சனி, பிப்ரவரி 25, 2017

மனைவியைக் கொஞ்சம் பாருங்கடா !மனையினைக் காத்திடும் மனைவியவள் - நல்
மாண்பினைத் தினமும் போற்றுங்கடா !
மனையினில் தீபச் சுடரொளியாய் - புது
மங்கலம் நிறைவதைப் பாருங்கடா !

துணையெனக் கண்டவள் துன்பமெலாம் - உன்
தோளினில் கிடப்பவள் காட்சியடா
அணைத்திட மட்டுமா அவளுனக்கு - இல்லை
அனைத்திலும் உனக்கே சொந்தமடா !

தன்னையே தந்தவள் தரணியிலே - தரம்
தாழ்ந்திட வாய்ப்பே இல்லையடா
பண்புடன் வாழ்பவள் நெஞ்சினிலே - புதுப்
பொலிவுடன் கிடந்தே வாழுங்கடா !

தன்னிக ரற்ற அன்பிலவள் - தினம்
தளும்பிடும் குமுறலைக் கேளுங்கடா
இன்முகத் தாலவள் கைகோர்த்து - என்றும்
இன்பக் கடலில் மூழ்குங்கடா !

கருத்துகள் இல்லை: