செவ்வாய், டிசம்பர் 31, 2013

காற்றே நில் !!

வையம் எங்கும் உன்பெயரில்
வைதல் இல்லை உணர்வாயோ

பையில் இட்டு வைப்பதெனில்
கையிற் கொண்டே நடந்திடுவோம்

பெய்யும் மழைக்கும் துணைநின்று
மையம் இட்டும் நின்றிடுவாய்

மெய்தான் உலகில் நீயின்றி
ஐயோ ! உலகில் வாழ்வேது !


எங்கும் எதிலும் உன்ஓட்டம்
தொங்கிக் கொண்டே துள்ளுதடி

அங்கம் அசைத்து அடிவைத்து
பங்கம் செய்தேன் மகிழுகிறாய்

வங்கக் கடலில் உன்ஆட்டம்
நீங்கா நினைவில் நிற்குதடி


சங்கம் வைத்தோ சதிசெய்தாய் 
புங்கக் காற்றே பதில்சொல்லு !!

அஷ்பா அஷ்ரப் அலி

சொல்லாத எண்ணங்கள் ..

நெளிந்தோடும் நதியாக கண் பேசுது - அதை
 வழிந்தோடும் கண்ணீரும் கதை கேட்குது

விளையாடி மகிழ்கின்ற சிறு குழந்தையாய் - என்
 களையாத கனவெல்லாம் நடை பழகுது

மலைபோல பாரங்கள் தலை ஏறுது - புது
 மாப்பிள்ளை போலெந்தன் மனம் மாறுது

சொல்லாத எண்ணங்கள்  பறி போகுமோ - அது
 சில நேரம் என்னோடு குடியேறுமோ

அடையாளம் தெரியாத முகம் கண்டதால் - மனம்
 படைபோல எனைசூழ்ந்து உயிர் வாங்குது


        அஷ்பா அஷ்ரப் அலி 

ஞாயிறு, டிசம்பர் 29, 2013

பதின் பருவம் ...

பருவமது படருகின்ற
 பதின் பருவக் காலம்
அரும்பாகி  துளிர்த்து எழும்
 இளமையதன் கோலம்

நெருடுகின்ற நினைவெங்கும்
 நடமாடும்  ஆசை
வெறுமையுடன் அசைந்தாடும்
 இச்சைகளில் மூழ்கி

சுருக்குவழி சென்றடைந்து
 சுருக்கிட்டு மாண்டோர்
கறுக்களிலே கருவுற்று
 கதறிநிதம் நிற்போர்

அறுந்தாடிப் பறக்கின்ற
 பட்டம்போல் இங்கு
தெருவெங்கும் நிறைந்தாளும்
 காட்சிகளே அதிகம் ...


     அஷ்பா அஷ்ரப் அலி 

சனி, டிசம்பர் 28, 2013

புகையென கிளம்பும் பகை ...

வகையென மாந்தர் வாழ்ந்திடும் உலகில்
 வருத்திடும் இதயம் விளைந்தவர் ஒதுக்கி
புகையென கிளம்பும் பகைமையை உடைப்போம்
 பாரினில் நிலவும் பாதகம் களைய ..

மதமெனும் பெயரில் மறை முகமாக
 மதவெறி கொள்வோர் பதரென ஒதுக்க
இதயங்கள் எல்லாம் இன்முகம் காட்டி
 மதநல் இணக்கம் மகிழ்வுடன் பூக்கும் ..!


        அஷ்பா அஷ்ரப் அலி 

வியாழன், டிசம்பர் 26, 2013

புதுக் கதையொன்று சொல்லிட .. வா !!

கரு நீளக் கூந்தலிலே
கடைக் கூந்தல் நீயிணைக்க
என் கையாலே
முடிந்திடவா - உன்

பூவிதழில் சிந்துகின்ற
புன்னகையாய் நானமர்ந்து
புது மொழியொன்று பேசிடவா - அந்த

மருதாணிக் கையளைந்த
நெளிந்தாடும் விரல் இழுத்து
என் எச்சில் தெளித்திடவா - தினம்

சரிந்து விழும்  உன்  முந்தானை
சரியாகக் கணக்கிட்டு
சரி பாதி பிரித்திடவா - உன்

வெண்சங்கு கழுத்தளவில்
பொன்மாலை ஆகினானும்
புழு போல நெளிந்திடவா - இல்லை

பூ மாலை போன்ற உன்னை
புது மஞ்சத்தில் போட்டுவைத்து
புதுக் கதையொன்று சொல்லிட .. வா !!


     -- அஷ்பா அஷ்ரப் அலி --

வியாழன், டிசம்பர் 19, 2013

மதங்களின் மீதும் மதம்

வேதங்கள் சொல்லும்
போதனை எல்லாம்
வேதனை புரிவது
தீதது என்றே

வேதம் ஓதிடும்
போதகர் எங்கும்
பாதகம் புரிவதை
பார்த்ததும் உண்டோ

உத்தம புத்தன்
சத்தமாய் சொன்னான்
சித்தமாய் அன்பே
சுத்தம் என்று

சாத்தனை மறந்த
புத்திரர் சிலரோ
உத்திகள் பண்ணும்
சாத்தான் ஆனார்

மதங்களின் மீது
மதம் பிடித்தாடும்
போதகர் எவரும்
போதன் இல்லை ..

அஷ்பா அஷ்ரப் அலி

செவ்வாய், டிசம்பர் 17, 2013

என் தளம் ( புத்தளம் )

மண்ணுக் கேற்ற  வளமுண்டு
 மனதுக் கினிய மக்களுண்டு
எண்ணில் அறிவில் சான்றோரும்
 ஏற்றம் பெற்றோர் இங்குண்டு ..

வந்தோர் வருவோர் வரவேற்று
 வாழ்வை அளிக்கும் மனங்கொண்டோர்
சிந்தும் கண்ணீர் கண்டாலே
 சிறப்பாய் ஈவோர் இங்குண்டு ..

வண்ணக் கலைகள் அறிந்தோரும்
 வளையா நெஞ்சம் கொண்டோரும்
பொன்னுக் கிணையாய் மனங்கொண்டும்
 மின்னும் மாந்தர் இங்குண்டு ..

தளங்கள் அறியா மனிதருண்டு
 ( புத் ) தளத்தை அறியா
தாருண்டோ
தளத்தில் தளமாய் நிலைகொண்ட
 தர்க்கம் நிறைய இங்குண்டு ..

இளைஞர் இங்கே ஒன்றிணைந்து
 இழந்த வனப்பு வரவேண்டும்
வளங்கள் கண்டே வசைபாடும்
 வாய்கள் மூடி அழவேண்டும் ...

   அஷ்பா அஷ்ரப் அலி 

சனி, டிசம்பர் 14, 2013

மதுரமரக் கிளையினிலே ..

மாலையிளம் ஒளியினிலே அவளைக் கண்டேன்
 மதுரமரக் கிளைகிளிபோல் பேசக் கண்டேன்
வாழையதன் வனப்பதுபோல் வடிவம் கண்டேன்
 வெதும்பியயென் மனதினிலே ஒளிர்வைக் கண்டேன் ..

சாலையெங்கும் காணுகின்ற கிளிகள் கண்டு
 வெதும்பாத வள்ளிதயம் எனக்கு உண்டு
சோலைக்கிளி பார்வையவள் பட்ட அன்று
 மெதுமெதுவாய் துடிப்பதேனோ இதயம் இன்று ..

மாலைக்கிளி அவளழகில் மயங்கி நின்றேன்
 பதுமையவள் புதுமையிலே வியந்து நின்றேன்
நாளையொரு நாள்வரட்டும் எனக்கே என்று
 இதங்கொடுத்து மனதினைனான் தேற்றிக் கொண்டேன் ..


     அஷ்பா அஷ்ரப் அலி 

வெள்ளி, டிசம்பர் 13, 2013

மடிக் கணணி !!

வெண்மையதோ கருமையதோ நிறத்திலில்லை பேதம்
    வண்ணங்களில் வடிவுகளில் வருகுதடி வாதம்

பெண்களென ஆண்களென பொழுதெங்கும் உன்னை
     மென்மையுடன் கையாளும் வகையினிலே மேன்மை

நிலைகுலைந்து வீழ்ந்தவர்கள் உன்மேலே பலபேர்
      தலைவிரித்து ஆடுதடி தரையெங்கும் உன்பேர்

வலைகொண்டு வளைத்திடவா விலைகொண்டு நின்றாய்
       வலைத்தளத்தில் விளையாடி களைத்திடவே செய்தாய்

விண்ணுயரப் போறவளே இணையமெனும் தளத்தில்
       கண்ணெதிரே கிடந்தபடி கண்சிமிட்டும் காட்சி

கண்ணயரும் வேளையிலும் கன்னியுன்னை திறக்க
        எண்ணமடி ஏனெமக்கு இப்படியோர் தொல்லை

கடிகார முள்ளோடும் காலடியின் ஓசை
        இடிகூட விழுந்தாலும் தெரியாதுன் ஆசை

பிடிவாதம் இல்லாமல் மடியினிலே கிடத்தி
        மடிக் கனனியுனை தாலாட்ட எல்லோர்க்குமாசை ...

     
            * அஷ்பா அஷ்ரப் அலி  *

புதன், டிசம்பர் 11, 2013

இன்னொரு பெண் எதற்கு ?

அஞ்சனங்கள்
சூழ்ந்த உந்தன் விழியில்
நெஞ்சம் ஏனோ
வீழ்ந்ததடி சதியில் ..

பஞ்சம் இல்லா
அழகிலுந்தன் ஒளிர்வில்
சஞ்சலங்கள்
நிறையுதடி நினைவில் ..

வஞ்சியுந்தன்
மின்னுகின்ற கன்னம்
கொஞ்சுவென
கெஞ்சுதடி என்னை ..

மஞ்சம் கொள்ள
தூண்டுதடி ஆவல்
தஞ்சம் கொள்ள
தந்துவிடு உன்னை ..

பஞ்சமின்றி
பால் பொழிய வாழ்வு
பூஞ்சிறகுன்
கை கோர்க்க வேண்டும் ..

நெஞ்சிலெங்கும்
நீயிருக்க நிழலாய்
மிஞ்சியொரு
பெண் எதற்கு வேண்டும் ...

  அஷ்பா அஷ்ரப் அலி  

உன்னை நினைத்து ...


வெள்ளையுள்ளம் உள்ளதோ !!


திங்கள், டிசம்பர் 09, 2013

பெண்மை பூத்திட வேண்டும் ..

ஆணவம் கொண்டு ஆளும்
 ஆண்களை அடக்கியே வைக்க
பெண்களின் கூட்டம் இங்கு
 மென்மையாய் பூத்திட வேண்டும்

தடைகளாய் கற்கள் இட்டு
 இடைஞ்சல்கள் காட்டு வோரை
படையென திரண்டு பெண்கள்
 புடைசெய புறப்பட வேண்டும்

வேலியாய் இருக்கும் ஆண்கள்
 பாலியல் தொல்லைகள் புரிந்தால்
நாழிகை கூட இன்றி
 நசுக்கியே கொன்றிட வேண்டும்

ஊழ்த்துணை ஆகும் பெண்கள்
 வாழ்வினில் வசந்தம்  கண்டு
தாழ்வினை தூரமே வைத்து
 தரத்தினில் சிறந்திட வேண்டும்

வாழ்வினை கலங்கம் பண்ணும்
 கால்களில் விலங்குகள் இட்டு
ஆழ்வியாய்  குடும்பம் காக்கும்
 நாளினி எங்கும் வேண்டும் ..

    அஷ்பா அஷ்ரப் அலி

  

மச்சான் வரும் நேரமெப்போ ..


( மும் ) தாஜ்மகால் !!