ஞாயிறு, ஜனவரி 29, 2017

புதிர் வெண்பா ..




வண்ணங் கறுத்திருப்பான் வாய்வளைந் துண்ணுழைவான்
கன்னக்கோல் கண்டால் கலங்குவோன்யார் ? - நன்றெனவே
கன்ன மிடாதபடிக் காப்பவனா மில்லத்தைக்
கன்னகங் கண்டதிரும் பூட்டு !


- அஷ்ஃபா அஷ்ரஃப் அலி -




மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்
19 hrs
#புதிர்வெண்பா
கவிஞர்களே! நேரிசை வெண்பாவின் இரண்டடிகளை எழுதிவிட்டேன். ஒரு புதிராக அந்த அடிகள் அமைந்துள்ளன. மீதமுள்ள இரண்டு அடிகளைத் தனிச்சீரிலிருந்து விடையாக எழுதுங்களேன்.
புதிர் வெண்பா - 1
**********************
வண்ணங் கறுத்திருப்பான் வாய்வளைந் துண்ணுழைவான்
கன்னக்கோல் கண்டால் கலங்குவோன்யார்?


விருத்தம் ...



கண்கெட்டு கிடக்குதடா உலகம் - காணும்
களமெல்லாம் நடக்குதடா கலகம்

கால்பட்ட இடமெல்லாம் குருதி - இனக்
கோளாறு இருக்கும்வரை உறுதி ..

உள்ளோர்க்கு ஒன்றிங்கு சட்டம் - உயர்
வில்லார்க்கு கிடைக்குதிங்கு பட்டம்

எல்லோர்க்கும் இரத்தநிறம் சிவப்பு - அதை
எண்ணாதோர் மனதிலேனோ கசப்பு ..

கண்கெட்ட விலைவாசி உயர்வால் - மக்கள்
கண்ணீரை அணைத்திங்கே அயர்வார்

புண்ணாகிப் போனோரும் உண்டு - தினம்
புழுதிவாரிப் போடுவோரும் உண்டு ..

ஆகாது என்றாலும் தேகம் - தினம்
காணாது என்றலறும் போகம்

வேகாது வாழ்வோர்க்கும் ஆசை - வெந்து
வேக்காடு ஆனோர்க்கும் ஆசை ...

மருட்பா !



துன்பத்தி லாழ்ந்தோரைத் தூற்றாது தொய்விலா
இன்பத்தில் வாழ்வோரே ஈவீர் இரப்பார்க்குப்
பாழும் வறுமையிலே பாடுபடு வோர்கண்டுத்
தாழுமவர் வாழ்வொளிரத் தாழ்திறந் தாலிங்கு
நிலையிலா வாழ்விலே நிலையெனத்
தலைகாக் குமேயித் தருமமுஞ் செய்கவே !

வெண்பா ..




கண்களில் பூத்தது காதலோ காமமோ
என்விழி நோக்கினாள் ஏனென - எண்ணிநான்
நெஞ்ச மினிக்க நெருங்கினே னன்னவள்
அஞ்சினின் றாள்பார் அழகு !

நேரிசை வெண்பா !



சுட்டுவிர லால்சுட்டச் சுட்டுமுனை மற்றவிரல்
தொட்டுநீ வாழ்வதையே தொட்டுணர்த்து - இட்டமுடன்
மற்றவரில் வேண்டுமுன்னில் அற்றதைநீ நாடாதே
கற்றதுவோ கைம்மண் ணளவு

- அஷ்ஃபா அஷ்ரஃப் அலி -


-
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்‎ to பைந்தமிழ்ச் சோலை (மரபு பூக்கள் மட்டும்)

#சொன்னார்கள்

ஒருவிரலால் பிறர்குற்றம் சுட்டும் போது
உன்பக்கம் மூன்றுவிரல் சுட்டி நிற்கும்
(தாரா பாரதி)

முதலில் என்னைத் திருத்திக்கொள்கிறேன்.
பிறகு மற்றவர்களைத் திருத்த முயல்கிறேன்.
(நபிகள் நாயகம்)

பிறரிடம் எதை எதிர்பார்க்கிறாயோ
நீ அதேபோல் இரு.
(யாரோ)

கற்றது கைம்மண்ணளவு., கல்லாதது உலகளவு
(ஔவையார்)




அன்பு நண்பர்களுக்கு! கவிஞர்களுக்கு! வணக்கம். இந்தப் பதிவில் கண்டுள்ள பொன்மொழிகளை நேரிசை வெண்பாவாக எழுத முயலுங்களேன்! சமயக் குரவர் நால்வர் பாடலைப் போல இதுவும் ஒரு பயிற்சியாக அமையும்

விருத்தம் ..



கண்ணயரும் வேளைகளில் கலகம் செய்கிறாய் - என்
... கண்ணிரெண்டில் கிடந்துநீயும் குளித்து மகிழ்கிறாய்
எண்ணமெலா மென்னுயிரென் றேங்க வைக்கிறாய் - ஒரு
... எழுதாத புத்தகம்போ லென்னில் கிடக்கிறாய்
வண்ணவண்ணக் கலவைபூசி வந்து போகிறாய் - வரும்
... கனவிலெலாம் வர்ணஜாலம் காட்டி நிற்கிறாய்
தென்றலோடு கலந்துவந்து தொட்டுச் செல்கிறாய் - ஒரு
... துளித்தேனாய் என்னுயிரில் என்று மினிக்கிறாய் !

கொஞ்சிக்கொஞ்சி பேசும்போது குழந்தை யாகிறாய் - ஒரு
... குயிலைப்போல காதில்வந்து கான மிசைக்கிறாய்
அஞ்சியஞ்சி நடக்கும்போது அன்ன மாகிறாய் - சில
... அதிசயத்தி னதிசயமாய் என்னை வதைக்கிறாய்
அஞ்சனங்கள் சூழ்ந்தவிழியா லாட்டிப் படைக்கிறாய் - என்
... ஆளுமையின் விளிம்பினிலே நடந்து செல்கிறாய்
மிஞ்சிமிஞ்சிப் போனாலும் நீயும் நானும்தான் - நம்
... நெஞ்சிரெண்டில் கிடப்பதெல்லாம் காதல் சொர்க்கம்தான் !!

சனி, ஜனவரி 28, 2017

வெண்பா ..

ஆற்றாத் துயரத்தி லாழ்ந்தோரைக் காணுங்கால்
தேற்றா திருக்காதே தொல்லுலகில் - சீற்றமாய்
மாற்ற முனக்கீந்தால் மாயவனோ ! நெஞ்சாரத்
தேற்றவரு வாரில்லைத் தேர் !

வஞ்சி விருத்தம் ..



வேண்டு மெனக்கோர் வரமென்றே
வேண்டித் தொழுதே னிறையோனைச்
சீண்டும் வினவ லதுவென்றோ
ஈண்டெ னக்குத் தரவில்லை!

விருத்தம் ..



தேனருந்தும் வண்டினமோ மலர்களோடு கொஞ்சும்
தேனிழக்கும் நிலையறிந்து மலர்களதும் கெஞ்சும் !
கானகத்து நடுவில்நின்று கோலமயில் ஆடும்
கண்டதனில் களிப்புற்று கானக்குயில் பாடும் !

ஊனமுற்றோர் உலகெங்கும் குமுறிமனம் துடிப்பார்
உதவிடநல் கரங்கொண்டோர் வேதம்தினம் படிப்பார் !
மானமதை இழந்தவராய் மாக்களவர் கூட்டம்
மமதையுடன் போடுகின்றார் மண்ணிலிங்கு ஆட்டம் !

வேரறுந்த உறவுகளே ஊர்நிறைந்து வாழும்
பார்தொடுத்த போரினைப்போல் உறவுமுறை சூழும் !
தாரமதை தள்ளிவைத்து தனதின்பம் சேர்ப்பார்
தள்ளாடும் நிலைவரவே தாரம்கரம் கோர்ப்பார் !!

வெண்பா ..

கற்றநற் கல்வியினைக் கற்றதுவே புண்ணியமாய்
மற்றோர்க்கு மூட்டி மகிழ்கின்றார் - கற்பிக்கும்
பேராசா னன்னவரைப் போற்றா திருப்பார்க்கு
வாராது வாழ்வில் வளம்

வஞ்சித் தாழிசை ..




