திங்கள், ஏப்ரல் 07, 2014

எழுந்து விடு !

துணிந்திடு வாழ்வினில் துயரமில்லை
      தூயவர் நட்பினில் துன்பமில்லை
கனிந்திடும் அன்பும்  நிலைப்பதில்லை
      காமுக நட்பும் வளர்வதில்லை !


அணிகளாய் இணைந்திட யாருமில்லை
      ஆத்திரம் மட்டும் குறைவதில்லை
தனிநபர் கூக்குரல் கேட்பதில்லை
      தெருமுனை வரையும் வருவதில்லை !


அணிகலன் ஆடையில் கவர்ச்சியில்லை
      அணிந்தவர் நெஞ்சிலும் ஈரமில்லை
பணிந்திடு எவர்க்கும் தவறுமில்லை
      பாரினில் சிறப்பென வாழ்வதற்கு !


மலர்ந்திடும் பூக்களும் மணப்பதில்லை
      வளர்ந்திடும் மரங்களும் காய்ப்பதில்லை
வளர்ந்திட உனக்கொரு பாதையில்லை
      உயர்ந்திட உழைத்திடு கவலையில்லை !


அளந்தது உன்னை இழப்பதில்லை
      அளவிலும் நிறைவிலும் குறைவதில்லை
தளர்ந்திடும் தேகம் பொறுப்பதில்லை
      தடைவரும் முன்னே எழுந்துவிடு !!


                அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: