புதன், ஏப்ரல் 09, 2014

வெண்ணிறத்துக் கன்னி !

வார்த்தெடுத்த வனப்பினிலே வடிவழகைக் காட்டி
     வான்பரப்பில் வளம்வருவாள் 
வெண்ணிறத்துக் கன்னி
நேர்த்தியுடன் நித்திலத்தில் நிலவொளியாய் வீச
     நீல்கடலில் குளித்
தெழுவாள் நித்தமிந்த கள்ளி !

பார்தொடுத்த இடத்திலெல்லாம் பகலவனைப் போல
     பனிஇரவில் பாய்விரிப்பாள் தன்னொளியை ஈந்து
ஆர்ப்பரிக்கும் ஆவலினால் நாணம்வரும் வேளை
     நாணியவள்
முகமறைப்பாள் மேகத்திரைத் தொட்டு !

காலையிளம் பனியினிலே
கால்கழுகிப்  பின்னே
     கதிரவனைக் காணுமுன்னே நழுவிடுவாள் மெல்ல
சோலைக்கிளிக் கூட்டமெல்லாம் கூடி ; அவள்
     சார்ந்திருந்த சோகத்திலே கீதமெனப் பாட !

வேளையிது
விடியலெனச் சேவல்களும் கூவும்
     வாடிநின்ற பயிரும்புல்லும்  எழுந்துநின்று வாழ்த்தும்
மாலைவரை காத்திருக்க கண்கலங்கி நின்ற
     மங்கையந்த வெண்ணிலவாள் மனமிழந்து நடப்பாள் !


          அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: