வியாழன், மார்ச் 27, 2014

மேன்மையில் பிறந்த ...

நீரிடை நெளியும் புழுவும்
நிலத்தடி வாழும் எறும்பும்
தேனடை ஒழுகும் தேனின்
தேம்பலில் குளிக்கும் தேனீ

கானிடை திரியும் விலங்கும்
கடலினில் வாழும் மீனும்
ஊணினைத் தேடி உழைக்கும்
உயிர்களின் நியதி  அதுவே !

வீணென வாழ்ந்திட எதுவும்
உலகினில் பிறப்பது மில்லை
வீண்பகை கொண்டே  எந்த
உயிரினம் வாழ்வது  மில்லை

மேன்மையின் பிறப்பே மனிதன்
மாள்வது மாயையின் கனவில்
தாண்டவ மாடிடும் பகைமை
தனக்கென கொண்டவன் இவனே !


      அஷ்பா அஷ்ரப் அலி

   

புதன், மார்ச் 26, 2014

வேலி மீறிய கிளைகள் ..

வேலி மீறிய கிளைகளை
வெட்டி விடு
வெட்டாமல் விடு எனக்கென்ன

ஆடாத கிளைகள் கூட
அழுது கொண்டே இருக்கின்றன
அமைதியாக


ஆயிரம் எண்ணங்கள்
அதனதன் மனதினில்

அங்குசத்திற்கு
அடங்குமென்றால் யானை
ஆள் பலத்தால்
முடியாமலா போய்விடும் என்ன


கொஞ்சம் இரு
ஏன்
இப்படி வியர்க்கிறது உனக்கு  ?


    அஷ்பா அஷ்ரப் அலி

சனி, மார்ச் 22, 2014

துடித்தெழு !!

வாழ்கையின்  விளிம்பில்  நின்று
        வழுக்கியே  வீழும்  போது
தாழ்வினில்  கிடக்கும்  மனிதன்
       தனக்கென  கொண்ட  வாக்கில்
வாழ்வினில்  எல்லா  மிங்கு
       வருவது  பொதுவே 
வென்று
தோல்வியைத்  தனக்குத்  தானே
       தேற்றிடக்  காண்போ  மிங்கு !

வெண்பனித்  தூங்குங்  காலை
       விடியலே  கண்  திறக்க
எண்ணிலா  பறவை  எல்லாம்
       எழுந்தவர்  இரையைத்  தேட
கண்படும்  தூர  மெல்லாம்
       காரியம்  பல  விருக்க
முன்கடன்  பின்  கடன்போல்
       முடங்கியே  இவன்  கிடப்பான் !

அல்லலே  அல்லல்  என்று
       அகத்தினில்  கிடந்தா  லொன்றும்
இல்லவே  இல்லை  என்றும்
       இகத்தினில்  ஈடு  னக்கு
தொல்லைகள்  சூழும்  முன்னால்
       துடித்தெழு  வில்லாய்  வளை
எல்லையே  அற்ற  இன்பம்
       இனியுனக்  கென்றே  உணர்  !!


    அஷ்பா அஷ்ரப் அலி 

வியாழன், மார்ச் 20, 2014

நீ அறிவாயோ !!

கடற்கரை மணலில் காலாற  -  சற்று
     களைப்பினை தீர்க்க நடந்திடநீ
படர்ந்துள மனதின் கவலையெலாம்  - நொடிப்
     பொழுதினில்  மாறுவ  தறிவாயோ

விடலைகள் காணும் கனவெல்லாம்  -  வெறும்
     ஒளியென வந்தே மறைந்துவிடும்
கடலென பொங்கும் ஆசைகளில்  - இங்கு
     கவிழ்ந்தவர் கோடி அறிவாயோ

படலையின் கண்ணில் பாவையர்கள்  - வெறும்
     பார்வையி  னாலே  பசியாற
இடர்துடைத்  தவரின்  கைகோர்க்க  - நம்
     மிளைஞரிங் கில்லை அறிவாயோ

ஆடவர் அன்பினில் தாரமதும்  -  அவள்
     அருகினில் கிடந்தே அளைந்தவனும்
தேடலில் தரித்திரத் துணைதேடி  -  வாழ்வை
     தொலைத்தவர் ஆயிரம் அறிவாயோ

தடமெனப் பதிந்த துயரெல்லாம்  - தம்
     தலையினில் கிடந்து  சிணுங்குகையில்
திடமுடன் உருகித் தம்மிறையை - தலை
     வணங்கிட நிம்மதி அறிவாயோ


     -- அஷ்பா அஷ்ரப் அலி --

புதன், மார்ச் 19, 2014

பிடித்திருந்தால் சொல்லு ..

கண்களினால் கலகம்செய்து
கட்டிவைத்தாய்  என்னை - என்
கருவிழியில் கிடப்பதனால்
தொட்டிலிட்டேன்  உன்னை

ஆவலினால் காதல்செய்து
அலையுதடி மனசு  -  தினம்
ஆளுகின்ற உன்னினைவால்
விளைவதுண்மை பித்து
பூவிழியால் இழுத்துவைத்து
பிழிந்ததெல்லாம்  போதும் - உன்
பூவிதழால் புன்னகைத்து
பிடித்திருந்தால் சொல்லு

இளநெஞ்சில் கிடந்தபடி
இடிப்பவளே நில்லு  - உனை
இழப்பதெனில் சம்மதமே
இயலுமெனில் கொல்லு ...

-- அஷ்பா அஷ்ரப் அலி --

செவ்வாய், மார்ச் 11, 2014

எப்பக்கம் திரும்புவது ?

அகிலத்தின் அதிபதியே உன்னை அன்றி 
அருளாளன் எமக்கிங்கு யார்தான் உண்டு 
முகிழ்க்கின்ற துன்பங்கள் முடிச் சவிழ்த்து
முனைவின்றி எமையிங்கு காத் தருள்வாய் 

வேதித்தார் தரணியிலே வினயம் கொண்டு 
வேற்றுமுனை உருவாகும் நிலையை மாற்றி 
தாகித்தே உந்தன்பால் தர்க்கம் பண்ணத் 
தவித்திடுவோர் நெஞ்சத்தை குளிரச் செய்வாய் 

வேதத்தின் வாய்மையினை உணர்ந்தோர் இங்கு 
வாதத்தில் வாழுகிறார் வாய்மை மாற்றி 
ஆதன்போல் அறிந்தோரால் அல்லல் எங்கும் 
ஆளாளுக் கொன்றொன்று சொல்லும் சொல்லால் 

வாதாடி வாதாடி வாசல் தோறும் 
வெவ்வேறு சின்னங்கள் உந்தன் பெயரால் 
ஏதேனும் ஓர்வழியில் செல்லச் சொல்லும் 
என்மனதை எப்படித்தான் தேற்றிக் கொள்வேன் ...

அஷ்பா அஷ்ரப் அலி

ஞாயிறு, மார்ச் 02, 2014

மூக்குத்தி ( குறும்பா )

கண்ணுக்குள்ளே  கிடப்பவளே  ராசாத்தி
கன்னத்திலே  குத்துதென்றேன்  மூக்குத்தி

     கனன்றுவந்த  வேளையிலும்
     கழற்றிவைத்தாள்  மின்னலென

கிண்ணத்திலே  மூக்குத்தியை  வெட்கத்தில் !
                     அஷ்பா அஷ்ரப் அலி