ஞாயிறு, ஜனவரி 29, 2017

விருத்தம் ..



கண்ணயரும் வேளைகளில் கலகம் செய்கிறாய் - என்
... கண்ணிரெண்டில் கிடந்துநீயும் குளித்து மகிழ்கிறாய்
எண்ணமெலா மென்னுயிரென் றேங்க வைக்கிறாய் - ஒரு
... எழுதாத புத்தகம்போ லென்னில் கிடக்கிறாய்
வண்ணவண்ணக் கலவைபூசி வந்து போகிறாய் - வரும்
... கனவிலெலாம் வர்ணஜாலம் காட்டி நிற்கிறாய்
தென்றலோடு கலந்துவந்து தொட்டுச் செல்கிறாய் - ஒரு
... துளித்தேனாய் என்னுயிரில் என்று மினிக்கிறாய் !

கொஞ்சிக்கொஞ்சி பேசும்போது குழந்தை யாகிறாய் - ஒரு
... குயிலைப்போல காதில்வந்து கான மிசைக்கிறாய்
அஞ்சியஞ்சி நடக்கும்போது அன்ன மாகிறாய் - சில
... அதிசயத்தி னதிசயமாய் என்னை வதைக்கிறாய்
அஞ்சனங்கள் சூழ்ந்தவிழியா லாட்டிப் படைக்கிறாய் - என்
... ஆளுமையின் விளிம்பினிலே நடந்து செல்கிறாய்
மிஞ்சிமிஞ்சிப் போனாலும் நீயும் நானும்தான் - நம்
... நெஞ்சிரெண்டில் கிடப்பதெல்லாம் காதல் சொர்க்கம்தான் !!

கருத்துகள் இல்லை: