செவ்வாய், டிசம்பர் 06, 2011

வேண்டுவன வேண்டும் !!

கண்ணதனைக் கவணமுடன் பேண வேண்டும்
காலமெல்லாம் அதன் ஒளியில் வாழ வேண்டும்
எண்ணமதை நல் வழியில் செலுத்த வேண்டும்
எண்ணிய சொல் மாறாமல் பேச வேண்டும் .......

கல்வியதைக் கசடறவே கற்க வேண்டும்
கற்றததை மற்றோர்க்கும் புகட்ட வேண்டும்
கல்லாதார் குணமறிந்து பழக வேண்டும்
நல்லோர்தம் நட்பதனை நாட வேண்டும் .......

கற்பு நிறை நல் மனைவி அமைய வேண்டும்
காலமெல்லாம் அவளன்பால் திளைக்க வேண்டும்
நற்பண்பு நல்மகவு பெருக வேண்டும்
நானிலத்தில் சிறந்தோராய் வளர்க்க வேண்டும் .......

பெற்றோரை கற்றோரை மதிக்க வேண்டும்
உற்றாரை உறவினரை போற்ற வேண்டும்
சிற்றின்ப ஆசைகளை அடக்க வேண்டும்
சீரியமாய் இப்புவியில் வாழ வேண்டும் .......

பொல்லாதார் நட்பதனைக் களைய வேண்டும்
நல்லோனாய் நானிலத்தில் உளவ வேண்டும்
இல்லாதார் நிலையறிந்து ஈய வேண்டும்
இன்முகமாய்க் கண் மூடி மடிய வேண்டும் ......

நானும் தயார்

அன்புள்ள அத்தானே ஆசிர்வாதம்
அஞ்சலின்று கண்டவுடன் அசந்தேவிட்டேன்
இருப்பதையும் கொடுத்துவிட்டு வருவதற்கு
இன்னுமொரு வாரத்தில் சரி வருமோ ?

"கொழும்பினிலே" தங்கி நிதம் நிற்பதனால்
கொடுத்திடுவான் ஏஜென்சி பணத்தை என்றீர்
கண்டறியாப் பயல்களெல்லாம் வேஷம் இட்டு
கழுத்தறுக்கும் ஆளாக ஏன்தான் போனீர் ?

வீட்டோடு காணியுடன் கடையொன்றும்
வாங்கிடலாம் என்றே நீர் எண்ணம் கொண்டீர்
கூட்டோடு இருந்ததெல்லாம் போனதனால்
கனவுகளில் மண்ணையள்ளி ஏன்தான் போட்டீர் ?

சங்கு மணி மாலையையே நிதமும் கேட்டு
சபிக்கின்றார் வாப்பாவும் தினமும் வந்து
சவடியுடன் காதணியும் போனாலென்ன
சின்னவளின் கழுத்துகூடமொட்டை இன்று !

முத்திரைக் கவர் ஒன்றும் வைத்தே உள்ளேன்
முழுப் பதிலை விபரமுடன் எழுதிடுங்கோ
தக்க பதில் இல்லையெனில் எந்தனுக்கு
இல்லை உங்கள் மனைவி என எண்ணிடுங்கோ!

சத்தியமாய் சம்மதமாய் சொல்லுகின்றேன்
சவூதிக்கு போகத்தான் வேண்டுமானால்
வீடு மட்டும் பாக்கி உண்டு அதையும் விற்று
வீதியிலே நிற்பதற்கு நானும் தயார் !!!

ஞாயிறு, டிசம்பர் 04, 2011

முதுமை

ஆடித் திறிந்த கால்கள்
அடங்கிக் கிடக்கிறது
முதுமை என்னை
ஆக்கிரமித்தபோது .....

எழுந்து
நடமாடப் பார்க்கிறேன்
விழுந்து
முடமாகி விடுவேனோ
என
பயமாக இருக்கிறது .....

சந்தோசங்களை
தொலைத்த நாட்களும்
உணர்வுகளை உறங்க வைத்த
உருப்படாத
அந்த ராத்திரிகளும்
என் மனதை
இன்னும்
அரித்துக்கொண்டே இருக்கிறது .......

என்ன வாழ்க்கை
வாழ்ந்துவிட்டேன்
என்னையே நான்
நொந்து கொள்கிறேன் ........

ஸ்பரிச உணர்வுகள்
என்னை
தூக்கிவிடப்பார்க்கிறது
பாழாய்ப்போன என்
உடம்பு மட்டும்
என்னை அப்படியே
அமுக்கிப் பிடிக்கிறது ......

பேசப் பார்க்கிறேன்
முடியவில்லை
பேச்சுகூட
என்னைப் போலவே
படுத்த படுக்கையாய்.......

உறவுகள்
என்னையே
உற்று உற்று பார்க்கிறார்கள்
எப்போது என்னை
தூக்கிப் போகலாம் என்ற
அவசரத்தில் ...........

ஆனாலும்
பழைய நினைவுகள் மட்டும்
என்னையே
சுற்றிச் சுற்றி வருகிறது
ஒரு
குட்டி போட்ட பூனையைப்போல........

முதுமை வரவேண்டும்
முதிர்ந்து போன
வாழ்க்கையை
நினைத்துப் பார்க்க ...........

என் இனியாள்


வான் வெளியில் தவழ்ந்து வரும் விண் மீனின்
வனப்பதனைக் கொண்ட தொரு மயிலாள்
தேனதனின் சுவையூட்டும் அதரங் கொண்ட
தேன் மதுரக் கலச மெந்தன் இனியாள்

கோல மயில் போலவளின் அழகும் மின்னும்
வேலனவன் படைப்பினிலே புதுமைப் பெண்ணாய்
காலமது போதாது இன்பங் கொள்ள
கண் மூடி துயில் கையிலும் அவளே முன்னே

கார் முகில் போல் கருங் கூந்தல் கலைந்திருக்கும்
நாருரித்த மரமதுபோல் பசுமை பொங்கும்
பார்தனிலே இவள் போல ஒருத்தி முன்னே
பார்வையிலே பட்டதில்லை உண்மை சொன்னால்

மான் விழியாள் பார்வயதோ மயங்க வைக்கும்
மருளுகின்ற விழிகளிலே நளினம் தோன்றும்
தேன் மொழியாள் பேச்சினிலே காமஞ் சொட்டும்
தெள்ளு தமிழ் நாவினிலே நடனம் ஆடும்

கள்ளியவள் கடைப் பார்வை கவர்ந்திழுக்கும்
அள்ளியவள் பொன் மேனி தழுவச் சொல்லும்
பள்ளியறைப் பாடமெல்லாம் எண்ணம் மூட்டி
கிள்ளி எந்தன் பால் மனதோ ஆவல் தூண்டும்