வியாழன், ஜனவரி 01, 2015

நாளெல்லாம் காணுகின்றேன் ...

நாணமோ நடைப்பி ணம்போல்
 நளினமோ புள்ளிக் கோலம்
ஊனமாய் உறவு எல்லாம்
 ஒன்றிடக் காண்ப தில்லை
வீணென வாதம் வைப்போர்
 வீதியில் வழக்கு மன்றம்
நானிதைக் காணு கின்றேன்
 நடைமுறை வாழ்வி லிங்கே

கூனலாய் கல்வி ஏட்டில்
 குழப்பமே பள்ளி தோறும்
கானலே அருவி என்று
 கனவினில் இளைஞர் கூட்டம்
நானெனத் திமிரி லுள்ளோன்
 நாடக மாடும் விந்தை
நாளெலாம் காணு கின்றேன்
 நடப்பதை அருகி ருந்து

வானமிங்கு விருந்து வைக்க
 வயல் வெளிகள் வரண்டிருக்க
கானகமும் களை இழந்து
 காட்சியெலாம் கண்ணி ருண்டு
வாய்மைகூட வளைந்து நிற்க
 வல்லமையே ஓங்கிப் பேச
மாயமென்ன நடக்கு தென்று
மாய்ந்தழுதே காணு கின்றேன்


- அஷ்பா அஷ்ரப் அலி -

கருத்துகள் இல்லை: