வியாழன், ஜூன் 19, 2014

மண்ணுறங்கும் பொன்னெடுத்து !!


கொல்லுதடி உன் நினைவு !!


ரமழான் திங்கள் !


பகலோன் செல்வன் ..


உன் புன்னகை ஏன் நெளிகிறது !


செவ்வாய், மே 13, 2014

கடல் அன்னை ..

அலையெனப்  பொங்கும்  ஆழிதரும்
  அற்புதம்  நமக்குப்  பலவாகும்
விலையெனப்  போகும்  நல்முத்தும்
  விளைப்பவள்  நமது  கடலன்னை
தலைவிரித்  தாடிடும்  தருணத்தில்
  தடல்புடல்  என்றே  ஆடிடுவாள்
நிலைகுலைந்  தவளே  நின்றாலும்
  நிம்மதி  தரைக்கும்  அவளன்றோ !


பகலோன்  வண்ணக் கதிர்புணர்ந்து
  பெருமழை  தருவதும்  கடலன்னை
தகவெனக் கொதிக்கும்  வெப்பத்தால்
  தலைகவி  ழாதவள் 
கடலன்னை
இகத்தினில்  அலையும்  பூங்காற்றும்
  இதமாய்  அவள்மேல்  படர்ந்துப்பின்
நிகரே  இல்லா  தேகசுகம்
  நித்தம்  தருவதும்  கடலன்னை !


அறுசுவை  உணவுக்  குயிராகும்
  ஆழிதரும்  நல்  உப்பாகும்
ஆறுகள்  நதிகள்  வழிந்தோடி
  ஆறுதல்  அடைவது   இவள்மடியில்
நிறைந்தவள்  இகத்தினில் 
முப்பங்கு
  நிலத்திடை  அளவோ 
ஒருபங்கு
இளைத்தோர்  இறங்கி  அள்ளிடத்தான்
  இல்லையென்ப  தில்லையிந்த  கடலன்னை !



       அஷ்பா அஷ்ரப் அலி 

புதன், ஏப்ரல் 30, 2014

முருங்கை !!

வேலியோரத்தில்
ஓரக் கண்ணால் பார்த்தபடி
நின்றிருந்தாள்
கூந்தல் நிறைந்த பூக்களோடு

தன்னையே
தானம் செய்து செய்தே
தளர்ந்திருந்தது அவள் மேனி


அள்ளிக் கொடுப்பதில்
மகராசிதான்
அந்த பச்சை உடம்புக்காரி

இன்றும்
சிணுங்கியபடியே நின்றிருந்தாள் !
காய்களையும்
இலைகளையும்
கிள்ளியது யாரென்று தெரியவில்லை

இலைகளையும்
காம்புகளையும்
ஒடிக்கும் விரல்களில்
குத்திவிடும் என்பதற்காக
முட்களை
வேண்டாம் என்று சொன்னவள்

அவளின்
மேனி எங்கும்
மருந்தின் வாடை
முதுகுத் தோலை உரித்தாலும்
புன்னகைப்பாள்
புண்ணியம் என்பதற்காக

தறித்தாலும்
தானாகவே தளிர்த்து
நடமாடத் தெரிந்தவள்

தன்னோடு
வந்து ஒட்டிக் கொள்ளும்
மயிர்ப் புழுக்கள்தான்
எல்லாமுமே என்று சொல்லி
அநாயாசமாகச் சிரிக்கின்றாள் ...


  அஷ்பா அஷ்ரப் அலி 

வெள்ளி, ஏப்ரல் 25, 2014

இறைவா உன் கருணையினால் ..

விண்ணுலகம்  மண்ணுலகம்  என்ப  தெல்லாம்
   வித்தகனே உனதாற்றல் தானே  அன்றி
வின்தொடுத்த  கோல்களுடன்  விடியும்  நாட்கள்
   வெளிச்சத்தால்  வெவ்வேறு  கோலம்  காட்டி
மண்ணவர்க்கும் 
மன்வாழும்  புழுக்கள்  பூச்சி
   மெய்தொடுத்த 
உயிர்கட்கு  ஊணும்   ஊட்டி
எண்ணிலிலா  வளமளித்து  இலங்கச்  செய்யும்
   ஏற்றமிகு  நாயன்யார்  உன்னை  அன்றி  !


இறப்பென்றும்  பிறப்பென்றும்  நிகழ்வ  தெல்லாம்
   இறைவாஉன்  அதிசயத்தில் எண்ணில்  ஒன்று
இரவென்றும்  பகலென்றும்  இயங்கச்  செய்து
   இருளுலகம் ஒளியுலகம்  படைத்துப்  பின்னே
நிரலிட்டு  நீகாட்டும்  அற்பு  தங்கள்
   நினையாத  நெஞ்சங்கள்  நித்தி  லத்தில்
நிரதியற்று  உன்றன்பால்  நிற்போர்க்  கெல்லாம்
   நேர்வழியைக்  காட்டிவிடு  கருணை  கொண்டு  !


தென்றலினால்   தெம்பளித்தாய்  திணறா  வண்ணம்
   தொல்லையற்ற  வாழ்வுமுறை  மறையில்  வார்த்து
வன்முறையில்  வாழ்ந்திடுவோர்  வீழ்ந்தோர்க்  கெல்லாம்
   மென்மனதாய்  மன்னிக்கும் வல்லோன்  நீயே
நன்னெறியைத்  தொடராதோர்  நடத்தை   கெட்டோர்
   என்றின்றி  எல்லோர்க்கும்  அருளால்  அளக்கும்
என்னிறைவா  உனதன்பைக்  கொண்டே  அவரின்
   இதயத்தை இலங்கச்செய்  உந்தன்  ஒளியால்  !


        அஷ்பா அஷ்ரப் அலி 

புதன், ஏப்ரல் 23, 2014

நூல்களை நேசி !!

பூக்களாய்
சிதறிக் கிடக்கும்
புத்தகப் பந்தலில்
கொஞ்சம் கிடந்து பார்
வாசிப்பின் வசீகரம்
உன்னை எட்டிப் பிடிக்கும்


நல்ல நல்ல நூல்களோடும்
தொடர்பு வை  நீ
திக்கித் திக்கி எழுதும்
வார்த்தைகள் கூட
உனக்கு அடிமையாகும்


வாசிப்பின் வாசம் புரிய
சுவாசிக்கும் நீ
வாசிப்போடும் நட்பு கொள்
உன்னோடு
கை கோர்த்து நடந்து வரும்


வசப்படாத
வார்த்தைகளும்
உனக்குள் பிரசவமாகும்
வாசிப்பின் வசியம் புரிந்தால்


வார்த்தைக் குழப்பத்தில்
வழுக்கி வழுக்கி
விழுகிறாயா
வாசிப்பு மழையில்
நனைந்து பார்


அறிமுகமில்லாத
சொற்கள் எல்லாம்
உன் நெஞ்சில் கிடந்து
ஊஞ்சல் ஆடும் ..

-- அஷ்பா அஷ்ரப் அலி  --  ( ஏப்ரல் 23 உலக புத்தக தினம் )

வியாழன், ஏப்ரல் 17, 2014

வேண்டாம் இனவாதம் !

அவனிவந்த மதங்கள் எல்லாம்
   அன்பைத் தெளித்தது - அதன்
அழகில் நின்று வளர்ந்ததாலே
   அமைதி கண்டது - எங்கும்
   இமைகள் திறந்தது

தவமிருந்து வளர்ந்த மதம்
   தளிர்த்து நிற்குது - அதில்
தறுதலையாய் வளர்ந்த கிளை
   தனித்து வளருது - ஏனோ
   தொனியைத் தூக்குது

வேதமோதும் குருக்கள் இங்கு
   வாதம் கொள்வதால் - நாட்டில்
வேதனையின் தீ பரவும்
   வாசம் வருகுது - எங்கோ
   மோசம் நடக்குது

பிணங்கள் உண்ணும் மிருகமாகி
   போதன் நிற்கிறான் - மோதிப்
பிணக்குகளால் இனங்கள் இடை
   பகையை வளர்க்கிறான் - ஊதி
   புகையை வார்க்கிறான்

உயர்ந்து நிற்கும் வேதமிதும்
   உணர்வ தில்லையோ - உலகில்
உருவமற்ற இறையின் வேதம்
   உணரும் நாள்வரும் - கூட
   திணறும் நாள்வரும்

இன்னல் படும் இனத்தவரே
   இடிந்து கிடப்பதேன் - பிரிந்து
இயக்கம் இயக்கம் இயக்கமென
   சிதறிக் கிடப்பதேன் - மூக்கை
   சிந்தி நிற்பதேன்

வேதம் சொன்ன வாக்குகளில்
   வாதம் வைப்பதேன் - சேர்ந்து
வாசலுக்கு ஒன்று என்று
   வளைந்து நிற்பதேன் -  நிலையில்
   குலைந்து நிற்பதேன்


     அஷ்பா அஷ்ரப் அலி 

புதன், ஏப்ரல் 09, 2014

வெண்ணிறத்துக் கன்னி !

வார்த்தெடுத்த வனப்பினிலே வடிவழகைக் காட்டி
     வான்பரப்பில் வளம்வருவாள் 
வெண்ணிறத்துக் கன்னி
நேர்த்தியுடன் நித்திலத்தில் நிலவொளியாய் வீச
     நீல்கடலில் குளித்
தெழுவாள் நித்தமிந்த கள்ளி !

பார்தொடுத்த இடத்திலெல்லாம் பகலவனைப் போல
     பனிஇரவில் பாய்விரிப்பாள் தன்னொளியை ஈந்து
ஆர்ப்பரிக்கும் ஆவலினால் நாணம்வரும் வேளை
     நாணியவள்
முகமறைப்பாள் மேகத்திரைத் தொட்டு !

காலையிளம் பனியினிலே
கால்கழுகிப்  பின்னே
     கதிரவனைக் காணுமுன்னே நழுவிடுவாள் மெல்ல
சோலைக்கிளிக் கூட்டமெல்லாம் கூடி ; அவள்
     சார்ந்திருந்த சோகத்திலே கீதமெனப் பாட !

வேளையிது
விடியலெனச் சேவல்களும் கூவும்
     வாடிநின்ற பயிரும்புல்லும்  எழுந்துநின்று வாழ்த்தும்
மாலைவரை காத்திருக்க கண்கலங்கி நின்ற
     மங்கையந்த வெண்ணிலவாள் மனமிழந்து நடப்பாள் !


          அஷ்பா அஷ்ரப் அலி 

திங்கள், ஏப்ரல் 07, 2014

எழுந்து விடு !

துணிந்திடு வாழ்வினில் துயரமில்லை
      தூயவர் நட்பினில் துன்பமில்லை
கனிந்திடும் அன்பும்  நிலைப்பதில்லை
      காமுக நட்பும் வளர்வதில்லை !


அணிகளாய் இணைந்திட யாருமில்லை
      ஆத்திரம் மட்டும் குறைவதில்லை
தனிநபர் கூக்குரல் கேட்பதில்லை
      தெருமுனை வரையும் வருவதில்லை !


அணிகலன் ஆடையில் கவர்ச்சியில்லை
      அணிந்தவர் நெஞ்சிலும் ஈரமில்லை
பணிந்திடு எவர்க்கும் தவறுமில்லை
      பாரினில் சிறப்பென வாழ்வதற்கு !


மலர்ந்திடும் பூக்களும் மணப்பதில்லை
      வளர்ந்திடும் மரங்களும் காய்ப்பதில்லை
வளர்ந்திட உனக்கொரு பாதையில்லை
      உயர்ந்திட உழைத்திடு கவலையில்லை !


அளந்தது உன்னை இழப்பதில்லை
      அளவிலும் நிறைவிலும் குறைவதில்லை
தளர்ந்திடும் தேகம் பொறுப்பதில்லை
      தடைவரும் முன்னே எழுந்துவிடு !!


                அஷ்பா அஷ்ரப் அலி 

ஞாயிறு, ஏப்ரல் 06, 2014

மனிதம் மட்டும் ..

ஆற்றின் கரையினில் ஆட்டமிடும் - நாணல்
அழுது புலம்பி நிற்பதில்லை
சேற்றில் பிறந்தே வளர்ந்தாலும் - நாற்று
சோற்றின் உரிமை கேட்பதில்லை

காற்றே உயிர்களின் பிரதானம் - தலைக் 
கனத்தால் அதுவும் சுழல்வதில்லை
ஊற்றாய்ப் பெருகும் ஆவலினால் - இங்கு
உழலுவ தேனோ மனிதஇனம்

நாட்களின் இணைப்பே ஆண்டாகும் - நன்றே
நாட்களைக் கழிப்போர் யாருமில்லை
பாற்கடல் என்றன் மனதென்போர் - பாவப்
பாறைதன் நெஞ்சென நினைப்பதில்லை

தேற்றிடத் தகுந்தோர் கண்முன்னே - கண்டும்
ஊட்டிட எவரும் இங்கில்லை
தேற்றா திருந்தால் கவலை யில்லை - தூற்றித் 

துரத்துவ தொன்றே என்கவலை 



  -- அஷ்பா அஷ்ரப் அலி  --

செவ்வாய், ஏப்ரல் 01, 2014

தீயெனச் சுடுவதெல்லாம் ...

