வியாழன், நவம்பர் 20, 2014

ஈர மண்ணை விட்டும் ...

ஈர மண்ணில்
கால் புதைத்து நின்றவளை
கீழே தள்ளிவிட்டது
யாரென்று தெரியவில்லை

அந்த
பச்சை உடம்புக்காரியின்
மேனியெங்கும்
வெட்டுக் காயங்கள்

இலைகளையும்
கிளைகளையும் நேசித்தவள்
நிலை குலைந்து கிடந்தாள்
அந்த தெருவோரத்தில்

அந்தி சாய்ந்ததும்
கிளைகளில் தங்கியும்
எச்சமிட்டும் சென்ற பறவைகள்
வந்து  இவளை  பார்த்தபடி
எந்தவித செய்தியும் இல்லை

சோலைக் குடும்பத்தில்
பிறந்தவளை
சாலை விஸ்தரிப்புக்காக
வெட்டி இருக்கிறார்கள்

நா வறண்டு
சரிந்து கிடந்தவள்
முனகலோடு சொல்கிறாள்
வெயிலில் கிடத்தாமல்
விறகுக்காகவாவது
எடுத்துச் செல்லுங்கள்  என ...


 - அஷ்பா அஷ்ரப் அலி -