சுயநலம் முள்ளவர்
மயங்கிடப் பேசியே
இயங்குவார் தேர்தலில்
வியப்பிதே எங்கிலும் !

உயர்நிலை கண்டவர்
துயர்தர அஞ்சிடார்
பயனிலா ஆட்சியே
பயக்குதே எங்கிலும் !

நடைமுறை வாழ்விலே
கடைநிலை நம்மையே
குடைகிறா ரின்னமும்
இடைஞ்சலே எங்கிலும் !

வெண்பா

கன்னி யிளமனதில் காலூன்றி விட்டதனால்
பின்னி எடுக்கின்றார் பெற்றவரும் - என்னுயிரே
துள்ளித் திரிகின்றே னுன்னினைவால் என்னைநீ
அள்ளியே சென்றிடுவாய் ஆங்கு !

புதன், ஜனவரி 25, 2017

இன்னிசை வெண்பா !

இட்டமரு தாணியினா லீர்கர முஞ்சிவக்க
கட்டழகா ளேன்மறைத்தாள் தன்முகத்தை - இட்டமுந்தான்
தொட்டு அணைக்காதே தொல்லை யெனக்கூறுஞ்
சிட்டு மொழியினது சீர்!

வாழ்விலே ...


வெண்பா !





பார்வை யொளிர்கையிலே பாராது மாமறையை
சோர்வில் கிடப்போர்தாம் சேர்ந்துணர - ஆர்வமுடன்
தானும் நிதந்தொழுது தன்பார்வை குன்றியவர்
காணும் முறைதனைக் காண்!

வெண்பா !

வாழ்வு சிறக்குமென்று வாழ்ந்தாலும் வயிறாற
ஏழ்மை சிரிக்கிறதே ஏளனமாய் - தாழ்வினிலே
நாளுங் கிடந்தாலும் நம்பிக் கைதருமிக்
கூழுக் குழைப்பதொன்றே குறி!

வெண்பா !

கன்னங்க றுத்தவள்தான் கட்டழகுக் காரியவள்
தன்னந் தனியாக நின்றவளை - என்னருகே
அள்ளி யணைத்திடவா வென்றேன்பார் வந்தவளோ
எள்ளிநகை யாடினா ளேன்?

செவ்வாய், ஜனவரி 24, 2017

ஊடலுண்டோ !







நீரசையும் குளத்தினிலே நின்ற வாறு
நினைவிழந்து நிட்பதுமேன் அல்லிப் பாவாய்
நாரசையாப் பொழுதினிலும் சிரிக்கும் முன்னை
நோகடித்தா ராரென்று சொல்வா யல்லி

ஊரறியக் கதிரவனும் உதிக்கும் பொழுதில்
உலகமெலாம் ஒளிருகின்ற வேளை தன்னில்
பேரறியாப் பிள்ளைபோல் பதுங்கிப் பின்னே
படபடத்து நிட்பதுமேன் பகிர்வாய் அல்லி

மாலைவரும் மதியாளின் மயக்கும் மொளியில்
மலர்வதெனச் சொல்கின்றார் உண்மை என்ன
ஓலையுனக் கனுப்பினாளோ ஒற்றை வரியில்
ஓர்மனமாய் காதலுண்டோ சொல்வாய் அல்லி !

வெண்பா !






பச்சையிளம் பாலகியுன் பால்முகத்தி லட்சணமாய்
அச்சமிலாப் புன்னகைதா னார்ப்பரிக்க - நிச்சயமாய்
ஏழ்மை பொருட்டல்ல என்றோதும் பாங்கதனில்
வாழ்வாய்நீ வாழ்வாங்கு வாழ் !

வெண்பா !

ஓவியத்துத் தேனடையில் ஓடுகின்ற தேனதனை
நாவினிக்கத் தேடுவதேன் நோவினையே - ஓவியத்தின்
பூக்கள் மணக்குமெனப் பூரிக்குங் காதலதன்
தாக்கத்தை நெஞ்சில் தவிர்!