வியாழன், ஏப்ரல் 17, 2014

வேண்டாம் இனவாதம் !

அவனிவந்த மதங்கள் எல்லாம்
   அன்பைத் தெளித்தது - அதன்
அழகில் நின்று வளர்ந்ததாலே
   அமைதி கண்டது - எங்கும்
   இமைகள் திறந்தது

தவமிருந்து வளர்ந்த மதம்
   தளிர்த்து நிற்குது - அதில்
தறுதலையாய் வளர்ந்த கிளை
   தனித்து வளருது - ஏனோ
   தொனியைத் தூக்குது

வேதமோதும் குருக்கள் இங்கு
   வாதம் கொள்வதால் - நாட்டில்
வேதனையின் தீ பரவும்
   வாசம் வருகுது - எங்கோ
   மோசம் நடக்குது

பிணங்கள் உண்ணும் மிருகமாகி
   போதன் நிற்கிறான் - மோதிப்
பிணக்குகளால் இனங்கள் இடை
   பகையை வளர்க்கிறான் - ஊதி
   புகையை வார்க்கிறான்

உயர்ந்து நிற்கும் வேதமிதும்
   உணர்வ தில்லையோ - உலகில்
உருவமற்ற இறையின் வேதம்
   உணரும் நாள்வரும் - கூட
   திணறும் நாள்வரும்

இன்னல் படும் இனத்தவரே
   இடிந்து கிடப்பதேன் - பிரிந்து
இயக்கம் இயக்கம் இயக்கமென
   சிதறிக் கிடப்பதேன் - மூக்கை
   சிந்தி நிற்பதேன்

வேதம் சொன்ன வாக்குகளில்
   வாதம் வைப்பதேன் - சேர்ந்து
வாசலுக்கு ஒன்று என்று
   வளைந்து நிற்பதேன் -  நிலையில்
   குலைந்து நிற்பதேன்


     அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: