செவ்வாய், டிசம்பர் 06, 2011

நானும் தயார்

அன்புள்ள அத்தானே ஆசிர்வாதம்
அஞ்சலின்று கண்டவுடன் அசந்தேவிட்டேன்
இருப்பதையும் கொடுத்துவிட்டு வருவதற்கு
இன்னுமொரு வாரத்தில் சரி வருமோ ?

"கொழும்பினிலே" தங்கி நிதம் நிற்பதனால்
கொடுத்திடுவான் ஏஜென்சி பணத்தை என்றீர்
கண்டறியாப் பயல்களெல்லாம் வேஷம் இட்டு
கழுத்தறுக்கும் ஆளாக ஏன்தான் போனீர் ?

வீட்டோடு காணியுடன் கடையொன்றும்
வாங்கிடலாம் என்றே நீர் எண்ணம் கொண்டீர்
கூட்டோடு இருந்ததெல்லாம் போனதனால்
கனவுகளில் மண்ணையள்ளி ஏன்தான் போட்டீர் ?

சங்கு மணி மாலையையே நிதமும் கேட்டு
சபிக்கின்றார் வாப்பாவும் தினமும் வந்து
சவடியுடன் காதணியும் போனாலென்ன
சின்னவளின் கழுத்துகூடமொட்டை இன்று !

முத்திரைக் கவர் ஒன்றும் வைத்தே உள்ளேன்
முழுப் பதிலை விபரமுடன் எழுதிடுங்கோ
தக்க பதில் இல்லையெனில் எந்தனுக்கு
இல்லை உங்கள் மனைவி என எண்ணிடுங்கோ!

சத்தியமாய் சம்மதமாய் சொல்லுகின்றேன்
சவூதிக்கு போகத்தான் வேண்டுமானால்
வீடு மட்டும் பாக்கி உண்டு அதையும் விற்று
வீதியிலே நிற்பதற்கு நானும் தயார் !!!

கருத்துகள் இல்லை: