ட  உன்னன்பால்
அளக்கும்  படியிலும்  குறைவில்லை  !

காற்றால்  மழையால் 
கதிரொளியால்
காலச்   சுழற்சியில்  எமைகாக்கும்
ஏற்றம்  பெற்ற   உனையன்றி
ஏகன்  வேறு   எமக்கில்லை  !!


       அஷ்பா அஷ்ரப் அலி