வெள்ளி, ஜனவரி 27, 2012

ஆசை மச்சான் எங்கு சென்றாய் ?

தொட்டுத் தாலி கட்டி
எட்டே வருஷத்தில்
பட்ட மரம் போல என்னை
பரிதவிக்க விட்ட மச்சான்
பாடையிலே போனதேனோ ?

என்
கொட்டும் கண்ணீரும்
உன்
குழி தேடி வந்துவிடும்
கோலமகன் நீ ஏனோ
பாதியிலே மடிந்து விட்டாய் !

கலகலன்னு பேசி என்னை
கலகலப்பாய் வச்ச மச்சான்
மொழுமொழுன்னு  நானிருக்க
திடுமென்று போனதேனோ ?

பிள்ளைத் தாச்சி என்று
என் வயிறு நிறைந்திருக்க
பெற்றவளைப் போல நீங்க
நாளெல்லாம் பார்த்தீங்க.....
ஏழு மாசம் முதற் கொண்டு
என் பிள்ளை இறங்கும் வரை
என் வேலை அத்தனையும்
இறுதி வரை செய்த மச்சான்
என்னை விட்டும் போனதேனோ ?

காலமெல்லாம் உன்னோடு
வாழ்வேண்டு  சொன்ன மச்சான்
என் மூச்சு போகும் முன்னே
உன் மூச்சு போனதேனோ ?

ருசியாக இல்லாமல்
எதையேனும் சமைத்தாலும்
மன
நிறைவோடு பாராட்டும்
பாச மச்சான் பிறிந்ததேனோ ?

என் பிள்ளை
என் மனைவி
என்று சொல்லி எந்நாளும்
எங்களையே சுற்றி வரும்
ஆசை மச்சான் எங்கு போனாய் ?

ஆறத் தழுவி என்னை
அன்பொழுக பார்த்த மச்சான்
கூடும் உன் நினைவினிலே
குமுறுதைய்யா என் உள்ளம் !!

இப்புவியில் நீ இன்றி
எப்படித்தான் நான் வாழ்வேன்
கொஞ்சம் பொறு கண்ணு மச்சான்
உன்னிடத்தில் என் உயிரும்
சீக்கிரமே வந்து விடும் !!!