சனி, பிப்ரவரி 25, 2017

நேரிசை வெண்பா ..

காணக் கதைபேசுங் காந்தவிழிக் கண்ணிரண்டும்
ஆனவரை பேசுதடி அச்சமின்றி - நாணத்தில்
நாளும்நீ நில்லாது நான்படும் பாட்டைவந்து
பாழுமென் நெஞ்சினிலே பார் !

எண்சீர் விருத்தம் ...



நற்சீராய் நீரோடி வயல்விளையக் கண்டேன்
... நாற்றெல்லாம் தலைநிமிர்த்தி சிரிப்பதையும் கண்டேன்
முற்றியநெற் கதிரறுக்கும் கிளிகளையும் கண்டேன்
... முழுநிலவின் ஒளியினிலே சிதறியநெல் கண்டேன்
உற்சாகம் இழந்தோராய் உலகினரைக் கண்டேன்
... ஊஞ்சல்கட்டி ஆடுகின்ற இனவாதம் கண்டேன்
குற்றமிழைத் தோரெல்லாம் தப்புவதைக் கண்டேன்
... கொள்கையிலே நிற்பவர்கள் குமுறுவதைக் கண்டேன் !


தற்பெருமை கொண்டவரைத் தரணியிலே கண்டேன்
... தலைவிரித்து ஆடுகின்ற பொல்லாங்கைக் கண்டேன்
கற்பனையில் வாடுகின்ற குமரிகளைக் கண்டேன்
... கண்ணீரில் ஏழையவர் இன்னலினைக் கண்டேன்
மாற்றார்தம் மனைவியரில் வீழ்ந்தவனைக் கண்டேன்
... மனையினிலே கிடப்பவளை மறந்தவனைக் கண்டேன்
ஆற்றாத துயரத்தில் வாழ்பவரைக் கண்டேன்
... அவரவரின் கண்ணீரில் ஆயிரத்தைக் கண்டேன் !

புதுக் கவிதை ....





கள்ள முள்ள மனதினில்
உள்ள தெல்லாம் கருப்புதான்
நல்ல உள்ள முள்ளவர்
இல்லை யிங்கு உண்மைதான்

அள்ளு கின்ற நிலைவரின்
உள்ள தெல்லா மள்ளுவார்
சொல்லு கின்ற வார்த்தையில்
சொல்லி ழுக்குச் சுமத்துவார்

வெள்ளை யுள்ள முள்ளவர்
உள்ள தெனில் எம்மிலே
கல்லில் வெட்டி அவர்பெயர்
எல்லைக் கல்லாய் நாட்டுவோம் !

புதுக் கவிதை ..



ஒரு
குழந்தையைப் போலக்
கொஞ்சியபடியே பேசுகிறாய்
நகத்தைக்
கடித்தபடியே சிரிக்கிறாய்

இமைகள் சுழற்றி
கதை சொல்கிறாய்
இல்லையென்று இல்லை
எல்லாமே அழகுதான்

உன்
தோள் தொட்டுப்
பேசும்போது மட்டும்
சரிந்து விழாத
முந்தானையை
சரிசெய்து கொள்வாயே
மிஞ்சிவிடுகிறது !

வாழ்வில் ...



அன்புள்ளங் கொண்டோரே மக்கள் - நட்
பண்பில்லா தோரெல்லாம் மாக்கள்
அன்னத்தின் இடையூறே விக்கல் - அதன்
ஆதிக்கம் நிறைந்தாலே சிக்கல்

கன்னத்தின் அடையாளம் முத்தம் - அதைக்
கடைந்தாலே தினமேறும் பித்தம்
எண்ணத்தின் ஏக்கம்தான் காதல் - அது
ஏற்காத நிலையேதான் சாதல்

வண்ணத்தின் சேர்க்கைதான் காட்சி - பெரும்
வம்புகளின் கூட்டுறவே சூழ்ச்சி
பிண்டங்கள் இணைவதுவே புணர்ச்சி - மனம்
பிணைந்தின்பம் காண்பதுவே மகிழ்ச்சி

மேகத்தின் சேர்க்கைதான் மின்னல் - தேகம்
மோகத்தில் வீழ்ந்தாலே இன்னல்
போகத்தின் துள்ளல்தான் துன்பம் - வெற்றிப்
பெருக்கத்தின் உணர்வேதான் இன்பம் !

மனைவியைக் கொஞ்சம் பாருங்கடா !



மனையினைக் காத்திடும் மனைவியவள் - நல்
மாண்பினைத் தினமும் போற்றுங்கடா !
மனையினில் தீபச் சுடரொளியாய் - புது
மங்கலம் நிறைவதைப் பாருங்கடா !

துணையெனக் கண்டவள் துன்பமெலாம் - உன்
தோளினில் கிடப்பவள் காட்சியடா
அணைத்திட மட்டுமா அவளுனக்கு - இல்லை
அனைத்திலும் உனக்கே சொந்தமடா !

தன்னையே தந்தவள் தரணியிலே - தரம்
தாழ்ந்திட வாய்ப்பே இல்லையடா
பண்புடன் வாழ்பவள் நெஞ்சினிலே - புதுப்
பொலிவுடன் கிடந்தே வாழுங்கடா !

தன்னிக ரற்ற அன்பிலவள் - தினம்
தளும்பிடும் குமுறலைக் கேளுங்கடா
இன்முகத் தாலவள் கைகோர்த்து - என்றும்
இன்பக் கடலில் மூழ்குங்கடா !

வெள்ளி, பிப்ரவரி 24, 2017

காவடிச் சிந்து ( 3 )



சின்னக்கு ழந்தைநீ தங்கமே - நீ
செல்லுமி டங்களில் பங்கமே - உன்
செவ்வழ கானதோ ரங்கமே - இதைச்
சிதைப்பாரடி வதைப்பாரடி
இழப்பாயடி நிலைப்பாடிது
சிந்தனை யோடேநீ எங்குமே - தினம்
சென்றுவந் தால்மனம் பொங்குமே !

கண்ணீரால் சொல்லுமென் சொல்லையே - காணக்
கன்னிப்பெண் ணாகநீ யில்லையே - உனைக்
காத்துவ ளர்ப்பதுந் தொல்லையே - என்
கனவோபல நனவாகுது
கனியேயிது கலிகாலமே
கண்ணெதிர் காண்கிறேன் பிள்ளையே - இங்கு
காமுக ரால்பெருந் தொல்லையே !

கடலன்னை ....



அலையெனப் பொங்கும் ஆழிதரும்
அற்புதம் நமக்குப் பலவாகும்
விலையெனப் போகும் நல்முத்தும்
விளைப்பவள் நமது கடலன்னை
தலைவிரித் தாடிடும் தருணத்தில்
தடல்புடல் என்றே ஆடிடுவாள்
நிலைகுலைந் தவளே நின்றாலும்
நிம்மதி தரைக்கும் அவளன்றோ !


பகலோன் வண்ணக் கதிர்புணர்ந்து
பெருமழை தருவதும் கடலன்னை
தகவெனக் கொதிக்கும் வெப்பத்தால்
தலைகவி ழாதவள் கடலன்னை
இகத்தினி லலையும் பூங்காற்றும்
இதமா யவள்மேல் படர்ந்துப்பின்
நிகரே யில்லாத் தேகசுகம்
நித்தம் தருபவள் கடலன்னை !


அறுசுவை யுணவுக் குயிராகும்
ஆழிதரும் நல் உப்பாகும்
ஆறுகள் அமைதியில் வழிந்தோடி
ஆறுத லடைவதும் இவள்மடியே
நிறைந்தவள் இகத்தினில் முப்பங்கு
நிலத்திடை அளவோ ஒருபங்கு
வரையறை யில்லா வளங்கொண்டே
வாழ்பவள் நமக்குள் கடலன்னை !

காவடிச் சிந்து ( 2 )





கூடிநீ வாழ்ந்திடு கண்ணே - உயிர்
கூடுக ளைந்திடு முன்னே - என்றும்
குடியாதிரு குலையாதிரு
வடிவாயொரு விடிவேவரக்
கொழிக்கும் - வாழ்வு - செழிக்கும் !

கொள்கைக ளோடேநீ நின்று - கொண்ட
கொள்கைதான் வாழ்வென்ற னென்று - நீ
குறியாயிரு குனியாதிரு
வறியோனென வளையாதிரு
குளிர்வாய் - வாழ்வில் - மிளிர்வாய்!

காவடிச் சிந்து ( பா .. 1 )



அஞ்சனங்கள் சூழ்ந்தவிழி யோடு - ஒரு
ஆரணங்கைக் கண்டதனால் பாடு - தினம்
அன்னநடைப் போட்டுவரும்
சின்னயிடைக் காணமனம்
ஆறும் - அதன்வா - யூறும் !

கொத்துமலர்க் கூந்தலிலே சூடி - ஒரு
கோலமயில் போல்வருவா ளாடி - தினம்
கொஞ்சுமொழிப் பேசுமிதழ்
மிஞ்சிவிடும் பேரழகைக்
கூட்டி - ஆவல் - ஊட்டி !

சின்னவிழிப் பார்வையினால் சீண்டி - பலர்
சிந்தையையும் நாள்முழுதுந் தீண்டி - அவள்
செவ்வழகைக் காண்பவரில்
எவ்வயதும் தான்பதறச்
செய்யும் - அதுவே - மெய்யும் !

காதில் வந்து பாடு ...



மலர்களிலே கால்நனைத்து
நடந்து வந்தாயா - அதன்
அழகையெலாம் விரல்நுனியில்
கோர்த்து வந்தாயா !

இளநெஞ்சில் கிடந்துநீயும்
ஆள வந்தாயா - என்
ஈரநெஞ்சில் கிடந்துநாளும்
நனைய வந்தாயா !

புலவர்களின் குளத்தினிலே
குளிக்க வந்தாயா - அவர்
பொன்னெழுத்தில் மிளிரவெனப்
பிறந்து வந்தாயா !

இளந்தென்ற லோடுநீயும்
கலந்து வந்தாயா- உன்
காதலைஎன் காதினிலே
சொல்ல வந்தாயா !

காவடிச் சிந்து ..



ஊமையராய் வாழ்ந்திடாது இங்கு - இனி
ஊளையிடு வோர்க்குஊது சங்கு - பெரும்
ஊழலிலே உண்டுநிதம் சூழநம்மை யாள்பவரால்
ஓலம் - ஏழ்மைக் - கோலம் !

சீமையிலே வாழ்வதுபோல் வாழ்ந்து - நமை
சீர்குலையச் செய்தவரைச் சூழ்ந்து - நாம்
தீர்த்திடுவோம் தேர்தலிலே ஊரிணைந்து ஒன்றுபடத்
தீரும் - வளமும் - சேரும் !

மண்ணைக் காப்போம் ..



தானத்தைத் தரையெங்கும் பயிரிட்டுத் - தினம்
தளிர்க்கின்ற ஈனத்தைக் களை எடுப்போம்
வானத்தை வரச்சொல்லி மண்ணைக்காக்க – எங்கும்
வளர்கின்ற மரங்கட்கு காவல் நிற்போம்


கானகத்தை கையோடு இணைத்தபடி - வரும்
கார்மேகக் கூட்டத்தை மகிழச் செய்வோம்
ஊனத்தில் வீழ்ந்தோரை விழிக்கச்செய்ய - ஒன்றி
ஊரூராய் சென்றேனும் விளக்கம் சொல்வோம் !


பொன்னிறைந்த பூமியிலே கண்ணுறங்கும் - நல்
பொன்வளத்தை பொக்கிசத்தைத் தேடிக் காப்போம்
வன்மமென வாய்கிழியக் கத்துங்கூட்டம் - அவர்
மென்மனதாய் ஆகும்வரை பொறுமை காப்போம்



என்னிருகண் மணியிந்த நாடுஎன்று - இங்கு
எல்லோரும் வாய்விட்டுச் சொல்லச் செய்வோம்
தென்னையுடன் தேயிலையும் விளையும்பூமி - நாம்
தொன்றுதொட்டு வாழ்வதென உரக்கச் சொல்வோம் !

இன்னிசை வெண்பா ..

மையிருட்டி லும்உன்றன் மாயவிழி பேசுவதைக்
கையடங்கி நீகிடக்கக் காண்பேனே மெய்யுருகி
ஐயமின்றி என்நெஞ்சில் ஆள்கையிலும் நானறிவேன்
தையலுன்றன் கண்ணின்சா டை !

வியாழன், பிப்ரவரி 16, 2017

வளையற் சிந்து ...


கல்வியதைக் கற்றிடுவாய்
கசடறவே நாளும் - உன்
கனவுகளும் மீளும் - தினம்
கற்பதனால் சூழும் - நல்ல
காலமுன்னில் கனிந்துவந்து
கண்ணெதிரே வீழும் !

கல்வியுனக் களித்தவரைக்
காலமெலாம் போற்று - அவர்
காலடியில் ஊற்று - தினம்
கண்ணியத்தி லேற்று - இது
கற்றறிந்த கல்விமான்கள்
கற்றுத்தந்த கூற்று !

சிந்து ( இலாவணி )



நெம்பதுபோல் நாள்முழுதும்
நேரடியா யுன்னினைவே
நெஞ்சினிலே குத்துதடிப்
பெண்ணே ! பெண்ணே !

செம்பவள வாய்திறந்து
சேதியொன்னு சொல்லுவந்து
சேர்ந்திருப்போ மிக்கணமே
கண்ணே ! கண்ணே !

கண்குளிரக் காட்சிகளே
கண்ணேவுன் கண்களிலே
காணநிதம் கண்ணெதிரே
வாடீ ! வாடீ !

பெண்ணழகுப் பூத்திருக்கும்
பொய்கையடி உன்னழகில்
பேரின்பம் கொள்ளவுனைத்
தாடீ ! தாடீ !

என்னிருகண் னின்மணிபோல்
என்றுமுனைக் காத்திடுவேன்
ஏறெடுத்துப் பாரடிநீ
என்னை ! என்னை !

அன்னமதைப் போல்நடந்து
ஆடிவந்தால் வாசலுக்கு
ஆவலுடன் ஏந்திடுவேன்
உன்னை ! உன்னை !

ஒரு விகற்ப நேரிசை வெண்பா ..

கொட்டுகின்ற வெய்யிலிலே கொப்புளங்கள் ஏராளம்
சொட்டு மழையில்லாத் தொல்லையிது - வெட்டவெளிப்
பொட்டல்போ லில்லம் ; புழுக்கமாம் பாய்விரிக்க
எட்டாத்தூ ரத்தில் இவள் !

நெல்மணிகள் ...



காலையிளங் கதிரொளியில்
குளித்திருக்கும் புல்லும் - அந்த
கருக்களிலும் கண்திறக்கும்
கதிர்நிறைந்த நெல்லும் !

வாலையிளங் குமரிகளாய்
வயல்பரப்பில் எங்கும் - வடி
வழகுகாட்டி நெல்மணிகள்
வனப்பெடுத்துப் பொங்கும் !

சோலைக்கிளிக் கூட்டங்களோ
சுதிதொடுத்துப் பாடும் - அந்த
சுகத்தினிலே நெல்மணிகள்
சதிமறந்து ஆடும் !

செவ்வாய், பிப்ரவரி 14, 2017

உன்னோடு நான் ...

வான்மேகக் கூட்டத்தில்
வீடொன்று வேண்டும் - அதில்
என்னோடு நீவந்து
குடியேற வேண்டும் - தேன்
நிலவோடு நீநின்று
கதைபேச வேண்டும் - வண்ண
நிலவதுவும் உன்னெழிலில்
முகம்மூட வேண்டும் - இந்த
வின்பூக்கள் ஒவ்வொன்றும்
உனைப்பார்க்க வேண்டும் - இங்கே
மண்வாழும் மாந்தர்க்கு
உன் ஒளிவீச வேண்டும் !

உலக முன்னை வெறுக்கும் ...



நேசமில் லாமல் இருந்திடலாம்
.. நெருக்கடி யின்றியும் இருந்திடலாம்
வேசமிட் டெவனும் இருந்துவிட்டால்
.. வெறுத்தே உலகம் உமிழ்ந்துவிடும் !


அணிகல னின்றி இருந்திடலாம்
.. அவதியி லாமலும் இருந்திடலாம்
துணிவில் லாமல் இருந்துவிட்டால்
.. துன்பம் உன்னைத் துரத்திவரும் !


கலகம் தவிர்த்தும் இருந்திடலாம்
.. களவில் லாமலும் இருந்திடலாம்
கலக்கம் கொண்டே இருந்துவிட்டால்
.. காலம் உன்னைக் கவிழ்த்துவிடும் !


அலைச்ச லிலாமல் இருந்திடலாம்
.. அலுப்பில் லாமலும் இருந்திடலாம்
உழைப்பில் லாமல் இருந்துவிட்டால்
.. உலகம் உன்னைக் கேலிசெயும் !