வெள்ளி, ஜூன் 03, 2016

கடலன்னை !

அலையெனப்  பொங்கும் ஆழிதரும்
   அற்புதம்  நமக்குப்  பலவாகும்
விலையெனப்  போகும் நல்முத்தும்
   விளைப்பவள்  நமது கடலன்னை

தலைவிரித்  தாடிடும் தருணத்தில்
   தடல்புடல்  என்றே ஆடிடுவாள்
நிலைகுலைந்  தவளே நின்றாலும்
   நிம்மதி தரைக்கும் அவளன்றோ


பகலோன் வண்ணக் கதிர்புணர்ந்து
   பெருமழை தருவதும் கடலன்னை
தகவெனக் கொதிக்கும் வெப்பத்தால்
   தலைகவி ழாதாவள் கடலன்னை


இகத்தினி லலையும் பூங்காற்றும்
   இதமா யவள்மேல் படர்ந்துப்பின்
நிகரே யில்லாத் தேகசுகம்
   நித்தம் தருவதும் கடலன்னை


அறுசுவை யுணவுக் குயிராகும்
   ஆழிதரும் நல் உப்பாகும்
ஆறுகள் அமைதியில் வழிந்தோடி
   ஆறுத லடைவதும் இவள்மடியே


நிறைந்தவள்  இகத்தினில் முப்பங்கு
   நிலத்திடை  அளவோ  ஒருபங்கு
வரையறை யில்லா வளங்கொண்டே
   வாழ்பவள் நமக்குள் கடலன்னை !

கருத்துகள் இல்லை: