வியாழன், ஜூன் 02, 2016

வருகிறதே சிறப்புத் திங்கள் !

எல்லாப் புகழும் நிறைந்தோனே
   ஏற்றம் பெற்றோ னுனையேநாம்
அல்லும் பகலும் தொழுகின்றோம்
   ஆற்றல் பெற்றோ னுனைநாடி

உள்ளும் புறமும் அறிந்தவனே
   ஓங்கும் மறையை யளித்தவனே
சொல்லால் செயலால் தினந்தோறும்
   சொர்க்கம் வேண்டித் துதிக்கின்றோம்


இன்னா ரிவர்தா னென்றின்றி
   எல்லார்க் கும்முன் அருளாலே
ஒண்ணா திருப்பார் அவர்க்கும்தான்
   ஓங்கி வழங்கும் வல்லோனே


எங்கும் நிறைந்தோன் உனதாற்றல்
   எண்ணிப் புகழ வருகிறதே
திங்கள் ரமழான் இகமெங்கும்
   தித்திப் புடனே உனைப்போற்ற


நன்றே அறங்கள் நாம்செய்ய
   நாயன் தந்தா னித்திங்கள்
ஒன்றிப் புரிவோம் நல்லறங்கள்
   ஓதிக் களிப்போம் அருள்மறையை


எண்ணிப் புகழ்வோ மிறையோனை
   ஏற்றம் பெறவே எம்வாழ்வில்
கண்ணீர் சிந்திக் கையேந்தி
   கனிவாய்க் கேட்போ மவனிடமே


இரப்பார்க் கீயும் கடமையினை
   இனிதே புரிவோ மின்முகமாய்
விரதம் மிருந்தே நற்கிரியை
   விருப்பம் போல நாம்செய்தே


பிறப்பால் சிறந்தோர் நமக்காக
   பிறந்த மாதம் ரமழானின்
சிறப்பை யறிந்தே சிந்தித்தே
   செயலால் காட்டி மகிழ்வோமே !

கருத்துகள் இல்லை: