வியாழன், பிப்ரவரி 16, 2017

நெல்மணிகள் ...



காலையிளங் கதிரொளியில்
குளித்திருக்கும் புல்லும் - அந்த
கருக்களிலும் கண்திறக்கும்
கதிர்நிறைந்த நெல்லும் !

வாலையிளங் குமரிகளாய்
வயல்பரப்பில் எங்கும் - வடி
வழகுகாட்டி நெல்மணிகள்
வனப்பெடுத்துப் பொங்கும் !

சோலைக்கிளிக் கூட்டங்களோ
சுதிதொடுத்துப் பாடும் - அந்த
சுகத்தினிலே நெல்மணிகள்
சதிமறந்து ஆடும் !

செவ்வாய், பிப்ரவரி 14, 2017

உன்னோடு நான் ...

வான்மேகக் கூட்டத்தில்
வீடொன்று வேண்டும் - அதில்
என்னோடு நீவந்து
குடியேற வேண்டும் - தேன்
நிலவோடு நீநின்று
கதைபேச வேண்டும் - வண்ண
நிலவதுவும் உன்னெழிலில்
முகம்மூட வேண்டும் - இந்த
வின்பூக்கள் ஒவ்வொன்றும்
உனைப்பார்க்க வேண்டும் - இங்கே
மண்வாழும் மாந்தர்க்கு
உன் ஒளிவீச வேண்டும் !

உலக முன்னை வெறுக்கும் ...



நேசமில் லாமல் இருந்திடலாம்
.. நெருக்கடி யின்றியும் இருந்திடலாம்
வேசமிட் டெவனும் இருந்துவிட்டால்
.. வெறுத்தே உலகம் உமிழ்ந்துவிடும் !


அணிகல னின்றி இருந்திடலாம்
.. அவதியி லாமலும் இருந்திடலாம்
துணிவில் லாமல் இருந்துவிட்டால்
.. துன்பம் உன்னைத் துரத்திவரும் !


கலகம் தவிர்த்தும் இருந்திடலாம்
.. களவில் லாமலும் இருந்திடலாம்
கலக்கம் கொண்டே இருந்துவிட்டால்
.. காலம் உன்னைக் கவிழ்த்துவிடும் !


அலைச்ச லிலாமல் இருந்திடலாம்
.. அலுப்பில் லாமலும் இருந்திடலாம்
உழைப்பில் லாமல் இருந்துவிட்டால்
.. உலகம் உன்னைக் கேலிசெயும் !

ஊற்றாக நானுக்கு ..



ஆற்றாத துயரமெல்லாம் - தினம்
... அழுது என்னில் புரள்கிறதே
காற்றாக நானிருந்தால் - உன்
... காதில் வந்து சொல்லிடுவேன் !

ஊற்றாக நானிருக்க - ஒளி
... விளக்காக நீ இருக்க
ஏற்றாத தீபமெல்லாம் - இங்கு
... இருந்தால்தான் நமக்கு என்ன !

தேற்றாத இதயங்களே - தினம்
... தூற்றி எனைச் சிரிக்கையிலே
போற்றுகிறேன் கிளியேவுன் - வைர
... வாய்மொழியே பலம் எனக்கு !

ஒயிற் கும்மி ...

கட்டுக்க டங்காத காதலி னாலிளங்
கன்னியர் போக்கினைப் பாருங்க டி
கனவேயிது கறையேதரு (ம்)
நிலையாதது தினமேயினி
கட்டுடன் வாழ்ந்திங்கு மாளுங்க டி!

இருவிகட்ப நேரிசை வெண்பா ..

ஊருக்குள் வந்தாலே உன்வாசம் வீசுதடி
நேருக்கு நேராக நோக்கிடவே - நூறுமுறை
நானும் வருகின்றேன் நாளு முனைத்தேடி
தேனுண்ணும் வண்டிணைப் போல் !

ஞாயிறு, பிப்ரவரி 12, 2017

ஹைக்கூ ....

ஊற்றெடுத்தது
உனக்கும் எனக்கும்
கசிந்தது ஊருக்குள் ...!

எண்சீர் விருத்தம் ..



காய் - காய் - மா - தேமா



விண்ணுலகம் மண்ணுலகம் விழிக்கச் செய்ய
... விளக்கேற்றி வருபவனே பகலோன் செல்வன்
கண்ணுறங்கிக் கடல்குளித்துக் காட்டும் காலைக்
... கதிரொளியின் அற்புதங்கள் கொஞ்சம் அல்ல
மண்ணிலிங்கு வாழுகின்ற உயிர்கள் தொட்டு
... மான்புறயிக் கதிரோனின் ஒளியே அன்றி
எண்ணிலிலா இயற்கைஎழில் இருந்தும் மென்ன
... எத்திசைக்கும் திங்களொளி தானே வேண்டும் !


ஒளியளித்த களைப்பினிலே கதிரோன் மெல்ல
... ஒலிகடலில் கால்நனைத்து நடப்பான் பின்னே
களிநடனம் ஆடிஆடி மதியாள் வானில்
... கார்இருளைக் கிழித்துவரத் தன்கை வீசிக்
கிலிதொடுத்த பறவையினம் காக்கை கூட்டம்
... கீச்சிட்டே தானடையும் தத்தம் கூட்டில்
குளிர்நிலவின் இளமையிலே இரவும் துள்ளும்
... குமரியவள் முகம்பார்த்தே மேகம் ஓடும் !

கும்மிச் சிந்து ..



செக்கச்சி வந்தவள் செங்கனி வாயிதழ்
செந்தளிர்ப் போடுதான் வந்துநின் றாள்
வெக்கத்தி லென்முன்னே வேல்விழி யாலவள்
வெட்டியே யேதேதோ சொல்லநின் றாள் !


பக்கத்தில் நின்றவள் பார்வையின் வீச்சினில்
பாதிவு யிர்கையில் வந்தது போல்
சொக்கினே னென்னிலே ! சுந்தர முள்ளதா ?
சொல்லுங்கள் தோழரே உள்ளது போல் !

குறும்பா ..



நாடெங்கும் மின்சார வெட்டு - தினம்
நள்ளிரவில் நடமாடும்
நுளம்புகளோ நமைத் தொட்டு !

வீடெங்கும் எண்ணையிட்ட தட்டு - அதில்
விளையாட நுளம்புகளோ
விருப்பமுறும் மதி கெட்டு !

இயலுமெனில் கொல்லு ..



கண்களினால் கலகம்செய்து
கட்டிவைத்தாய் என்னை - என்
கருவிழியில் கிடப்பதனால்
தொட்டிலிட்டேன் உன்னை !

ஆவலினால் காதல்செய்து
அலையுதடி மனசு - தினம்
ஆளுகின்ற உன்னினைவால்
ஆவதுண்மைப் பித்து !

பூவிழியால் இழுத்துவைத்துப்
பிழிந்ததெல்லாம் போதும் - உன்
பூவிதழால் புன்னகைத்துப்
பிடித்திருந்தால் சொல்லு !

இளநெஞ்சில் கிடந்தபடி
இடிப்பவளே நில்லு - உனை
இழப்பதெனில் சம்மதமே
இயலுமெனில் கொல்லு !

நொண்டிச் சிந்து ..


பட்டணம் போகாத டி - அங்குப்
பட்டுத் தெறிக்குது வெய்யில டி
கட்டணங் கேட்பாரங் கே - நாம்
காலாறக் குந்துங்க ழிப்பறைக் கே !

ஆயிர மாயிரந் தான் - அங்கே
ஆனந்த மாங்காங்கு உண்மையுந் தான்
நோயினில் வாழ்வதைப் போல் - தினம்
நொந்துதான் வாழ்கிறார் நோவினை யால் !

பட்டதைச் சொல்லிவிட் டேன் - பட்ட
பாட்டினைப் பாட்டிலே பாடிவிட் டேன்
இட்டமு னக்குவுண் டேல் - ஒரு
எட்டுநீ போயங்கு பாருபுள் ளே !

கும்மிச் சிந்து



நெஞ்சுக்கு ளாயிரம் ஆசைக ளோடுது
நேரிழை யேயுன்றன் எண்ணத்தி லே
கெஞ்சுகி றேனுனைக் கேளடி கொஞ்சம்நீ
கொஞ்சிம கிழ்ந்திட லாமிங்கு வா !

நெஞ்சுக னக்கையில் நித்தமு முன்முகம்
நேசத்தி லென்முன்னே நிற்குத டி
அஞ்சுவ தெல்லாமே ஆவிபி ரிந்திடும்
ஆசைக ளாதிக்கஞ் செய்கையி லே !

இரு விகற்ப நேரிசை வெண்பா

பாட்டெழுத வந்தாலே பைங்கிளியே உன்னினைவின்
தேட்டத்தில் நிற்குதடி என்பேனா - கூட்டத்தில்
பாடநான் சென்றாலும் பாடாது தேடுகிறேன்
வாடவிடா தென்னருகே வா !

கும்மிச் சிந்து



பத்துக்குப் பத்தெனப் பாதிநி லத்தினைப்
பாவிக்கு ழந்தைகள் பங்குவைக் க
சொத்துக்கள் சேர்த்திடப் பட்டயென் பாட்டினைச்
சுத்தமாய்க் கண்டவ ராருமில் லை !

நித்தமு மிங்குநான் நித்திரை யின்றியே
நேர்த்தியில் சேர்த்தவை தானித லாம்
மெத்தவும் மேனியில் முத்திய நோயினால்
எத்தனைக் காலம்நா னிங்கிருப் பேன் ?

நொண்டிச் சிந்து ...



அந்தியில் கண்டவள் தான் - என்
அன்பினைச் சொன்னதும் அஞ்சினா ளேன்
பந்தினத் தாரிடம் போய் - என்
பாசத்தைச் சொன்னாளோ பக்குவ மாய் ?

திங்கள், பிப்ரவரி 06, 2017

வெண்பா ...

கண்டு களிப்பதற்குக் கண்ணேவுன் காந்தவிழி
ஒன்றிங்கு போதுமடி ஊருக்குள் - நின்றென்னை
நேசங் கொளச்செய்த நேரிழையே உன்விழிக்குள்
நேசத்தோ டென்னை நிறுத்து !

சிந்துப் பா ..

தெம்மாங்குப் பாட்டொன்று பாட- கண்ணே
தெம்பாக என்னோடு சேர்ந்தேநீ யாட
வம்பாகிப் போனாலும் போகும் - உனை
வம்பலர்க் காணாமல் நின்றாடு போதும் !

சிந்துப்பா ..ஆனந்தக் களிப்பு



தூளியி லென்னைநீ போட்டு - உன்
துன்பத்தைச் சொல்லியே பாடுவாய் பாட்டு
நூலிடைச் சேலைக்குள் நொந்து - உன்
நோவினைக் கண்டுத விக்கிறேன் வெந்து

ஆகாத வார்த்தையு மில்லை - அம்மா
ஆராரோ பாடிட ஆனந்த மில்லை
நோகாத வாறென்னைப் போட்டு - நொடி
ஒன்றேனும் பாடுநீ நல்லொரு பாட்டு !

வெண்பா ....

நல்லா ரெவரோ நமக்கிடையே நானிலத்தில்
பொல்லா தவர்முகமே பொங்குதிங்கே - உள்ளாரும்
வல்லா ரவருமே வாழுகிறார் வாழ்வினிக்க
அல்லாதார் அல்லாதார்த் தான் !

சிந்துப்பா ...ஆனந்தக் களிப்பு

நாளாந்தம் நன்றாகத் தேடி - அதை
நாசத்தி லன்றாடங் கள்ளுண்டே ஆடிப்
பாலாறு பாய்கின்ற தென்று - பாவி
பாயின்றிக் காய்கின்றான் பாதையி லின்று

ஒரு விகற்ப நேரிசை வெண்பா ..

உள்ளத்தை ஈந்துனக்(கு) ஓயா துளைச்சலடி
முள்ளாகத் தைக்கின்றாய்! மோதுகிறாய் - உள்ளத்தில்
கள்ளத்தி லாருண்டோ காதோடு காதாய்ச்சொல்
கள்ளக்கோ லம்வேண்டாம் கேடு !

நேரிசை வெண்பா ...

கண்ணாடி முன்னின்று கண்ணுக் குமைதீட்டி
வண்ணக் கிளிபோல வந்தால்நீ - என்னுடனே
அத்தானின் தொப்பையினால் ஆகாப் பொருத்தமடி
முத்தேநீ ! போநடந்து முன்

இயல்பு ...



கடலும் நதியும் பேசுவதைக்
... கண்ணால் கண்டோர் எவருமில்லை
கடக்கும் காற்றோ மரங்களுடன்
... கலந்தே பேசும் கேட்பதில்லை
நடக்கும் நிலவோ மேகத்துடன்
... நடந்தே பேசும் தெரிவதில்லை
அடக்கம் நிறைந்த மனிதமுகம்
... அலையெனப் பாய்வது தெரிந்துவிடும்

இரவும் பகலும் இரக்கமுடன்
... இனிதே பேசிப் பிரிந்துவிடும்
பறக்கும் பூச்சிப் பறவையெலாம்
... பாடிக் கூடி இணைந்துவிடும்
நெருப்பும் காற்றும் பகையின்றி
... நேரம் வந்தால் சேர்ந்துவிடும்
பொறுப்பில் லாதவன் கைகளிலே
... பொறுப்புகள் வந்தால் உறங்கிவிடும்

சனி, பிப்ரவரி 04, 2017

விருத்தம் ..



ஆகாயம் பூமியெங்கும் காற்று அலையுது
... அன்றிலெலாம் பனைமடலில் கூடு கட்டுது
கார்கால மேகமெலாம் கலைந்து ஆடுது
... கசிந்துவரும் மழைக்குஅது கான மிசைக்குது
ஊர்கோல மாககிளி உயரப் பறக்குது
... ஒன்றுக்கொன் றுறவாடிப் பாடி மகிழுது
ஊதாரி மனிதமனம் உறங்கிக் கிடக்குது
... ஒற்றையிலே நின்றுவாழ தருணம் பார்க்குது !


பூக்களெலாம் புன்முறுவல் பூத்து நிற்குது
... பொல்லாத மனிதமுகம் பொரிந்து கருகுது
ஏக்கங்கள் குடிசைகளில் எழுந்து நடக்குது
... ஏளனங்கள் கைபிடித்து நடந்து செல்லுது
தூக்கத்தில் ஆறறிவோ துவண்டு கிடக்குது
... துரத்திவரும் துன்பங்களோ தலையி லேறுது
மூர்க்கத்தில் வருந்துன்பம் பார்க்கத் தவறுது
... முடிவில்லா சிக்கலிலே பகைமை ஓங்குது !

விருத்தம் ..



வானிலோடும் வெண்ணிலவை யாரழைத்தது - அது
வேதனையால் ஏனதனின் முகம் மறைத்தது
'தேனிலவு ' என்றழைத்து மாந்தர்களிப்பதால் - அது
தன்பெயரை தரக்குறைவு என்று நினைத்ததோ !
தென்றலதை தொட்டுப்பார்க்க யார்முனைந்தது - அது
தரித்திடாமல் அங்குமிங்கும் அலைந்து ஓடுது
தழுவுகின்ற மேனியெங்கும் பயந்து உரசுது - இந்த
தரணியிலே மனிதரென்றால் அஞ்சி யொடுங்குது !

கடல்நீரில் கைநனைத்து கலகம் செய்ததார் - அது
கரைபுரளும் அலைகளிடம் சொல்லி யழுதது
அடங்கிடாத அலைகள்கூட சீற்றங்கொள்ளுது - தன்
ஆத்திரத்தை அள்ளிவீச தருணம் பார்க்குது !
வாடுகின்ற உள்ளங்களை நீ மறப்பதால் - உனை
வாழவைக்கும் இதயங்கூட கோபங் கொள்ளுது
ஆடுகின்ற ஆட்டமெல்லாம் காணுமிதயமும் - அது
ஓடுகின்ற செயல்நிறுத்தி உன்னைக் கொல்லுது !

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா ..

நல்லா ரெவரோ நமக்கிடையே நானிலத்தில்
பொல்லா தவர்க்கேதான் பொற்காலம் - உள்ளாரும்
வல்லா ரவருமே வாழுகிறார் வாழ்வினிக்க
இல்லா தவர்க்கிழிவே இங்கு

ஒற்றிலா வெண்பா ..

நாளு முனையேநா னாடாத நாளிலையே
கேளு கிளியேநீ கேடெதுவோ - மூளுதடி
வாழநீ வாராயோ மாளுத லோயுறுதி
பால ரதியே பணி !

வெள்ளி, பிப்ரவரி 03, 2017

பாராட்டு ....


இருவிகற்ப நேரிசை வெண்பா ..

பள்ளி கொளத்தூண்டும் பால்முகத்துக் காரிகையை 
அள்ளிப் பருகிடவே ஆவலுறும் - கள்ளியவள் 
காந்த விழியினிலே கள்ளுண்டோ நானறியேன் 
சாந்தமுகம் பேசுவதே சான்று

ஹைக்கூ



அக்காவின் கைவளையல்தான்
தேடிக் களைத்து விட்டேன்
அடகுக் கடையை

வியாழன், பிப்ரவரி 02, 2017

புதிர்_வெண்பா 2



கையிருக்கும் காலில்லை கைப்பிடி யில்லாமல்
பையோ டிருப்பவனார் பைங்கிளியே - மெய்யுடையார் 
மேலங்கி போலணியும் மேலாடை யாம்சட்டை 
மேலாத்த லோடுஉம் மேல் !

இன்னிசை வெண்பா ..

நன்றேசெய் நானிலத்தில் நல்வாழ்வு வாழ்வதெனில்
அன்றே லமர்ந்துநீ ஆங்குறங்கு ! தன்னார்வத்
தொண்டாற்றுந் தொண்டர்க்குத் தொல்லையினைத் தாராமல்
ஒன்னா திருந்தே உழல் !

எண்சீர் விருத்தம் ..



காய் - காய்  - மா - தேமா :


மாலையிளங் கதிரொளியில் கண்டேன் அந்த
... மங்கைமுகம் மலரத்தான் கண்ணில் என்றன்
சோலைநிறைப் பூக்களென மலர்ந்தே நெஞ்சில்
...சொப்பனத்தில் கூட அவள் சிரிப்பா ளென்னில்
மாலைவரும் வேளைதனில் மயக்கம் கண்ணில்
...மங்கைமுகம் தான்காணத் துடிக்கும் நெஞ்சம்
பாலையவள் பார்த்திடவே பதறும் மெண்ணம்
...பாழ்மனதில் படுத்திருப்பாள் பாரா தென்னை !

இனம்காணாத் துன்பத்தீ இதயந் தொட்டே
...இக்கணமும் எரிகிறதே ; எரிந்தே வெந்த
மனங்கட்குள் மொட்டவிழ்ந்த காதல் மாயை
... மனங்கொத்திச் செல்வதுவோ ஒற்றைக் காதல்
அனல்சேர்ந்து விளையாடும் அன்பில் வீழ்ந்து
...அலைமோதிச் சாகின்றா ரதுவே உண்மை
தினவெடுத்த நெஞ்சத்தின் கண்கள் கண்டே
... தினமென்னைக் கொல்லுகிறாள் தீயாய் வந்து !

வருத்தம் எனக்குள் ...



கடுப்போ டிருக்கும் அப்பா - தேளின்
கொடுக்கா யிருக்கும் அம்மா
மிடுக்கில் சிரிக்கும் அக்கா - வேலித்
தடுப்பா யிருக்கும் அண்ணா

தொடுத்த காதல் எனக்குள் - ஓங்கி
ஒடுக்கம் காணும் நிலையில்
ஒடுங்கும் மென்றே எண்ணி - ஒரு
நடுக்கம் மெனக்குள் தினமும் ..!

சமநிலை மருட்பா ( கைக்கிளை )



கன்னக் குழிதொடுத்தாள் கண்டு கதிகலங்கி
என்னைப் பறிகொடுத்தே ஏங்குகிறே னன்னவளே
வாழ்விலென் தாரமாய் வந்திடேல்
மாழ்குவே னோவென மனத்திலே கிலியே!

வெண்பா ..

பொன்னும் நகையும் பொருட்டல்ல கண்ணேவுன்
புன்னகையே போதுமடி பூமியிலே - என்றவர்தான்
தன்நினை வின்றித் தவிக்கின்றா ரென்னெதிரே
என்நிலை காண்பவ ரார் ?

ஞாயிறு, ஜனவரி 29, 2017

புதிர் வெண்பா ..




வண்ணங் கறுத்திருப்பான் வாய்வளைந் துண்ணுழைவான்
கன்னக்கோல் கண்டால் கலங்குவோன்யார் ? - நன்றெனவே
கன்ன மிடாதபடிக் காப்பவனா மில்லத்தைக்
கன்னகங் கண்டதிரும் பூட்டு !


- அஷ்ஃபா அஷ்ரஃப் அலி -




மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்
19 hrs
#புதிர்வெண்பா
கவிஞர்களே! நேரிசை வெண்பாவின் இரண்டடிகளை எழுதிவிட்டேன். ஒரு புதிராக அந்த அடிகள் அமைந்துள்ளன. மீதமுள்ள இரண்டு அடிகளைத் தனிச்சீரிலிருந்து விடையாக எழுதுங்களேன்.
புதிர் வெண்பா - 1
**********************
வண்ணங் கறுத்திருப்பான் வாய்வளைந் துண்ணுழைவான்
கன்னக்கோல் கண்டால் கலங்குவோன்யார்?


விருத்தம் ...



கண்கெட்டு கிடக்குதடா உலகம் - காணும்
களமெல்லாம் நடக்குதடா கலகம்

கால்பட்ட இடமெல்லாம் குருதி - இனக்
கோளாறு இருக்கும்வரை உறுதி ..

உள்ளோர்க்கு ஒன்றிங்கு சட்டம் - உயர்
வில்லார்க்கு கிடைக்குதிங்கு பட்டம்

எல்லோர்க்கும் இரத்தநிறம் சிவப்பு - அதை
எண்ணாதோர் மனதிலேனோ கசப்பு ..

கண்கெட்ட விலைவாசி உயர்வால் - மக்கள்
கண்ணீரை அணைத்திங்கே அயர்வார்

புண்ணாகிப் போனோரும் உண்டு - தினம்
புழுதிவாரிப் போடுவோரும் உண்டு ..

ஆகாது என்றாலும் தேகம் - தினம்
காணாது என்றலறும் போகம்

வேகாது வாழ்வோர்க்கும் ஆசை - வெந்து
வேக்காடு ஆனோர்க்கும் ஆசை ...

மருட்பா !



துன்பத்தி லாழ்ந்தோரைத் தூற்றாது தொய்விலா
இன்பத்தில் வாழ்வோரே ஈவீர் இரப்பார்க்குப்
பாழும் வறுமையிலே பாடுபடு வோர்கண்டுத்
தாழுமவர் வாழ்வொளிரத் தாழ்திறந் தாலிங்கு
நிலையிலா வாழ்விலே நிலையெனத்
தலைகாக் குமேயித் தருமமுஞ் செய்கவே !

வெண்பா ..




கண்களில் பூத்தது காதலோ காமமோ
என்விழி நோக்கினாள் ஏனென - எண்ணிநான்
நெஞ்ச மினிக்க நெருங்கினே னன்னவள்
அஞ்சினின் றாள்பார் அழகு !

நேரிசை வெண்பா !



சுட்டுவிர லால்சுட்டச் சுட்டுமுனை மற்றவிரல்
தொட்டுநீ வாழ்வதையே தொட்டுணர்த்து - இட்டமுடன்
மற்றவரில் வேண்டுமுன்னில் அற்றதைநீ நாடாதே
கற்றதுவோ கைம்மண் ணளவு

- அஷ்ஃபா அஷ்ரஃப் அலி -


-
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்‎ to பைந்தமிழ்ச் சோலை (மரபு பூக்கள் மட்டும்)

#சொன்னார்கள்

ஒருவிரலால் பிறர்குற்றம் சுட்டும் போது
உன்பக்கம் மூன்றுவிரல் சுட்டி நிற்கும்
(தாரா பாரதி)

முதலில் என்னைத் திருத்திக்கொள்கிறேன்.
பிறகு மற்றவர்களைத் திருத்த முயல்கிறேன்.
(நபிகள் நாயகம்)

பிறரிடம் எதை எதிர்பார்க்கிறாயோ
நீ அதேபோல் இரு.
(யாரோ)

கற்றது கைம்மண்ணளவு., கல்லாதது உலகளவு
(ஔவையார்)




அன்பு நண்பர்களுக்கு! கவிஞர்களுக்கு! வணக்கம். இந்தப் பதிவில் கண்டுள்ள பொன்மொழிகளை நேரிசை வெண்பாவாக எழுத முயலுங்களேன்! சமயக் குரவர் நால்வர் பாடலைப் போல இதுவும் ஒரு பயிற்சியாக அமையும்

விருத்தம் ..



கண்ணயரும் வேளைகளில் கலகம் செய்கிறாய் - என்
... கண்ணிரெண்டில் கிடந்துநீயும் குளித்து மகிழ்கிறாய்
எண்ணமெலா மென்னுயிரென் றேங்க வைக்கிறாய் - ஒரு
... எழுதாத புத்தகம்போ லென்னில் கிடக்கிறாய்
வண்ணவண்ணக் கலவைபூசி வந்து போகிறாய் - வரும்
... கனவிலெலாம் வர்ணஜாலம் காட்டி நிற்கிறாய்
தென்றலோடு கலந்துவந்து தொட்டுச் செல்கிறாய் - ஒரு
... துளித்தேனாய் என்னுயிரில் என்று மினிக்கிறாய் !

கொஞ்சிக்கொஞ்சி பேசும்போது குழந்தை யாகிறாய் - ஒரு
... குயிலைப்போல காதில்வந்து கான மிசைக்கிறாய்
அஞ்சியஞ்சி நடக்கும்போது அன்ன மாகிறாய் - சில
... அதிசயத்தி னதிசயமாய் என்னை வதைக்கிறாய்
அஞ்சனங்கள் சூழ்ந்தவிழியா லாட்டிப் படைக்கிறாய் - என்
... ஆளுமையின் விளிம்பினிலே நடந்து செல்கிறாய்
மிஞ்சிமிஞ்சிப் போனாலும் நீயும் நானும்தான் - நம்
... நெஞ்சிரெண்டில் கிடப்பதெல்லாம் காதல் சொர்க்கம்தான் !!

சனி, ஜனவரி 28, 2017

வெண்பா ..

ஆற்றாத் துயரத்தி லாழ்ந்தோரைக் காணுங்கால்
தேற்றா திருக்காதே தொல்லுலகில் - சீற்றமாய்
மாற்ற முனக்கீந்தால் மாயவனோ ! நெஞ்சாரத்
தேற்றவரு வாரில்லைத் தேர் !

வஞ்சி விருத்தம் ..



வேண்டு மெனக்கோர் வரமென்றே
வேண்டித் தொழுதே னிறையோனைச்
சீண்டும் வினவ லதுவென்றோ
ஈண்டெ னக்குத் தரவில்லை!

விருத்தம் ..



தேனருந்தும் வண்டினமோ மலர்களோடு கொஞ்சும்
தேனிழக்கும் நிலையறிந்து மலர்களதும் கெஞ்சும் !
கானகத்து நடுவில்நின்று கோலமயில் ஆடும்
கண்டதனில் களிப்புற்று கானக்குயில் பாடும் !

ஊனமுற்றோர் உலகெங்கும் குமுறிமனம் துடிப்பார்
உதவிடநல் கரங்கொண்டோர் வேதம்தினம் படிப்பார் !
மானமதை இழந்தவராய் மாக்களவர் கூட்டம்
மமதையுடன் போடுகின்றார் மண்ணிலிங்கு ஆட்டம் !

வேரறுந்த உறவுகளே ஊர்நிறைந்து வாழும்
பார்தொடுத்த போரினைப்போல் உறவுமுறை சூழும் !
தாரமதை தள்ளிவைத்து தனதின்பம் சேர்ப்பார்
தள்ளாடும் நிலைவரவே தாரம்கரம் கோர்ப்பார் !!

வெண்பா ..

கற்றநற் கல்வியினைக் கற்றதுவே புண்ணியமாய்
மற்றோர்க்கு மூட்டி மகிழ்கின்றார் - கற்பிக்கும்
பேராசா னன்னவரைப் போற்றா திருப்பார்க்கு
வாராது வாழ்வில் வளம்

வஞ்சித் தாழிசை ..




சுயநலம் முள்ளவர்
மயங்கிடப் பேசியே
இயங்குவார் தேர்தலில்
வியப்பிதே எங்கிலும் !

உயர்நிலை கண்டவர்
துயர்தர அஞ்சிடார்
பயனிலா ஆட்சியே
பயக்குதே எங்கிலும் !

நடைமுறை வாழ்விலே
கடைநிலை நம்மையே
குடைகிறா ரின்னமும்
இடைஞ்சலே எங்கிலும் !

வெண்பா

கன்னி யிளமனதில் காலூன்றி விட்டதனால்
பின்னி எடுக்கின்றார் பெற்றவரும் - என்னுயிரே
துள்ளித் திரிகின்றே னுன்னினைவால் என்னைநீ
அள்ளியே சென்றிடுவாய் ஆங்கு !

புதன், ஜனவரி 25, 2017

இன்னிசை வெண்பா !

இட்டமரு தாணியினா லீர்கர முஞ்சிவக்க
கட்டழகா ளேன்மறைத்தாள் தன்முகத்தை - இட்டமுந்தான்
தொட்டு அணைக்காதே தொல்லை யெனக்கூறுஞ்
சிட்டு மொழியினது சீர்!

வாழ்விலே ...


வெண்பா !





பார்வை யொளிர்கையிலே பாராது மாமறையை
சோர்வில் கிடப்போர்தாம் சேர்ந்துணர - ஆர்வமுடன்
தானும் நிதந்தொழுது தன்பார்வை குன்றியவர்
காணும் முறைதனைக் காண்!

வெண்பா !

வாழ்வு சிறக்குமென்று வாழ்ந்தாலும் வயிறாற
ஏழ்மை சிரிக்கிறதே ஏளனமாய் - தாழ்வினிலே
நாளுங் கிடந்தாலும் நம்பிக் கைதருமிக்
கூழுக் குழைப்பதொன்றே குறி!

வெண்பா !

கன்னங்க றுத்தவள்தான் கட்டழகுக் காரியவள்
தன்னந் தனியாக நின்றவளை - என்னருகே
அள்ளி யணைத்திடவா வென்றேன்பார் வந்தவளோ
எள்ளிநகை யாடினா ளேன்?

செவ்வாய், ஜனவரி 24, 2017

ஊடலுண்டோ !







நீரசையும் குளத்தினிலே நின்ற வாறு
நினைவிழந்து நிட்பதுமேன் அல்லிப் பாவாய்
நாரசையாப் பொழுதினிலும் சிரிக்கும் முன்னை
நோகடித்தா ராரென்று சொல்வா யல்லி

ஊரறியக் கதிரவனும் உதிக்கும் பொழுதில்
உலகமெலாம் ஒளிருகின்ற வேளை தன்னில்
பேரறியாப் பிள்ளைபோல் பதுங்கிப் பின்னே
படபடத்து நிட்பதுமேன் பகிர்வாய் அல்லி

மாலைவரும் மதியாளின் மயக்கும் மொளியில்
மலர்வதெனச் சொல்கின்றார் உண்மை என்ன
ஓலையுனக் கனுப்பினாளோ ஒற்றை வரியில்
ஓர்மனமாய் காதலுண்டோ சொல்வாய் அல்லி !

வெண்பா !






பச்சையிளம் பாலகியுன் பால்முகத்தி லட்சணமாய்
அச்சமிலாப் புன்னகைதா னார்ப்பரிக்க - நிச்சயமாய்
ஏழ்மை பொருட்டல்ல என்றோதும் பாங்கதனில்
வாழ்வாய்நீ வாழ்வாங்கு வாழ் !

வெண்பா !

ஓவியத்துத் தேனடையில் ஓடுகின்ற தேனதனை
நாவினிக்கத் தேடுவதேன் நோவினையே - ஓவியத்தின்
பூக்கள் மணக்குமெனப் பூரிக்குங் காதலதன்
தாக்கத்தை நெஞ்சில் தவிர்!

வஞ்சிப்பா !

தெருவோரமாய் இரப்போரையே
விருப்போடுநம் முகங்காணவே
பெரும்பாடுதான் படுகின்றவர்
ஒருநாள்சுமை ஒருவழிப்பட
காணும்

இரப்போ ரவரின் இன்னலைத் துடைத்து
நிரப்பம் மடைந்திட நிதமும்
இரக்கங் கொண்டே ஈவோ மவர்க்கே!

குறும்பா

நேத்தோடு நாலுமுறைப் பேச
ஆத்தாவே! அவள்மேல்தான் ஆச
கள்ளியவள் வருவாள்பார்
அள்ளிவைத்த மல்லிகைப்பூ

கூத்தாடுங் கூந்தல்மணம் வீச!

திங்கள், ஜனவரி 23, 2017

குறும்பா

தினந்தோறும் குடிப்பவன்தான் முத்து
சினமேறத் தினம்பிடிக்கும் பித்து
ராத்திரியில் வருபவ!னை
ராசாத்தி அவன்மனைவி

சினத்தோடு கேட்கவிழும் குத்து 

குறுங் கவிதை

நீ
இல்லாத தருணங்களில்
உன்னைப் போலவே
என்னோடு
பேசிக்கொண்டிருக்கின்றன
உன் கவிதைகள்
அதே மௌனத்தில் ....

வெண்கலிப்பா

பெருநடையில் கவியெழுதிப்
பெருங்குரலா லொலிக்காது
பொருள்செறிந்த கவிபாடப்
பெருகுமே புகழுலகில்
கருகொண்டக் கவிதைகளாய்க்
கமழவே நறுந்தமிழில்
தரும்பாடல் திகட்டாது தான் !

குறும்பா



கல்லூரி வாசலிலே கூட்டம்
எல்லோரின் முகத்திலுமே வாட்டம்

வந்திருந்த பெறுபேற்றில்
நொந்தவரே பலபேராம்

கல்லாமல் அலைந்ததனால் தேட்டம் !

ஹைக்கூ




எத்தனை முறை விரட்டினாலும்
உட்கார்ந்து செல்லத் தீராத ஆசை
ஆறாத புண்ணில் ஈ

வெண்பா

அன்னைக் குதவுதற்கோ ஆளாகிப் போனபின்னே
தன்னைத் தரப்படுத்த ஒத்திகையோ - சின்னவள்தான்
சிற்றிடையில் செம்பணைத்துச் சின்னக் கரமசைத்துப்
பற்றோடு போகுமெழில் பார் !

விருத்தம்



விருந்தென மதுவை வார்த்து
....விளித்திடும் நட்பே வேண்டாம்
மருந்தெனச் சொன்னால் கூட
.... மதுவினைத் தொடவே வேண்டாம்

அருந்திட ஆற்ற லேற்றும்
....அகன்றிடுந் துன்பம் மென்பார்
அருந்தியே ஆர்ப்ப ரித்தே
.... ஆறுதல் சொல்லிக் கொள்வார்


வருந்தியே கண்ணீர் சிந்தும்
.... அருந்தியோர் சொல்வ தெல்லாம்
வருத்திடும் பிணிகள் சேர்ந்து
.... வாழ்வதில் சாதல் மேலாம் !

குறுங்கவிதை

என்னதான் சொன்னாலும்
திரும்பிப் போவதாக இல்லை
பின்னாலேயே வருகிறது
உன் கடைசி வார்த்தை ...

கட்டளைக் கலிப்பா



ஏற்றம் பெற்றவ ரென்கிறோம் நாளெலாம்
ஏனோ யெம்மிடை இத்தனை இன்னலோ
போற்று முள்ளமும் பாங்குட னின்றியே
போற்றார் போலவே வாழ்கிறோ மெங்கிலும்
ஏற்றத் தாழ்வினை எத்தனை காலமாய்
என்றும் நம்மிடை கொண்டுமே வாழ்வது ?
மாற்ற மில்லையேல் மண்ணிலே நாமெலாம்
மாக்கள் போலவே வாழ்கிறோ முண்மையே !



( அரையடி ; தேமா - கூவிளம் - கூவிளம் கூவிளம் )

இன்னிசை வெண்பா

பூக்காரி யின்மகளைப் பூங்காவில் கண்டவேளைப்
பூக்காது போனாளேன் புன்னகையைத் - தாக்கந்தான்
ஆத்தா ளருகென்றோ அன்றி அவளென்னை
மூத்தோ னெனவறிந்தோ கேள் !

வியாழன், ஜனவரி 19, 2017

கொஞ்ச ... வா !


துயரங்கள் .....


கலித்தாழிசை


கலிவிருத்தம்


செந்தா .. மரையே !


நினைவோடு ....


புதன், ஜனவரி 18, 2017

நட்பு !



வஞ்சிப்போர் கொண்டாடும் நட்பும் உண்டு
நஞ்சாகிப் போனபல நட்பும் உண்டு

கொஞ்சலிலே குளிர்காயும் நட்பும் உண்டு
மஞ்சம்கு ளித்தணைந்த நட்பும் உண்டு

வெஞ்சினத்தால் வெந்தவிழ்ந்த நட்பும் உண்டு
நெருஞ்சியெனக் குத்துகின்ற நட்பும் உண்டு

அஞ்சலித்துப் போற்றுகின்ற நட்பும் உண்டு
அஞ்ஞரினா லழிந்தொழிந்த நட்பும் உண்டு

சஞ்சலத்தி லுயிர்துறந்த நட்பும் உண்டு
நெஞ்சகத்தைத் தாலாட்டும் நட்பும் உண்டு !

இயல் தரவினைக் கொச்சகக் கலிப்பா





பற்றைப் படர்ந்திருக்கப் பால்நிலவும் பாய்விரிக்க
ஒற்றையடிப் பாதையிலே ஓரிரவு நாமிருவர்
ஒற்றையிலே நின்றதையே ஒட்டநின்று பார்த்தவரார்
சற்றே கசிந்துவிடச் சாதிசனங் கண்திறக்க
உற்றா ரெனைக்கேட்க ஊருசன மும்சிரிக்கச்
சொற்கலக மாகியதே சொல்லாத சொல்லுமெழ
முற்று மிழந்தேனே மூச்செல்லா முன்னினைவே
பற்றோ டிருப்பவளைப் பாராயோ என்னுயிரே !

எங்கும் கண்டேன் ...



குழுமத்தில் பகிரப்பட்ட சிறந்த மானிடவியல் கவிதைகளில் ஒன்றாகவும் சீர்மை கவிதைகளில் சிறந்ததாகவும் அஷ்ஃபா அஷ்ரஃப் அலி அவர்களின் கவிதை தெரிவு செய்யப் பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.
கவிஞருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்



Ashfa Ashraf Ali‎ to படைப்பாளிகள் உலகம் TAMIL CREATORS

December 16, 2015 ·

இற்றரையில் வாழுகின்ற
அற்பர்களைக் கண்டேன்
இழிநிலையில் வாழுமவர்
இழிவதனைக் கண்டேன்

அற்றார்தான் தெருவெங்கும்
படுத்துறங்கக் கண்டேன்
அவலத்தின் விளிம்பினிலே
அவர்கள்நிலை கண்டேன்

கொற்றவர்கள் கொந்தளிப்பில்
குடும்பங்களைக் கண்டேன்
கொள்கையிலே மாறாட்டம்
கொண்டவரைக் கண்டேன்

புற்றீசல் போலஎழும்
பொல்லாங்கைக் கண்டேன்
புள்ளிமானின் வடிவினிலே
அவளையும்நான் கண்டேன் ..

பகலெல்லாம் படுத்துறங்கும்
பக்தர்களைக் கண்டேன்
புல்லனென நள்ளிரவில்
பதுங்குமவர் கண்டேன்

இகத்தினிலே ஏழைகளின்
இன்னல்களைக் கண்டேன்
ஈயாதோர் நெஞ்சினிலே
ஈரமில்லை கண்டேன்

சிகரத்தின் அளவின்மேல்
விலையேற்றம் கண்டேன்
சிரிக்கின்ற உதடுகளின்
சிந்தைஅழக் கண்டேன்



நிகழாத நிகழ்வெல்லாம்
நித்திலத்தில் கண்டேன்
நிலவுமகள் புன்சிரிப்பை
நித்தமும்நான் கண்டேன் ...

தரவு கொச்சகக் கலிப்பா




வருவாய்நீ யெனநாளும் வழிமீது விழிவைத்துப்
பெருமூச்சு விடுகின்றேன் பெருவாழ்வு தருகவென
ஒருபோது முனைமறவேன் உயிரேவுன் தடந்தொட்டு
வரும்பாதை தனைப்பார்த்து வயதேறப் பதறுகிறேன்

ஆதலினால்

உயர்வாம் காதலை உயர்வெனப் போற்றித்
துயர்க ளிலாமல் தூய்மையுங் கொண்டே
உயர்வாய் வாழ்வோ முலகில்
இயம்பிடு ஒருசொல் இன்மொழி கொண்டே !

காற்றே !



வையம் எங்கும் உன்பெயரில்
வைதல் லில்லை உணர்வாயோ
பையில் இட்டே வைப்பதெனில்
கையிற் கொண்டே நடந்திடுவோம்

பெய்யும் மழைக்கும் துணைநின்று
மையம் மிட்டும் நின்றிடுவாய்
மெய்தா னுலகில் நீயின்றி
ஐயோ ! உலகில் வாழ்வேது !

எங்கும் மெதிலும் உன்ஓட்டம்
பங்கில் பாதித் துள்ளுதடி
அங்கம் மசைத்து அடிவைத்து
பங்கம் செய்தேன் மகிழுகிறாய்



வங்கக் கடலில் உன்ஆட்டம்
நீங்கா நினைவில் நிற்குதடி
சங்கம் வைத்தோ சதிசெய்தாய்
புங்கக் காற்றே பதில்சொல்லு !!

குறும்பா



மடித்துவைத்த துணிமணிகள் கூட்டி
படித்துறைக்கு குளிக்கவந்தாள் பாட்டி

எடுத்துவைத்த புடைவையொன்றில்
படுத்திருக்க புடையனொன்று

படித்துறைக்குள் பாய்ந்தாள்மூ தாட்டி !

ஞாயிறு, ஜனவரி 15, 2017

கலிவிருத்தம்



புளிமா - கூவிளம் - கூவிளம் – கூவிளம்



இயன்ற வாரெலாம் ஈகையே மேலெனத்
துயரி லாழ்ந்தவர் துன்பமே போக்குதல்
பயக்கும் நன்மைகள் பற்பல தோழரே
துயர்து டைப்பதைத் தொண்டெனக் கொள்கவே !

கலித்தாழிசை



கலித்தாழிசை ; 1.


நேற்றுவரை நீயிருந்த நேர்ச்சியினை நானிழந்துக்
காற்றடித்துப் போனதுபோல் கலங்குகிறே னென்னுயிரே
ஊற்றெடுத்து வருந்துயரோ ஊருசனம் வம்பளக்கத்
தேற்றவரு வாரின்றித் தெம்பிழந்து நிற்பவளை
ஏற்றமுடன் ஏந்திவிடு ஏக்கமுற நிற்பவளை !

கலித்தாழிசை ; 2.


காத்திருந்து காத்திருந்து கண்ணுறங்க வில்லையடி
பூத்திருக்குங் காதலினால் பூவிழியுன் னெண்ணமடி
காத்திருக்க வேண்டுமெனில் காலமெலாங் காத்திருக்கப்
பூத்திருக்கு காதலெனப் பூவிதழால் புன்னகைத்தா லாகாதோ ?

தாயே உன் குரலில் ..



நூலாடுஞ் சேலையிலே நோகாதி ருக்கவெனக்
காலாட்டி நாங்கிடந்துக் கண்ணாற உறங்கிவிடத்
தாலாட்டுப் பாடுகிறத் தாயேவுன் தாழ்குரலே
மேலாக வந்தெனது மென்காதில் இனிக்கிறதே
மெய்நோகக் கிடக்கின்றாய் மென்மேலு மினிக்கிறதே !

தொட்டா லாருமெனைத் தோல்நோகு மெனவறிந்துக்
கட்டாந் தரையினிலே கால்நோகக் கிடந்தபடிப்
பட்டா லெவர்கண்ணும் பட்டுவிடா மற்பாட
இட்டமுடன் தொட்டிலிலே இனித்திடுமே உன்குரலை
இனியெங்கு கேட்பேனோ நினைத்தாலே இனிக்கிறதே !

விருத்தம்



விழுதுகள் போலுள உறவுக லெல்லாம்
வீணெனச் சிதறிக் கிடக்கை யிலே
அழுதவன் பாதி தொழுபவன் மீதி
அமைதி யிலாமலே வாழுகி றான்

கழுகுகள் போலக் காமுக ரிங்கே
கால்களுக் கடியில் கிடக்கை யிலே
மெழுகுகள் போல மழலைக ளுயிர்கள்
அழுகைக ளூடே கரையு திங்கே

இழுபறி யாகும் இழிநிலை ஏனோ
இகத்தினில் கிடந்து சிரிக்கை யிலே
வலுவினி லுள்ளோர் வாய்களை மூடி
வாழ்வதைக் காண வருஞ் சினமே !

காப்பியக் கலித்துறை


தேமா - புளிமா- புளிமாங்கனி - தேம - தேமா



தன்னந் தனியே தவித்தேமனத் துள்நி னைக்க
அன்னை மொழியால் அணைத்தேயிறு கப்பி டித்து
கன்னித் தமிழே கனிந்தேயெனக் குள்கு விந்தே
என்னைத் தொடவே இதமாய்வரும் பாட லெல்லாம்!

சனி, ஜனவரி 14, 2017

விருத்தம்




சிந்தா திருந்தேன் சிரசில் கிடந்தவன் சிந்தையிலே
தந்தே னெனையே தருவானே வாழ்வைத் தயக்கமின்றிப்
பந்தா யுருட்டிப் பனிபோ லுருகிடப் பாய்விரிக்க
நொந்தே னவனால் நொறுங்கிய நெஞ்சினில் நோவினையே!

வெள்ளி, ஜனவரி 13, 2017

கட்டளைக் கலித்துறை

சிந்தா திருந்தேன் சிரசில் கிடந்தவன் சிந்தையிலே
தந்தே னெனையே தருவானே வாழ்வைத் தயக்கமின்றிப்
பந்தா யுருட்டிப் பனிபோ லுருகிடப் பாய்விரிக்க
நொந்தே னவனால் நொறுங்கிய நெஞ்சினில் நோவினையே!

எண்சீர்க் கழிநெடிலடி விருத்தம்



காய் - காய் - மா - தேமா


சொற்புலமை யில்லாமல் சொற்ப காலம்
சொந்தமொழி நடையினிலே கதைகள் போலப்
பற்பலவாய் கவிதைகளைப் பாடித் தேய்ந்து
பைந்தமிழின் சோலையிலே புகுந்தேன் பின்னே
கற்றவராம் பாவலரின் கவிதைத் தொண்டு
கைகொடுத்து உதவுதென்னில் கைமுறை யாலே
நற்றமிழின் நடையழகை நேர்த்தி யோடே
நடந்தபடி கற்கின்றேன் நாளு மங்கே !

எழுசீர் விருத்தம்





மா - மா - மா - மா
மா - மா - மா


நெருப்பா யெரியும் நெஞ்சில் கிடந்து
நேசங் காட்டுங் கிளியே
விருப்பம் முன்னில் விரைந்தே சொல்ல
வீட்டா ரென்னை எதிர்க்க
தருக்கஞ் செய்தா லடியும் முதையும்
தாங்கா துடலென் னன்பே
பொருத்தம் மின்றி முடித்தே வைத்தார்
பொல்லா தவரென் னப்பா !

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்



விளம்- மா - விளம் - மா
விளம் - விளம் – மா

தன்னிக ரற்றத் தமிழ்மொழி தன்னில்
தாகமென் றுரைப்பவ ரிங்கே
அன்னியர் மொழியை அவரவர்க் குள்ளே
அழகுடன் மொழிவதைக் காண
இன்புற லின்றி இகழ்வதிம் மொழியை
இகழ்வது அன்னையைப் போன்றே
என்பதை யுணரா திருப்பவ ரவரை
என்றுமே எண்ணிடச் சினமே!

இலங்கை வானொலியில் எனது கவிதை


அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்




காய் - காய் - காய் - காய் - மா - தேமா

கருவறுக்கு மெண்ணமுளோர் காழ்ப்புணர்வு கொண்டவரே
கணிசம் மிங்கே
பெருகிவரும் பேதமையால் பேரிடியாய்த் தொடர்கிறதே
பொல்லாங் கிங்கே
ஒருவயிற்றுப் பிள்ளைகளும் அண்டையயல் வாழ்பவரும்
ஒன்று பட்டால்
உருக்குலைந்த ஒற்றுமையைக் காத்திடலாம் ஒருவாறாய்
உலகி லின்றே

அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம்



காய் - காய் - காய் - காய் - மா - தேமா





விரும்பியவா றெல்லாமிப் பூவுலகில் பொல்லாதார்
விளைக்குந் துன்பம் 
தருக்குடையா ருள்ளத்தில் தூய்மையிலா எண்ணத்தால்
தளிர்க்குந் துன்பம்
திரும்புகின்ற இடமெல்லாந் தீவினையைக் காணுகையில்
தீயாய் என்றன்
இதயத்தைச் சுடுகிறதே இருவிழியும் நனைகிறதே
இறைவா இங்கே!

அறுசீர் விருத்தம்

கருவறை தொட்டுக் கல்லறை வரையுங்
களிப்பினில் வாழ்வதற்கே
விரும்பிய படியே வாழ்ந்திடு வென்று
விழிகளைப் படைத்தவனாம்
தரும்வளம் யாவும் தரணியி லிங்கே
தரமெனத் தந்தவனாம்
அருள்மிகும் இறைவன் ஆற்றலை இங்கே
அறிந்திட ஆளிலையே !

விருத்தம்





நீரசையும் குளத்தினிலே நின்ற வாறு

நினைவிழந்து நிட்பதுமேன் அல்லிப் பாவாய்

நாரசையாப் பொழுதினிலும் சிரிக்கும் முன்னை

நோகடித்தா ராரென்று சொல்வா யல்லி


ஊரறியக் கதிரவனும் உதிக்கும் பொழுதில்

உலகமெலாம் ஒளிருகின்ற வேளை தன்னில்

பேரறியாப் பிள்ளைபோல் பதுங்கிப் பின்னே

படபடத்து நிட்பதுமேன் பகிர்வாய் அல்லி




மாலைவரும் மதியாளின் மயக்கும் மொளியில்

மலர்வதெனச் சொல்கின்றார் உண்மை என்ன

ஓலையுனக் கனுப்பினாளோ ஒற்றை வரியில்

ஓர்மனமாய் காதலுண்டோ சொல்வாய் அல்லி !

அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம்



கலையெழிற் பெண்ணின் கருவிழி காணக்
... கற்பனை சிறகடிக்கும்
வளைக்கரந் தொட்டு வார்த்தைகள் பேச
... வாஞ்சையில் வாய்துடிக்கும்
அலையெனப் பொங்கும் ஆவலி லிதயம்
... அடிக்கடி துடிதுடிக்கும்
நிலையினை அறிந்து நிம்மதி யற்று
... நினைவுகள் சோர்ந்திடுமே


-





( விளம் - மா - விளம் -மா - விளம் - காய் )

ஆசிரிய விருத்தம்



ஆசிரிய விருத்தம் ;


வருமிடர் வாசல் வந்து
வகையெனக் கிடந்திட் டாலும்
வரும்படி எதுவும் மின்றி
வாழ்வினில் நொந்திட் டாலும்
பருவமென் உடலைத் தீண்டிப்
பாலுணர் வெழுந்திட் டாலும்
அருவருப் பெதிலும் மென்றும்
அளைந்திட மாட்டேன் தாயே







------------------------------------


ஆசிரிய விருத்தம் :


நண்டுகள் நடந்தே சென்ற
நடையினை மணலே சொல்ல
தென்படு மிடங்க ளெல்லாந்
தென்றலுந் தவழ மெல்ல :
கண்ணெதிர் கனவில் மூழ்கிக்
காதலர் தழுவல் கிள்ள
வெண்மணல் தனிமை என்னுள்
வெறுமையில் நினைவில் நீயே





விளம் - மா - தேமா
விளம் - மா - தேமா


ஆசிரியத் தாழிசை

வன்புணர் வாளரே வழியினி லெங்கும் 
என்மக ளுனைநான் எண்ணியே கவலை 
கண்மணி கவனங் காமுக ரெதிரிலே
குழவிக ளாயினும் குமரிக ளாயினும்
சுழலுங் காமச் சுடரில் குளித்திடக்
குழந்தாய் ! குதறுங் கூட்டம் எதிரிலே

அயலவர் நெஞ்சிலு மண்டி விடாதே 
துயர்தரத் தயங்கார் தூண்டிட காமம் 
அயர்ந்து விடாதே அல்லல் லெதிரிலே

புதுக் கவிதை

ஏறி
இறங்கி விட்டேன்
எல்லா வரிகளிலும்
என்னை
எந்த வரியில் வைத்தாய்
உன் கவிதையில் …