ஆழ்கடலில் முத்தெடுக்க குளிப்போர் எல்லாம்
          ஆனந்தம் கண்டதில்லை அவர்தம் வாழ்வில்
ஏழ்மையெனும் இடுக்கினிலே விழுந்தோர் எல்லாம்
          எழுந்திருப்ப தெப்போதோ அலறல் தினமும் !

சூழ்நிலையே சீர்திருத்தம் காணச் செய்யும்
          சேர்ந்திருப்போர் காட்டுகின்ற கபடப் போக்கில்
ஊழ்வினையால் நிறைந்திட்ட உலகம் என்று
          உருப்படத்தான் போகிறதோ தெரியா தய்யா !

சூழ்ந்து
எழும் துயரத்தைக் காண்போர் நிதமும்
          சோர்வடைந்து  வாழுகிறார் சரிதான் ஆனால்
பாழ்படுத்தும் விலைவாசி ஏற்றங் கண்டு
          பதறாதோர் பாரினிலே எவர்தான் உண்டு !

கால்தடுக்கி வாழ்வினிலே கவிழ்ந்தோர் இங்கு
          கணிசம்தான் என்றாலும் காதல் தொல்லை
நூல்தொடுத்து வளருவதால் நம்மில் வாழ்வோர்
          நாரெனவே
கிழிந்தவர்தான் நூற்றில் பாதி !

ஆல்தொடுத்த விழுதுகளாய் ஆயிரம்தான் ஆனாலும்
          அன்பிழந்த உறவுகளே ஆங்காங்கு வாழ
தேள்நிறைந்த விசமதுபோல் தேகம்நிறை நஞ்சில்
          தோல்கொடுத்து வாழுவதாய் காட்டுவதே புதுமை !


   அஷ்பா அஷ்ரப் அலி 

வியாழன், மார்ச் 27, 2014

மேன்மையில் பிறந்த ...

நீரிடை நெளியும் புழுவும்
நிலத்தடி வாழும் எறும்பும்
தேனடை ஒழுகும் தேனின்
தேம்பலில் குளிக்கும் தேனீ

கானிடை திரியும் விலங்கும்
கடலினில் வாழும் மீனும்
ஊணினைத் தேடி உழைக்கும்
உயிர்களின் நியதி  அதுவே !

வீணென வாழ்ந்திட எதுவும்
உலகினில் பிறப்பது மில்லை
வீண்பகை கொண்டே  எந்த
உயிரினம் வாழ்வது  மில்லை

மேன்மையின் பிறப்பே மனிதன்
மாள்வது மாயையின் கனவில்
தாண்டவ மாடிடும் பகைமை
தனக்கென கொண்டவன் இவனே !


      அஷ்பா அஷ்ரப் அலி

   

புதன், மார்ச் 26, 2014

வேலி மீறிய கிளைகள் ..

வேலி மீறிய கிளைகளை
வெட்டி விடு
வெட்டாமல் விடு எனக்கென்ன

ஆடாத கிளைகள் கூட
அழுது கொண்டே இருக்கின்றன
அமைதியாக


ஆயிரம் எண்ணங்கள்
அதனதன் மனதினில்

அங்குசத்திற்கு
அடங்குமென்றால் யானை
ஆள் பலத்தால்
முடியாமலா போய்விடும் என்ன


கொஞ்சம் இரு
ஏன்
இப்படி வியர்க்கிறது உனக்கு  ?


    அஷ்பா அஷ்ரப் அலி

சனி, மார்ச் 22, 2014

துடித்தெழு !!

வாழ்கையின்  விளிம்பில்  நின்று
        வழுக்கியே  வீழும்  போது
தாழ்வினில்  கிடக்கும்  மனிதன்
       தனக்கென  கொண்ட  வாக்கில்
வாழ்வினில்  எல்லா  மிங்கு
       வருவது  பொதுவே 
வென்று
தோல்வியைத்  தனக்குத்  தானே
       தேற்றிடக்  காண்போ  மிங்கு !

வெண்பனித்  தூங்குங்  காலை
       விடியலே  கண்  திறக்க
எண்ணிலா  பறவை  எல்லாம்
       எழுந்தவர்  இரையைத்  தேட
கண்படும்  தூர  மெல்லாம்
       காரியம்  பல  விருக்க
முன்கடன்  பின்  கடன்போல்
       முடங்கியே  இவன்  கிடப்பான் !

அல்லலே  அல்லல்  என்று
       அகத்தினில்  கிடந்தா  லொன்றும்
இல்லவே  இல்லை  என்றும்
       இகத்தினில்  ஈடு  னக்கு
தொல்லைகள்  சூழும்  முன்னால்
       துடித்தெழு  வில்லாய்  வளை
எல்லையே  அற்ற  இன்பம்
       இனியுனக்  கென்றே  உணர்  !!


    அஷ்பா அஷ்ரப் அலி 

வியாழன், மார்ச் 20, 2014

நீ அறிவாயோ !!

கடற்கரை மணலில் காலாற  -  சற்று
     களைப்பினை தீர்க்க நடந்திடநீ
படர்ந்துள மனதின் கவலையெலாம்  - நொடிப்
     பொழுதினில்  மாறுவ  தறிவாயோ

விடலைகள் காணும் கனவெல்லாம்  -  வெறும்
     ஒளியென வந்தே மறைந்துவிடும்
கடலென பொங்கும் ஆசைகளில்  - இங்கு
     கவிழ்ந்தவர் கோடி அறிவாயோ

படலையின் கண்ணில் பாவையர்கள்  - வெறும்
     பார்வையி  னாலே  பசியாற
இடர்துடைத்  தவரின்  கைகோர்க்க  - நம்
     மிளைஞரிங் கில்லை அறிவாயோ

ஆடவர் அன்பினில் தாரமதும்  -  அவள்
     அருகினில் கிடந்தே அளைந்தவனும்
தேடலில் தரித்திரத் துணைதேடி  -  வாழ்வை
     தொலைத்தவர் ஆயிரம் அறிவாயோ

தடமெனப் பதிந்த துயரெல்லாம்  - தம்
     தலையினில் கிடந்து  சிணுங்குகையில்
திடமுடன் உருகித் தம்மிறையை - தலை
     வணங்கிட நிம்மதி அறிவாயோ


     -- அஷ்பா அஷ்ரப் அலி --

புதன், மார்ச் 19, 2014

பிடித்திருந்தால் சொல்லு ..

கண்களினால் கலகம்செய்து
கட்டிவைத்தாய்  என்னை - என்
கருவிழியில் கிடப்பதனால்
தொட்டிலிட்டேன்  உன்னை

ஆவலினால் காதல்செய்து
அலையுதடி மனசு  -  தினம்
ஆளுகின்ற உன்னினைவால்
விளைவதுண்மை பித்து




பூவிழியால் இழுத்துவைத்து
பிழிந்ததெல்லாம்  போதும் - உன்
பூவிதழால் புன்னகைத்து
பிடித்திருந்தால் சொல்லு

இளநெஞ்சில் கிடந்தபடி
இடிப்பவளே நில்லு  - உனை
இழப்பதெனில் சம்மதமே
இயலுமெனில் கொல்லு ...

-- அஷ்பா அஷ்ரப் அலி --

செவ்வாய், மார்ச் 11, 2014

எப்பக்கம் திரும்புவது ?

அகிலத்தின் அதிபதியே உன்னை அன்றி 
அருளாளன் எமக்கிங்கு யார்தான் உண்டு 
முகிழ்க்கின்ற துன்பங்கள் முடிச் சவிழ்த்து
முனைவின்றி எமையிங்கு காத் தருள்வாய் 

வேதித்தார் தரணியிலே வினயம் கொண்டு 
வேற்றுமுனை உருவாகும் நிலையை மாற்றி 
தாகித்தே உந்தன்பால் தர்க்கம் பண்ணத் 
தவித்திடுவோர் நெஞ்சத்தை குளிரச் செய்வாய் 

வேதத்தின் வாய்மையினை உணர்ந்தோர் இங்கு 
வாதத்தில் வாழுகிறார் வாய்மை மாற்றி 
ஆதன்போல் அறிந்தோரால் அல்லல் எங்கும் 
ஆளாளுக் கொன்றொன்று சொல்லும் சொல்லால் 

வாதாடி வாதாடி வாசல் தோறும் 
வெவ்வேறு சின்னங்கள் உந்தன் பெயரால் 
ஏதேனும் ஓர்வழியில் செல்லச் சொல்லும் 
என்மனதை எப்படித்தான் தேற்றிக் கொள்வேன் ...

அஷ்பா அஷ்ரப் அலி

ஞாயிறு, மார்ச் 02, 2014

மூக்குத்தி ( குறும்பா )

கண்ணுக்குள்ளே  கிடப்பவளே  ராசாத்தி
கன்னத்திலே  குத்துதென்றேன்  மூக்குத்தி

     கனன்றுவந்த  வேளையிலும்
     கழற்றிவைத்தாள்  மின்னலென

கிண்ணத்திலே  மூக்குத்தியை  வெட்கத்தில் !




                     அஷ்பா அஷ்ரப் அலி