சனி, அக்டோபர் 13, 2012

என் மாமி !

என் அருமை மாமிக்கு
என்ன என்ன செய்தாலும்
என்னையே பலி தீர்க்கும்
எண்ணத்தை யாது சொல்வேன் !

வகை வகையாய் கறி சமைத்து
மனம் மணக்க வைத்தாலும்
தொகை தொகையாய் குறை கூறும்
பாங்குள்ள மாமி இவள் !

சாப்பாட்டில் உப்பு இல்லை
சப்பென்று இருக்குதென்று
போடுகின்ற கூச்சலிலே
பக்கத்துக்கு வீடதிரும் !

சேலை எந்தன் கலைந்தாலும்
வேலையின்றி இருந்தாலும்
காளை அதன் திமிர் போல
சோலையம்மாள் பொங்கிடுவாள்!

திண்ணையிலே நானிருந்து
கண்ணைக் கொஞ்சம் அயர்ந்தாலும்
பண்ணையார் மகளோ என்று
பல நூறு கதைகள் சொல்வாள் !

காலையிலே போனவரு
மாலையிலே வருவாரே
வாசலிலே நின்றவரை
வழி நோக்கிப் பார்த்தாலும்
மோப்ப நாய் முகர்வது போல்
முகர்ந்து பின்னே வந்திடுவாள் !

அந்தி சாயும் நேரத்தில்
அவரருகே நானிருந்தால்
சிந்தனையே இல்லாமல்
பத்திரக் காலியாவள்!

காலையிலே குளித்து விட்டு
கல கலப்பாய் நான் வந்தால்
மலை முறிந்து போனதுபோல்
தலையினிலே அடித்துக்கொள்வாள் !

நான் மறு பிள்ளை பெற்றெடுக்க
மறுக்கின்ற என் மாமி
கருவுற்று நான் இருந்தால்
கஷ்டமடி எனக்கு என்பாள் !

இரண்டோடு போதுமென்று
இறுமாப்பாய் இழுபடுவாள்
முரண்பாடு கொள்வதிலே
முற்போக்குக் காரியவள் !

வயதாகிப் போச்சுதென்று
வழி விட்டுப் போனாலும்
தலை மேலே ஏறி நின்று
கரகாட்டம் ஆடுகிறாள் !

சித்தமே பிடித்து விடும்
போல் இருக்கு ஆண்டவனே
இருவரிலே ஒரு உயிரை
சீக்கிரமே எடுத்து விடு !!!!!

வியாழன், ஜூன் 21, 2012

தீயதை தீண்டாதே

கொற்றவனின் துணையின்றி கொள்ளா வாழ்வு
மற்றவனின் மருவலிலே சுகமாய்  ஆகா
சிற்றின்பப் பெண்டிர்தம் பொல்லா நோக்கு
சீவியத்தை சீரழிக்கும் தீதே தீதே !!

கட்டுக்கும் அடங்காத ஆவல் கொண்டு
சருகுவதால் தீதுனக்கு அறிந்து விடு
கூட்டுக்குள் அடங்குமுந்தன் மானமின்று
நாட்டுக்குள் பரவுவது சுலபம் அன்றோ !!

மனை மணக்க வந்தவளே என்பதனால்
மனையாளே என்றுனக்கு பெயரும் உண்டு
வினையாக இல்லாமல் நிந்தன் வாழ்வு
துணையோடு வாழ்வாங்கு வாழ்ந்தால் போதும் !!

மறுதளித்த வாழ்வெமக்கு வேண்டாம் கண்ணே
ஒருதலையாய் ஒன்றிணைந்து வாழ்ந்தால் வெற்றி
தறுதலையாய் வாழ்ந்துனது வாழ்வினையே
தறிகெட்டு வாழ்வதிலே சுகமே இல்லை !!!

வெள்ளி, ஜனவரி 27, 2012

ஆசை மச்சான் எங்கு சென்றாய் ?

தொட்டுத் தாலி கட்டி
எட்டே வருஷத்தில்
பட்ட மரம் போல என்னை
பரிதவிக்க விட்ட மச்சான்
பாடையிலே போனதேனோ ?

என்
கொட்டும் கண்ணீரும்
உன்
குழி தேடி வந்துவிடும்
கோலமகன் நீ ஏனோ
பாதியிலே மடிந்து விட்டாய் !

கலகலன்னு பேசி என்னை
கலகலப்பாய் வச்ச மச்சான்
மொழுமொழுன்னு  நானிருக்க
திடுமென்று போனதேனோ ?

பிள்ளைத் தாச்சி என்று
என் வயிறு நிறைந்திருக்க
பெற்றவளைப் போல நீங்க
நாளெல்லாம் பார்த்தீங்க.....
ஏழு மாசம் முதற் கொண்டு
என் பிள்ளை இறங்கும் வரை
என் வேலை அத்தனையும்
இறுதி வரை செய்த மச்சான்
என்னை விட்டும் போனதேனோ ?

காலமெல்லாம் உன்னோடு
வாழ்வேண்டு  சொன்ன மச்சான்
என் மூச்சு போகும் முன்னே
உன் மூச்சு போனதேனோ ?

ருசியாக இல்லாமல்
எதையேனும் சமைத்தாலும்
மன
நிறைவோடு பாராட்டும்
பாச மச்சான் பிறிந்ததேனோ ?

என் பிள்ளை
என் மனைவி
என்று சொல்லி எந்நாளும்
எங்களையே சுற்றி வரும்
ஆசை மச்சான் எங்கு போனாய் ?

ஆறத் தழுவி என்னை
அன்பொழுக பார்த்த மச்சான்
கூடும் உன் நினைவினிலே
குமுறுதைய்யா என் உள்ளம் !!

இப்புவியில் நீ இன்றி
எப்படித்தான் நான் வாழ்வேன்
கொஞ்சம் பொறு கண்ணு மச்சான்
உன்னிடத்தில் என் உயிரும்
சீக்கிரமே வந்து விடும் !!!