வெள்ளி, டிசம்பர் 13, 2013

மடிக் கணணி !!

வெண்மையதோ கருமையதோ நிறத்திலில்லை பேதம்
    வண்ணங்களில் வடிவுகளில் வருகுதடி வாதம்

பெண்களென ஆண்களென பொழுதெங்கும் உன்னை
     மென்மையுடன் கையாளும் வகையினிலே மேன்மை

நிலைகுலைந்து வீழ்ந்தவர்கள் உன்மேலே பலபேர்
      தலைவிரித்து ஆடுதடி தரையெங்கும் உன்பேர்

வலைகொண்டு வளைத்திடவா விலைகொண்டு நின்றாய்
       வலைத்தளத்தில் விளையாடி களைத்திடவே செய்தாய்

விண்ணுயரப் போறவளே இணையமெனும் தளத்தில்
       கண்ணெதிரே கிடந்தபடி கண்சிமிட்டும் காட்சி

கண்ணயரும் வேளையிலும் கன்னியுன்னை திறக்க
        எண்ணமடி ஏனெமக்கு இப்படியோர் தொல்லை

கடிகார முள்ளோடும் காலடியின் ஓசை
        இடிகூட விழுந்தாலும் தெரியாதுன் ஆசை

பிடிவாதம் இல்லாமல் மடியினிலே கிடத்தி
        மடிக் கனனியுனை தாலாட்ட எல்லோர்க்குமாசை ...

     
            * அஷ்பா அஷ்ரப் அலி  *

கருத்துகள் இல்லை: